என் மலர்
நீலகிரி
- தேயிலை எஸ்டேட் தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை போனது.
- கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.1.96 லட்சம் ஆகும்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது தாய்சோலா. இப்பகுதியை சேர்ந்த லிங்கன் என்பவரது மனைவி கமலா அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கமலா அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் சீட்டு பிடித்து வருகிறாராம். இந்நிலையில் சம்பவத்தன்று கமலா சீட்டு பிடித்த பணம் ரூ.45ஆயிரம் மற்றும் சேமிப்பு பணம் ரூ.47ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.92 ஆயிரம் மற்றும் 8 சவரன் தங்கநகை ஆகியவற்றை ஒரு பையில் சுற்றி வீட்டில் உள்ள சாமி படம் முன்பு வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 8-ந் தேதி பார்த்தபோது சாமி படத்தின் அருகில் வைத்திருந்த நகை, பணம் அடங்கிய பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பட்டப்பகலில் வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்படாத நிலையில் நகை மற்றும் பணம் கொள்ளை போனது குறித்து லிங்கன் மஞ்சூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி தலைமையில் விரைந்து சென்ற போலீசார் விசாரனை நடத்தினார்கள். கொள்ளை போனது ரொக்கப்பணம் ரூ.92 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 4ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தங்க நகை ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.1.96 லட்சம் என தெரியவந்தது.
இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் தாய்சோலா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்னாள் மக்கள் நல பணியாளர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது.
- 13-ந் தேதி பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலப்பணியாளர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
எனவே 8.11.2011 அன்று பணியிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்கள் விருப்ப கடிதம் சமர்ப்பித்து பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன் தற்போது வழங்கப்பட உள்ள பணியில் சேர்ந்து பணியாற்றுவதற்கான விருப்ப கடிதத்தையும், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) யிடம் வருகிற 13 முதல் 18-ந் தேதிக்குள் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு விண்ணப்பிப் பவர்கள் மட்டும் இப்பணியிடத்திற்கு பரிசீலிக்கப்படுவர் என்பதால் இந்த அறிவிப்பிற்கேற்ப தவறாமல் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார்.
- இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார்
ஊட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி முத்துபாண்டீஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
முத்துபாண்டீஸ்வரி தற்கொலை செய்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் ஊட்டிக்கு வந்தனர். தங்கள் மகள் முத்துபாண்டீஸ்வரியை கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வினீத் பாலாஜி மற்றும் பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகியோர் சித்ரவதை செய்து வந்தனர். வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார். எனவே வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அதன்பேரில் வினீத் பாலாஜி, பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகிய 3 பேர் மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே முத்துபாண்டீஸ்வரி திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.
- உலக புகழ்பெற்று திகழ்கிறது ஊட்டி தாவரவியல் பூங்கா.
- பூங்காவை உருவாக்கிய மெக்ஐவரின் 146-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஊட்டி, ஜூன்.9-
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவை 1848-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சார்ந்த மெக் ஐவர் என்ற கட்டிட கலை வல்லுனர் தொடங்கி வைத்தார். சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின்னர் 1867-ம் ஆண்டு சுற்றுலாபயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளை சார்ந்த 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளது.
இந்த பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் 1876- ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று அவரது 146-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து ஊட்டி ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி மற்றும் உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பூங்கா ஊழியர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், 1848-ம் ஊட்டிக்கு வருகை புரிந்த மெக் ஐவர் 19 ஆண்டுகள் ஆண்டு உழைப்பிற்கு பிறகு அரசு தாவரவியல் பூங்கா அமைத்தார். அவருடைய முழு முயற்சியால் அமைக்கப்பட்ட பூங்காவினை தற்போது ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தும், இயற்கை காற்றினை சுவாசித்தும் செல்கின்றனர் என்றார்.
- கோத்தகிரி அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
- திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் திமிதித்தனர்
ஊட்டி, ஜூன்.9-
கோத்தகிரி அரவேனு அருகே தவிட்டுமேட்டில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 3-ந் தேதி காலை காளி பூஜை, முனீஸ்வரர் பூஜைகள் நடத்தப்பட்டு கும்பம் பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
4-ந் தேதி அம்மன் பவனி வருதல், 5-ந் தேதி பூ கரகம் எடுத்து வருதல், அக்னி சட்டி ஊர்வலம், அலகு குத்துதல் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து பக்தர்கள் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 6-ந் தேதி காலை காளியம்மாள் நாக பூஜையும், தொடர்ந்து முனீஸ்வரர் மற்றும் முன்னடியானுக்கு கிடா வெட்டி பூஜை நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை அம்மன் பவனி வருதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து மஞ்சள் நீராடலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ரெயில் பயணிகள் இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து அங்கு படம் பிடிப்பாா்கள்.
- குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
ஊட்டி,
குன்னூா்- மேட்டுப்பாளையம் ெரயில் பாதையில் ஹில்குரோவ் ெரயில் நிலையம் உள்ளது. இந்த ெரயில் நிலையத்தில் நாள்தோறும் ரெயில் நிறுத்தப்பட்டு என்ஜினுக்கு தண்ணீா் பிடிப்பது வழக்கம்.
இந்த இடைவெளியில் ெரயில் பயணிகள் இறங்கி இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து அங்கு படம் பிடிப்பாா்கள். இந்த நிலையில் குட்டியுடன் காட்டு யானை ஒன்று, இந்த ெரயில் நிலையம் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சுற்றி வருகிறது.
ஹில்குரோவ் ெரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கும், மாலையில் 4.30 மணிக்கும் மலை ெரயில் வந்து செல்கிறது. இந்நிலையில், யானை நடமாட்டம் குறித்து ஹில்குரோவ் ெரயில் நிலைய ஊழியா்கள் குன்னூா் ெரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தற்போது வனப் பகுதியில் வறட்சி நிலவி வருவதாலும், ெரயில் நிலையம் அருகே உள்ள பலாப்பழ மரங்களில் பழங்கள் காய்ந்துள்ளதாலும் யானை அங்கு முகாமிட்டுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
யானை நடமாட்டத்தால் குரும்பாடி, பா்லியாறு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்
- குன்னூர் ராணுவ மையம் அருகே நடந்தது
ஊட்டி,
குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் அருகே உள்ளது ஆஸ்பிட்டல்சேரி. இந்த பகுதியைச் சேர்ந்த ஆபி என்பவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார்.
நேற்று அந்த மாடு அங்கு மேய்ச்சலுக்காக சென்றது. அப்போது வயல் பகுதியில் கிடந்த நாட்டுவெடியை கடித்தது. இதில் நாட்டு வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி சிதைந்தது.
அந்த மாடு ரத்தம் சொட்ட, சொட்ட வேதனையுடன் அலறியபடி உள்ளது. கால்நடை டாக்டர்கள் மூலம் மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வெலிங்டன் ேபாலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாய பயிர்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் வனவிலங்குகளை விரட்டுவதற்காக யாராவது நாட்டு வெடிகளை வைத்திருக்கலாம், அதனை அறியாமல் பசுமாடு அதனை கடித்து இருக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு வனவிலங்குகளை சித்ரவதைக்குள்ளாகும் வகையில் நாட்டு வெடிகளை பயன்படுத்தியது யார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது. அந்த பகுதியில் ஏற்கனவே இதுபோன்று நாட்டு வெடி வெடித்து 3 காட்டு மாடுகள் இறந்துள்ளன. தற்போது மேலும் ஒரு பசுமாடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாட்டு வெடியை பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பசுமாடு சித்ரவதைக்குள்ளாகி அவதிப்படும் சம்பவத்துக்கு வனவிலங்கு ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- நீலகிரி கலெக்டர் அம்ரித் வேண்டுகோள்
- குழுக்களுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
ஊட்டி,
ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 75-வது சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் நீலகிரி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழுமம், அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்திய வாடிக்கையாளர்களுடன் தொடங்கும் நல்லுறவு, தொடரும் நல்லுறவு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் 60 பயனாளிகள் மற்றும்குழுக்களுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-
அரசின் திட்டங்கள்
பொதுமக்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் தொழில் கடன், சுயஉதவிக்குழு கடன்கள் உதவிகள் குறித்தும், மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பிலும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் பல்வேறு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காரட் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காகவும், பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வங்கிகள் மூலம் தனிநபர் கடன், வீட்டு கடனுதவிகள், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடனுதவிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வங்கியாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு இடையே திட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பெருவிழா நடந்தது.
நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் அரசின் கடன் உதவி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் கடனுதவி கேட்டு வங்கிகளுக்கு வரும்போது வங்கியாளர்கள் அவர்கள் கடனுதவி பெறுவதற்கான வழிமுறைகளை சரியான முறையில் ெதரிவித்து கடனுதவிகள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மக்களுக்கு வங்கிகள் மீதும், நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வினீத் பாலாஜிக்கும், முத்துபாண்டீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
- முத்துபாண்டீஸ்வரின் தந்தை கார்த்திகைவேல் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஊட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
வினீத் பாலாஜிக்கும், முத்துபாண்டீஸ்வரிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் காவலர் குடியிருப்பில் முத்துபாண்டீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த முத்துபாண்டீஸ்வரியின் குடும்பத்தினர் நேற்று ஊட்டிக்கு புறப்பட்டு வந்தனர். முத்துபாண்டீஸ்வரின் மரணத்துக்கு அவரது கணவரும், கணவரின் குடும்பத்தினருமே காரணம், எனவே அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊட்டி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பாண்டீஸ்வரின் தந்தை கார்த்திகைவேல் ஊட்டி ஜி1 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது மகளின் திருமணத்தின்போது வரதட்சணையாக 18 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக பணம் மற்றும் இருசக்கர வாகனம் கேட்டு எனது மகளுக்கு அவரது கணவரும், குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
அந்த சமயம் எனது 2-வது மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்ததால் தற்போது பணம் இல்லை, திருமணம் முடிந்ததும் தருவதாக தெரிவித்தேன். அந்த கோபத்தில் 2-வது மகள் திருமணத்துக்கு அவர்கள் யாரும் வரவில்லை. எனது மகள் முத்துபாண்டீஸ்வரியை மட்டும் அனுப்பி வைத்தனர்.
முத்துபாண்டீஸ்வரி ஊட்டியில் இருந்தபடி எங்களிடம் அடிக்கடி பேசி வந்தார். ஒவ்வொரு முறை பேசும்போதும் தனது கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தன்னை இழிவாகவும், கேவலமாகவும் பேசுவதாக தெரிவிப்பார். கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார். இதனால் வாழவே பிடிக்கவில்லை என கூறி கண்ணீர் விட்டு அழுவார். நாங்கள் அவளை சமாதானம் செய்து வந்தோம்.
கடைசியாக 6-ந் தேதி அவள் எங்களிடம் பேசினாள். 7-ந் தேதி மாலை ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு போன் செய்து உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
எனது மகள் மரணத்துக்கு அவரது கணவரும், மாமனார், மாமியாருமே காரணம். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் புகாரில் கூறி இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகி ஒரு வருடத்துக்குள் முத்து பாண்டீஸ்வரி தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. துரைசாமி விசாரணை நடத்தி வருகிறார். முத்துபாண்டீஸ்வரியின் உறவினர்கள் மற்றும் போலீஸ்காரர் வினீத் பாலாஜி, அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.
விசாரணையில் வரதட்சணை கொடுமை நடந்தது உறுதியானால் வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை பாயும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஊட்டி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி, ஜூன்.8-
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டு பாறையைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவரை கடந்த மாதம் 26-ந் தேதி காட்டு யானை தாக்கிக் கொன்றது. பாரம் பகுதியில் மற்றொரு காட்டு யானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியானார்.
இதைத்தொடர்ந்து ஊருக்குள் புகும் யானைகளை விரட்ட விஜய், சங்கர், கிருஷ்ணா, சீனிவாசன் ஆகிய கும்கி யானைகள் களமிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே கூடுதலாக கலீம் என்ற கும்கி யானை கோவையில் வரவழைக்கப்பட்டுள்ளது. கூடலூரில் இருந்து வசிம் என்ற யானை வந்துள்ளது.
இந்த யானைகள் மூலம் காட்டு யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
- மழையால் கேரட் பயிரிகள் நீரில் மூழ்கி நாசமாகி உள்ளது.
- அழுகிய கேரட் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அழுகிய கேரட் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊட்டி, ஜூன்.8-
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
அதன்படி மாவட்டத்தில் 5 ஆயிரம் எக்டேருக்கு அதிகமான பரப்பளவில காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைக்கோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்களும், கூடலூர் பகுதியில் இஞ்சி, வாழை மற்றும் மரவள்ளி பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது.
இதில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, எம்.பாலாடா மற்றும் கோத்தகிரி உள்ளிட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மழை பெய்து வருகிறது. இதனால் கேரட் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மழையால் நிலத்தில் சூடு அதிகமாகி கேரட் அழுகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மழையால் அழுகி நாசமான கேரட்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரியிடம் கேட்டபோது 100 ஏக்கர் பரப்பளவில் கேரட் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சற்று மழை குறைந்துள்ளதால் இறுதிக்கட்ட கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
- ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது.
ஊட்டி,
கூடலூர் அருகே உள்ளது கோழிப்பாலம். இந்த பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறு. நேற்றும் காற்றுடன் மழை பெய்தது.
அப்போது திடீரென மரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
பின்னர் அந்த வழியாக பஸ்களில் வந்த கல்லூரி மாணவர்களும், பயணிகளும் இணைந்து மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர். அவர்களும் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பிறகு அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கி நடந்தது.






