என் மலர்
நீலகிரி
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பென்ஸ்டாக். இப்பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் தங்குவது வழக்கம்.
தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் விடுதி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இப்பகுதிக்கு வந்த காட்டு யானை ஒன்று விடுதியின் கேட்டை உடைத்து தள்ளியது. நீண்ட நேரம் அந்த வளாகத்திலேயே முகாமிட்ட யானை இங்கிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
பென்ஸ்டாக்கை ஒட்டியுள்ள கெத்தை பெரும்பள்ளம், உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக 2 குட்டிகளுடன் 8 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் கெத்தை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நாசம் செய்வதும், மஞ்சூர் கோவை சாலையில் ஆங்காங்கே சென்று அந்த வழியாக வரக் கூடிய பஸ்கள், தனியார் வானங்களை வழிமறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை ஒன்று தான் இந்த விடுதியின் முகப்பு கேட்டை உடைத்து தள்ளியுள்ளது. இதைதொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் வனவர் ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் பென்ஸ்டாக் கெத்தை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிதது வருகிறார்கள்.
குட்டிகளுடன் நடமாடும் யானைகள் பெரும்பள்ளம் பகுதியில் இருந்து முள்ளி வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்து சென்ற நிலையில் ஒற்றை காட்டு யானை மட்டும் கெத்தை சுற்றுப்புற பகுதிகளில் நடமாடி வருவதாக தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மஞ்சூர் காத்தாடிமட்டம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 14 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறையினர் வகுப்பறை முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர். இதேபோல் மஞ்சூர் மேல்முகாமில் மின்வாரிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாய்கிஷோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் மின்வாரிய ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். முள்ளிமலை, கீழ்குந்தா, உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து சுகாதார நடவடிக்கைளை தீவிரப்படுத்தினர்.
ஊட்டி:
தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி ஊட்டி எச்.பி.எப்.பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மாலை திறப்பு விழா நடைபெற்றது.
மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் ஊட்டியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பிலேயே மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இன்று திறப்பு விழா காணக் கூடிய இந்த மருத்துவ கல்லூரியில், மருத்துவமனை வளாகம், மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் என 3 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாக மானது 19 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் 8 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. இதில் தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறை, மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கான 1,200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 108 வாகன கட்டுப்பாட்டு அறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவமனை அலுவலக கட்டிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவு அருந்தும் அறை, கழிப்பறையும் அமைந்துள்ளது.
இதுபோக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ, மாணவிகளுக் கான ஆசிரியர் தொகுதி கட்டிட மும் 3 பிரிவுகளாக 9,438 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.
இதில் மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதற்கு தேவையான நூலக கட்டிடம், மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும், குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ முதல்வர் குடியிருப்பு, குடிமை மற்றும் துணை குடிமை மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் விடுதி கட்டிடம், மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதி என அனைத்து அம்சங்களும் நிறைந்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் மலைப் பிரதேசத்தில் அமைய உள்ள 2-வது அரசு மருத்துவ கல்லூரி இதுவாகும். ஏற்கனவே இமாசல பிரதேச மாநிலத்தில் மலைப்பகுதியில் இதுபோன்று அரசு மருத்துவ கல்லூரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 121 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே தெரு அல்லது பகுதியில் 3 பேருக்கு தொற்று உறுதியானால் அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தற்போது வரை ஊட்டியில் 16 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் தினந்தோறும் சுகாதார பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி புதுமந்து போலீஸ் குடியிருப்பில் உள்ள 5 போலீசார் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து போலீஸ் குடியிருப்பில் வசிக்க கூடிய 50 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த முடிவுகள் விரைவில் வர உள்ளது. மேலும் அந்த பகுதியை தனிமைப்படுத்தி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு, கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-
நீலகிரியில் கொரோனா பாதிப்பு உறுதியாகி லேசான அறிகுறிகளுடன் உள்ள 173 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நீலகிரி திரும்பிய 121 பேர் 7 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் 32 பேர் தவிர்த்து மீதமுள்ள அனைவருக்கும் 8-வது நாள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
தற்போது நோய்பரவல் அதிகமாக உள்ளதால் தினமும் 1,500 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்தமாதம் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி திருவள்ளுவர் தினம், 18-ந் தேதி வள்ளலார் நினைவு நாள், 26-ந் தேதி குடியரசு தினம் ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு மதுபான விதிகளின் படி டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது.
மேற்கண்ட நாட்களில் கட்டாயம் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்புகள், ஓட்டல் பார்கள் மற்றும் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.
இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதாக தகவல் தெரிந்தால் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை 0423-2223802 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






