என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி மலை ரெயில் குன்னூரில் இருந்து உதகமண்டலம் வரை நாளையில் இருந்து இயக்கப்படும் எனத் தகவல்கள் வெளியானது குறித்து ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
    ஊட்டி மலை ரெயில் நாளையில் இருந்து மீண்டும் இயக்கப்படுகிறது என மீடியாக்களில் செய்திகள் வெளியானது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்டம், மீடியாக்களில் வெளியான செய்திகள் போன்று சேவை நாளையில் இருந்து சேவை தொடங்கப்படவில்லை. அப்படி தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தகவல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் அட்டைகளில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற ரேஷன் கடைகளுக்கு வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பயோ மெட்ரிக் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளுக்கு பொருட்களை பெற செல்லும் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றில் ஒன்றினை தவறாமல் எடுத்து செல்ல வேண்டும். பயோமெட்ரிக் முறை அங்கீகரிக்கப்படவில்லை என்றால், அவரது செல்போனுக்கு ஒரு முறை கடவு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை ரேஷன் கடை விற்பனையாளரிடம் தெரிவித்து பொருட்களை பெற்று செல்லலாம்.

    ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் அல்லது ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்ட செல்போன் எண் இல்லை எனில் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று தங்களிடம் தற்போது உபயோகத்தில் உள்ள செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான உரிம பொருட்களை பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்து உரிய பதில் நபர்களுக்கான விவரங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அந்த நபர் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணில் பெறப்படும் ஒரு முறை கடவு சொல் மூலம் பொருட்களை பெற அனுமதித்து உத்தரவிட்ட உடன், பொருட்களை பெறலாம்.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர் தவிர மற்றவர்கள் இந்த வசதியை தேர்வு செய்ய அனுமதி இல்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின்படி தமிழகம் தவிர பிற மாநிலத்தை சார்ந்த ரேஷன் அட்டைதாரர்கள் தமிழகத்தில் பொது வினியோக திட்ட பொருட்களை பெற இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான அரிசி கிலோவுக்கு ரூ.3, கோதுமை கிலோவுக்கு ரூ.2 என தொகை செலுத்தி பொருட்களை பெற்று செல்லலாம். இத்திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு நீலகிரி ரேஷன் அட்டைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    கூடலூர் அருகே லாரி மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனுமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பா. இவரது மகன் ரஞ்சித் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் பிரவீன் (22). 2 பேரும் நண்பர்கள் ஆவர். மேலும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் ரஞ்சித், பிரவீன் ஆகியோர் நடுவட்டம் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார்.

    பின்னர் நடுவட்டம் சென்று விட்டு இரவு 9 மணி அளவில் அனுமாபுரம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஊட்டியில் இருந்து கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் வழியாக கேரளாவுக்கு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தலைகுந்தா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (55) என்பவர் ஓட்டினார். லாரி அனுமாபுரம் பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

    விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் மற்றும் பிரவீன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சுற்றுலா பயணிகளை கவருவதற்காக ஊட்டி படகு இல்லத்துக்கு டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களில் புதிதாக 50 படகுகள் வரவழைக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. ஊட்டி, பைக்காரா படகு இல்லங்களில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடி சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். ஊரடங்கு உத்தரவால் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டதால் 6 மாதங்களுக்கும் மேலாக படகு இல்லங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் படகுகள் நீண்ட நாட்களாக ஓய்வு எடுத்து வருகின்றன. சுற்றுலா பயணிகளை நம்பி அங்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டதை போல் படகு இல்லங்களும் திறக்கப்படுமா என்று வியாபாரிகள், தொழிலாளர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்கிடையே படகு இல்லத்தில் மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஊட்டி படகு இல்லத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே செல்வதால் சுற்றுலா பயணிகளை கவர புதிய வடிவிலான படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னையில் வடிவமைக்கப்பட்ட 2 துடுப்பு படகுகள், 7 மிதி படகுகள் என 9 படகுகள் ஊட்டி படகு இல்லத்துக்கு முதல் கட்டமாக எடுத்து வரப்பட்டன. டிராகன், வாத்து, மயில், தவளை போன்ற உருவங்களை தத்ரூபமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட படகுகள் வந்து உள்ளது. இன்னும் புதிய படகுகள் வரவழைக்கப்பட இருக்கிறது.

