என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்தபடம்.
    X
    பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தபோது எடுத்தபடம்.

    பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனியார் வணிக நிறுவனத்துக்கு ‘சீல்’

    கூடலூரில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காத தனியார் வணிக நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதை மீறும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடலூர் நகரில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை 11 மணியளவில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சரிவர முகக்கவசம் அணியாமலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு ‘சீல்’ வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இனிமேல் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைபிடிப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் ‘சீல்’ வைக்கும் முடிவை அதிகாரிகள் கைவிட்டனர்.

    இதையடுத்து கூடலூர் நகரில் உள்ள மற்றொரு வணிக நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    அதன்பின்னர் அபராத தொகையை அந்த நிறுவன உரிமையாளர், நகராட்சி அலுவலகத்தில் செலுத்தினார். மேலும் இனிமேல் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட ‘சீல்’ அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, கொரோனா அச்சமின்றி வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×