என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் கரோலினா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யாரோ மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிக்க அவுட்டுக்காய் வெடியை வைத்துள்ளதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி:

    குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் வன பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் உள்ளன.

    இங்கு கரடி, சிறுத்தை, காட்டாடு, காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் வன பகுதிகளிலிருந்து ஊருக்குள் உணவை தேடி வருவது வழக்கம். அவ்வாறு வரும் காட்டு பன்றி, காட்டாடு போன்றவற்றை பிடிக்க சில சமூக விரோதிகள் அவுட்டுக்காய் என்ற வெடி பொருளை இந்த விலங்குகள் சாப்பிடக்கூடிய உணவுக்கு அடியில் வைத்து விடுவார்கள்.

    இதனை வன விலங்குகள் சாப்பிட்ட உடன் வாய் மற்றும் தலை வெடித்து சிதறும். பின்னர் இதன் உடல்களை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.

    இந்நிலையில் குன்னூர் கரோலினா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யாரோ மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிக்க அவுட்டுக்காய் வெடியை வைத்துள்ளதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவுட்டுக்காய் வெடியை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.

    பாலீஸ் போடுவதாக கூறி நகையை அபேஸ் செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஊட்டி:

    கோத்தகிரி கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.  இவரது மனைவி நளினி (37)இவர்  தனது வீட்டில் நேற்று  வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர்  நகைகளை பாலீஷ் செய்து தருவதாக நளினியிடம் கூறினர். 

    நளினியும் அதனை நம்பி முதலில் மோதிரத்தை மட்டும் பாலீஷ் செய்ய கொடுத்தார்.  அதனை பாலீஷ் செய்து காண்பித்துவிட்டு, வேறு நகை இருந்தால் கொடுங்கள், அவற்றையும் பாலீஷ் செய்து தருகிறோம் என அவர்கள் கேட்டனர். 

    இதைத்தொடர்ந்து மூன்றே கால் பவுன் செயின், இரண்டே கால் பவுன் தங்கத் தாலியையும் அவர்களிடம் பாலீஷ் போட கொடுத்தார். 

    அப்போது, அவர்கள் சுடுநீர்  கேட்டதையடுத்து, நளினி வீட்டுக்குள் சென்று சுடுநீர் கொண்டுவந்து வெளியில் பார்க்கும்போது பாலீஷ் செய்ய வந்த 2 பேரும் நகைகளுடன் தப்பிச் சென்றனர். 

    இதைத்தொடர்ந்து, நளினி அளித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்  வேல்முருகன் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். 

    மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிராமத்தில் பகல் நேரத்தில் பாலீஷ் போடுவதாக நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    தேனாடு ஊராட்சியில் நடைபெறும் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
    ஊட்டி:

     நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், தேனாடு ஊராட்சியில் ரூ.90  லட்சம் மதிப்பில் கடச்சோலை முதல் செடிகல் வரை மேம்படுத்தப்படும் சாலை பணிகளை  கலெக்டர்  அம்ரித்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடினார். 

     தமிழக அரசால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசு தொகுப்பு, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட  கலெக்டர் கேட்டறிந்து, குடிநீர், மின்சாரம், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா?  என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.        

    பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:

    தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட செடிகல் கிராமத்தில்   வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் நேரடியாக, நீங்கள் இருக்கும் இடத்திற்கு வருகை தந்துள்ளோம். உங்களது குறைகளை முழுமையாக தெரிவிக்க வேண்டும். எந்த குறைகள் உடனடியாக தீர்த்து வைக்க முடியுமோ அந்த குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். சில குறைகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைத்து நிவர்த்தி செய்யப்படும். 

    இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்துள்ளீர்கள். ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் மூலம் 2020-2021-ம் ஆண்டில் ரூ.90  லட்சம் மதிப்பில் 1.250 கி.மீ சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.  

    கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதன் காரணத்தினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகளை பழங்குடியினர் முழுமையாக பெற்று தங்களது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தினை உயர்த்தி கொள்ளவேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார்.   
    ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி 2 மாதங்களுக்கும், அக்டோபர் மாதம் தொடங்கி சில நாட்களும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும்.

    6 மாதங்கள் மழை கொட்டி தீர்த்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து நீர் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து, நவம்பர் முதல் வாரத்தில் இருந்து உறைபனி கொட்ட தொடங்கி விடுகிறது. ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் தொடங்கி கடந்த மாதம் வரை பெய்தது.

    இதனால், உறைப்பனி விழுவதிலும் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள தேயிலை பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியன பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இரவு நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிரும் அதிகமாக காணப்படுகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    ஊட்டி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகளில் ஊட்டி மற்றும் குன்னூர் நகராட்சிகளின் தலைவர் பொறுப்புகள் பெண்களுக்கான பொது பொறுப்புகளாக மாறியுள்ளன.