    படகு இல்லத்தில் நடைபாதை ஓரங்கள், மலர் பாத்திகளில் பல வகையான செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர பூந்தொட்டிகளில் மலர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. படகு சவாரியின் போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க ஏரியின் நடுவே செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து மேல்நோக்கி சுற்றிலும் தெளிக்கிறது. படகு இல்லத்தை மேம்படுத்தும் மற்றும் பொலிவுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் பைக்காரா படகு இல்லத்துக்கு புதிய படகுகள் வரவழைக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேஷ் கூறும்போது, ஊட்டி படகு இல்லத்துக்கு புதிதாக 50 படகுகள் வரவழைக்கப்படுகிறது. முதல் கட்டமாக 9 படகுகள் வந்து உள்ளன. அதேபோல் பைக்காரா படகு இல்லத்துக்கும் புதிதாக 6 படகுகள் கொண்டு வரப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
    ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரெயில் இயக்கப்படுகிறது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் மலை ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டும் நீலகிரியில் இயல்புநிலை திரும்பாமல் இருந்தது. தற்போது ஒரு மாதமாக பூங்காக்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இ-பாஸ் நடைமுறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரெயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயிலை இயக்க நீலகிரி கலெக்டர் அனுமதித்து உள்ளார். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் மலை ரெயில் இயக்கப்பட உள்ளது.

    குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட்டு கேத்தி, லவ்டேல் வழியாக 9 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு குன்னூரை சென்றடையும். குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 1.50 மணிக்கு வந்தடையும். தொடர்ந்து ஊட்டியில் இருந்து 2 மணிக்கு புறப்பட்டு குன்னூரை மாலை 3.10 மணிக்கு சென்றடையும். மாலை 4 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு 5.15 மணிக்கு ஊட்டியை வந்தடையும். ஊட்டியில் இருந்து 5.30 மணிக்கு புறப்பட்டு 6.40 மணிக்கு குன்னூரை சென்றடையும். நீலகிரியில் மலை ரெயிலில் பயணிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இந்த மலை ரெயில் சேவையை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரயில் தினமும் இயக்கப்படுகிறது. ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் இயக்குவது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்து உள்ளது.

    ஊட்டி அருகே திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூரில் உள்ள ஒரு தனியார் தேயிலை எஸ்டேட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தயானந்தன்(வயது 31). இவர் எஸ்டேட் நிர்வாகம் அளித்த குடியிருப்பில் தங்கி இருந்தார். இதற்கிடையே தயானந்தனுக்கும், மேலூர் ஒசட்டி கிராமத்தை சேர்ந்த வினோதினி(21) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரும், மேற்கண்ட தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி இருந்தனர். மேலும் தினமும் வழக்கம்போல் தயானந்தன் வேலைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் நேற்று காலை எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்கள் தயானந்தன் வசிக்கும் வீடு பூட்டி கிடப்பதை பார்த்தனர். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் சந்தேகம் அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தயானந்தன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோர் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், புதுமந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து புதுமந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊட்டி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) குதுரத்துல்லாவும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில் புதுமண தம்பதி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கூடலூரில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனியார் வணிக நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடலூர் நகரில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சரிவர முகக்கவசம் அணியாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இனிமேல் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ‘சீல்’ வைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இதையடுத்து கூடலூர் நகரில் உள்ள மற்றொரு வணிக நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    அதன்பின்னர் அபராத தொகையை அந்த நிறுவன உரிமையாளர், நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினார். மேலும் இனிமேல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, கொரோனா அச்சமின்றி வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
    செம்மண்வயலில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.
    ஊட்டி:

    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தங்களது கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதன்படி நெல்லியாளம் அருகே உள்ள செம்மண்வயல் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    செம்மண்வயல் காலனியில் பழங்குடியின மக்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு சிமெண்டு, ஜல்லி, மண் போன்ற கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இந்த பாதையை சீரமைக்க நெல்லியாளம் நகராட்சியிடம் மனு அளித்தோம். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க மின்கம்பங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பாதை சரியாக இல்லாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு திட்டத்தில் கட்டப்படும் எங்களது வீட்டு வேலை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கால விரயம் மற்றும் பணம் விரயம் ஏற்படுகிறது. எனவே வீடுகளுக்கு செல்ல சரியான பாதை அமைக்கவும், மின்கம்பங்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. ஊட்டி எல்க்ஹில் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எல்க்ஹில் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி சரிவர இல்லை. நகராட்சி மூலம் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே கழிப்பிடங்களை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த சுற்றுலா பயணிகள் 3 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறினால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

    பணியாளர்கள் சுற்றுலா பயணிகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த சுற்றுலா பயணிகள் 3 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    கோத்தகிரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காம்பாய்க்கடை பகுதியை சேர்ந்தவர் தசரதன்(வயது 38). அரசு பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சசிகலா(30). இவர்களுக்கு 12 வயது மகனும், 11 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தசரதன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தசரதன், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் கோபத்தில் படுக்கை அறைக்கு சென்று, உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். இரவு 10 மணி ஆகியும் அறைவிட்டு அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த சசிகலா, அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்தார். ஆனால் கதவை அவர் திறக்கவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது தசரதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சசிகலா கதறி அழுதார். பின்னர் கோத்தகிரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதுமலை புலிகள் காப்பக சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மற்றும் கூடலூர் வனப்பகுதியில் காட்டுயானைகள், மான்கள், புலிகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், செந்நாய்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்து செல்வதால் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விவசாய பயிர்கள் மற்றும் வீடுகள் காட்டுயானைகளால் தாக்கப்பட்டு சேதம் அடைந்து வருகிறது. சமீபகாலமாக ரேஷன் கடைகளை காட்டுயானைகள் தாக்கி சேதப் படுத்தி வருகிறது.

    ஆனால் முதுமலை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனமாக உள்ளது. இங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கூடலூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலையும், முதுமலையில் இருந்து தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு மாநில நெடுஞ்சாலையும் செல்கிறது. இதனால் பொதுமக்கள், டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் மேற்கண்ட சாலைகளில் பயணம் செய்து வருகின்றனர். அந்த சாலையோரத்தில் மாயாறு ஆறு ஓடுகிறது. இதனால் வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளை கடந்து மாயார் ஆற்றில் தண்ணீர் குடிக்க சென்று திரும்புவது வழக்கம்.

    இந்த சமயத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களில் சில வாகன ஓட்டிகள் ஈடுபடுவது உண்டு. இதனால் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பத்தில் கொரோனா தொற்று பரவலால் தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால் இயல்புநிலை மெதுவாக திரும்பி வருகிறது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டமும் சாலையோரங்களில் அதிகரித்துள்ளது. இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துதல், வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தல் போன்றவற்றில் வாகன ஓட்டிகள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களாக பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் குளங்கள், குட்டைகளில் நீர் நிறைந்து காணப்பட்டது.

    மேலும் பசுந்தீவன தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இதனால் காட்டுயானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடர்ந்த வனத்துக்குள் முகாமிட்டு இருந்தன. தற்போது பருவமழை குறைந்து விட்டதால் குளங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மாயார் ஆற்றுக்கு தண்ணீர் குடிக்க அதிகளவு வருகிறது. அப்போது சாலைகளை வனவிலங்குகள் கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    குந்தலாடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குந்தலாடி அருகே உள்ள கடலைக்கொல்லி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் கரியன். இவரது மகன் அனீஸ்(வயது 20). இவர் கொளப்பள்ளியில் இருந்து பாட்டவயல் செல்லும் இணைப்பு சாலையில் உள்ள பாலவயல் பகுதியில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து சேரம்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×