    கூடலூர் நகராட்சி தாழ்தப் பட்ட பெண்தலைவருக்கான  பொறுப்பாகவும், நெல்லியாளம் நகராட்சி பழங்குடியின பெண் தலைவ ருக்கான பொறுப்பாகவும் மாறி உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் சோலூர் மற்றும் தேவர்சோலை பேரூராட்சிகளின் தலைவர் பொறுப்புக்கள் பழங்குடியின பெண் தலைவருக்கான பொறுப்புகளாகவும், கோத்தகிரி, ஓவேலி, கீழ்குந்தா, அதிகரட்டி, உலிக்கல் ஆகிய 5 பேருராட்சிகள் தாழ்த்தபட்ட பெண் தலைவர்களுக்கான பதவிகளாக அறிவிக்கபட்டு உள்ளன.

    நடுவட்டம் பேருராட்சி பொது பதவியாக அறிவிக்கபட்டு உள்ளது. கேத்தி, ஜெகதளா, பிக்கட்டி பேரூராட்சிகள் பெண் தலைவர்களுக்கான பொது பதவிகளாக அறிவிக்கபட்டு உள்ளன.

    இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி,  நகராட்சி தலைவர் பொறுப்புகளும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது குறிப்பிடதக்கதாகும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டதன் மூலம் உள்ளாட்சி தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

    நீலகிரி மாவட்டத் தில் உள்ள அனைத்து பேரூராட்சி, நகராட்சி தலைவர் பொறுப்புகளும்  பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளதால் போட்டியிட்டு வெற்றி பெறும் பெண் தலைவர்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் தனித்தன்மையுடன் மக்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
    முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    சுற்றுப்புறச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹு தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும். 

    வார்ரூம் மூலம் கண்காணிக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் உடல்நலம் குறித்து வார்ரூம், மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

    பொதுமக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். 

    அரசு அறிவித்த நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப்&கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தோட்டக்கலைத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரவும், பூங்காவை மேம்படுத்தவும் புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா அருகே தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு 6 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    அதன் நடுவே சுற்றுலா பயணிகள் நடந்து சென்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அவர்களின் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளது.

    மேலும் நடைபாதையில் நடந்து சென்றபடி மலர் அலங்கார செடிகளை கண்டு ரசிக்கவும், காட்சி மாடத்தில் நின்று பூங்காவின் இயற்கை அழகை பார்வையிட்டு புகைப்படம் எடுத்து மகிழவும் வசதி உள்ளது.

    சமீபத்தில் அங்கு சுற்றுலா பயணிகளை கவர இந்திய வரைபடம் தமிழ்நாடு குறியூடு போன்ற அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டன. இருப்பினும் கொரோனா பரவல் காரணமாகவும், நேர கட்டுப்பாடுகள் காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக உள்ளது.

    இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை மூலம் சுற்றுலா பயணிகளை கவரவும், பூங்காவை மேம்படுத்தவும் புதிய அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தேயிலை பூங்காவில் இயற்கையாக அமைந்த பாறையையொட்டி ஊற்று தண்ணீ எப்போதும் சென்று கொண்டே இருக்கிறது.

    இந்த தண்ணீரை திசை திருப்பி பாறையில் இருந்து விழுவது போல் செயற்கை நீர்வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு வர்ணம் தீட்டப்பட்டு வாத்து நிற்பது போல காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் அருகே மலர்கள் கொட்டுவது போல் அலங்கார செடிகளுடன் அருவி போன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்காக மலைச்சரிவில் 12 பாத்திகள் அமைக்கப்பட்டு சுற்றிலும் கற்கள் வைக்கப்பட்டன. அதன் நடுவே தயார்படுத்தப்பட்ட மண்ணில் ஐரிஸ், கோல்டன் டொரண்டா கஜேனியா உள்பட 5 ரகங்களை சேர்ந்த 50 ஆயிரம் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    புதிய அலங்காரம் முன்பு நடைபாதை ஏற்படுத்தி, இருக்கை வசதி போடப்பட்டுள்ளது. அதன் முன்பு சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இந்த செடிகள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதால் நன்றாக வளர்ந்தால் மேலும் அழகாக இருக்கும். இதற்கு தண்ணீர் பாய்த்து, உரமிட்டு பராமரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயானத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே திடீரென அகழி தோண்டி சாலை தடுக்கப்பட்டிருந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சி, பெல்வியூ பகுதியில் உள்ள மயானத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே திடீரென அகழி தோண்டி சாலை தடுக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அரசுக்கு புகார் அளித்தனர்.

    தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட அகழியை உடனே மூடிவிட்டனர். கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த சட்டப் பேரவையின் பொது கணக்குக் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சாலையை தடுக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கி விட்டு சென்றனர். பொது கணக்குக் குழுவினர் அறிவுரையை மீறி செய்ததால் அப்பகுதி மக்கள் அரசுக்குப் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து எம்.எல்.ஏ.வும், சட்டசபை பொதுகணக்கு குழு தலைவருமான செல்வபெருந்தகை கூறுகையில், கடந்த மாதம் 29&ந் தேதி பொதுக்கணக்கு கு-ழுவினர் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தோம். அப்போது பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை முள்வேலியிட்டு தடுக்கவோ, குழிதோண்டியோ இதர வழியிலோ தடுப்பது தவறு என்றும், அவர்கள் பயன்படுத்தும் சாலையை தடுக்கக் கூடாது என்றும் கூறினேன். 

    பொது கணக்குக் குழு ஆய்வு செய்து உத்தரவிட்டதற்குப் பிறகு இந்த செயல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் வருகிற 25&ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தையை பார்த்து அலறி ஓட்டம் பிடித்தனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தாபாலம் பழைய பெட்ரோல் பங்க் பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. சம்பவத்தன்று பெண் தொழிலாளர்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

     அப்போது சற்று தொலைவில் தேயிலை தோட்டத்தின் நடுவே இருந்த பாறை ஒன்றில் விலங்கு ஒன்று படுத்திருந்ததை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் அருகில் இருந்த சக தொழிலாளர்களிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த விலங்கு என்ன விலங்கு? என  தூரத்தில் நின்று பார்த்துள்ளனர். அப்போது அது சிறுத்தை என தெரியவந்தது. அது  பாறையில் படுத்தபடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. 

    இதனால் பீதி அடைந்த தொழிலாளர்கள் இலை பறிப்பதை கைவிட்டு உடனடியாக தோட்டத்திலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடிச் சென்றனர். இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்த சிறுத்தை மெதுவாக எழுந்து நின்றது. தொடர்ந்து பாறையில் இருந்து தோட்டத்திற்குள் இறங்கி தேயிலை செடிகளுக்கிடையே சென்று மறைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோத்தகிரியில் தொடர்ந்து காலையிலும் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், அதிகாலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. இதுதவிர காலையில் குளிருடன் உறைபனியும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் அடித்தது. மாலை நேரத்திற்கு பிறகு இதமான காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது.

    இரவு 10 மணியளவில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கோத்தகிரி பஜார் பகுதி, கிராமப்புற பகுதிகள், கொடநாடு, சோலூர்மட்டம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. லேசான தூரலாக தொடங்கி பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

    இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இன்று காலையும் கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக கோத்தகிரி- குன்னூர் சாலை, கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலை, பஸ் நிலைய பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கு என்பதால் இரவில் வாகன போக்குவரத்து இல்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர்ந்து காலையிலும் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், அதிகாலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    மழைக்கு நடுவே உறைபனி மற்றும் குளிரின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குளிரில் இருந்து காத்துகொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    தொடர் உறைபனியின் தாக்கத்தால் தேயிலை செடிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    குன்னூர்- கோத்தகிரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

    நேற்று மாவட்டத்தில் புதிதாக மேலும் 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36,026 ஆக உயர்ந்துள்ளது.

    44 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,481 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவ மனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் 1,325 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று அதிகரித்து வந்தாலும் சுற்றுலா தொழில் பாதிக்காமல் இருக்க, விதிமுறைகளை பின்பற்றி ஓட்டல்கள், லாட்ஜ்களில் சுற்றுலா பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குன்னூர்- கோத்தகிரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்கு வேலை பார்க்க கூடிய 28 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் ஓட்டலிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணியும் நடந்தது.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
    வால்பாறை:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அங்குள்ள இயற்கை அழகை பார்ப்பதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.

    கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவி வருவதை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர நீலகிரியில் சுற்றுலா தலங்களை பார்வையிட வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பார்வை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக காணப்பட்டது.

    தற்போது பொங்கல் விடுமுறை என்பதால் கடந்த சில தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.

    இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கொடநாடு காட்சி முனை என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன.

    சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் அதனை பார்வையிட வந்த சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் இன்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது. எங்குமே ஆட்களை பார்க்க முடியவில்லை.

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பூங்கா, குரங்கு நீர்வீழ்ச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாம், கோவை குற்றலாம், பரளிக்காடு சுழல் சுற்றுலா, வால்பாறையில் கூழாங்கல் ஆறு உள்பட எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.

    இந்த சுற்றுலா தலங்களுக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வாகனங்களில் வருவார்கள். பொங்கல் பண்டிகை விடுமுறை நாளில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் குரங்குநீர்வீழ்ச்சி, ஆழியார் அணை பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு சென்றனர். அங்கு தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை அழகினை கண்டு ரசித்து வந்தனர். இன்று முழு ஊரடங்கு காரணமா சுற்றுலா தலங்கள் வெறிச்சோடியது. 
    ×