என் மலர்
நீலகிரி
- வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடைபெற்று உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தம் 2023-ல் பெறப்பட்ட படிவங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் ஊட்டியில் கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான அம்ரித் முன்னிலை வகித்தார். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரும், வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 1.1.2023 தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த நவம்பர் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து டிசம்பர் 8-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்வாடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இந்த சுருக்கமுறை திருத்தத்தில் புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கு படிவங்கள் பெறப்பட்டன.இதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வருகிற 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் 3 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பாக நடைபெற்று உள்ளது.
பெறப்பட்ட படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிட அலுவலர்கள், மாவட்ட கலெக்டருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நீலகிரியில் தேர்தல் தொடர்பான பணிகளுக்கு தலைமை செயலகத்திலும் நற்பெயர் உள்ளது. இந்த பணிகளை இதே போன்று தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷண்குமார், முகமது குதுரதுல்லா, நகராட்சி கமிஷனர்கள் காந்திராஜன், கிருஷ்ணமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புளியம்பாறை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பி.எம்.2 மக்னா யானை சுற்றி திரிந்தது.
- மக்னா யானை தடுத்து நிறுத்தி அடர்ந்த வனத்திற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், கூடலூா், செலுக்காடி, பாடந்தொரை, தேவாலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்கள், புளியம்பாறை பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பி.எம்.2 மக்னா யானை சுற்றி திரிந்தது.
இந்த யானை அங்குள்ள வீடுகளை இடித்ததுடன், உணவுப்பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்தது.
மேலும் தேவாலா மற்றும் புளியம்பாறை கிராமங்களில் 2 பெண்களை தாக்கிக் கொன்றது. இந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.
இதையடுத்து கடந்த 9-ந் தேதி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியான சீகூா் சரகத்தில் உள்ள காங்கிரஸ் மட்டத்தில் விடப்பட்டது.
அந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.முற்றிலும் மாறுபட்ட தட்ப வெப்ப நிலை கொண்ட சீகூா் வனப் பகுதியில் இருந்து தற்போது, தான் ஏற்கனவே சுற்றிதிரிந்த இருப்பிடத்தை நோக்கி மக்னா யானை நடந்து வரத் தொடங்கியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாற்றை நேற்றுமுன்திம் யானை கடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மக்னா யானை தடுத்து நிறுத்தி அடர்ந்த வனத்திற்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 9 கும்கி யானைகள் உதவியுடன் 60க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று 2-வது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சில சமயங்களில் விரட்ட முயன்ற போது மக்னா யானை வன ஊழியர்களையும் துரத்தியது. பின்னர் அங்கிருந்து மசினகுடி மாயாறு பகுதிக்கு திரும்பி சென்றது.
இருப்பினும் ரேடியோ காலர் சிக்னல் மூலம் இரவு பகலாக யானை நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். தற்போது யானை மாயாறு பகுதியில் சுற்றி திரிகிறது.
இதற்கிடையே இந்த யானை தொரப்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களை விரைவில் வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
யானை பல ஆண்டுகளாக சுற்றித்திரிந்த பகுதிக்கே திரும்பி வருவது அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சின்னம்மா வீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
- போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோத்தகிரி,
ஊட்டி அருகே தீட்டுக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னம்மா (70). இவா் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை புகை வெளியேறியுள்ளது.
இதைத் தொடா்ந்து , அக்கம்பக்கத்தினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கு உடல் கருகிய நிலையில் சின்னம்மா உயிரிழந்து கிடந்துள்ளாா். இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த உதகை காவல் துறையினா் சின்னம்மாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், மின்சாரம் பாய்ந்து சின்னம்மா உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
- வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது.
- அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த நெடுகுளா பகுதியில் இளைஞர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அங்கு வாலிபர்கள் சிலர் பணம் வைத்து சூதாட்டம் விளையாடியது உறுதியானது. இதையடுத்து பணம் வை்து சீட்டு விளையாடிய ரவிக்குமார், ஷினாத், ரமேஷ், அபிஷேக், ஜீவா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மின்சாரம் இல்லாவிட்டால் உலகம் இருளில் மூழ்கிவிடும்
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் குந்தா மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் மின் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சூர் அரசு மகா கவி பாரதியார் நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின் சேமிப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இதில் மின் பகிர்மான வட்ட உதவி செயற்பொறியாளர் சிவா கலந்து கொண்டு பேசியதாவது:-
மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவையாகும். மின்சாரம் இல்லாவிட்டால் உலகம் இருளில் மூழ்கிவிடும். வெளிச்சம் தருவதோடு வீடுகளில் நாம் பயன்படுத்தும் தொலைக்காட்சி பெட்டிகள், மின்விசிறிகள் என 90 சதவீதம் சாதனங்கள் மின்சாரத்தையே சார்ந்துள்ளது. இவ்வாறு அவசிய, அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பலர் தேவையற்ற முறையில் உபயோகிப்பதால் மின்சாரம் விரயமாகிறது. தேவையற்ற சமயங்களில் மின்சார விளக்குகள் மற்றும் மின்சார சாதனங்களை உபயோகிப்பதை தவிர்த்தாலே மின்சார விரயத்தை தவிர்த்து அதை சேமிக்க முடியும். இது குறித்து மாணவ சமுதாயத்தினர் பொதுமக்கள் இடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.முகாமில் மின் உதவியாளர் ராமன் மற்றும் ஆசிரியைகள் சர்மிளா, பாபி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
- கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
- கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அரவேணு பகுதியில் கஞ்சா விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அரவேனு ஜீப் ஸ்டேண்டு அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவர் வாட்டர்பால்ஸ் பகுதியை சேர்ந்த செல்வா(22)என்பதும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவாலா இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் நாடுகாணியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் கீழ்நாடுகாணியை சேர்ந்த கலைவாணன், தேவலா வாழவயல் மணிராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
கூடலூர் போலீசார் கூடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரி பின்புறம் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் கூடலூர் கோத்தர் வயலை சேர்ந்த நிஷான் என்பதும் கஞ்சா விற்க அங்கு நின்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கூடலூர் பழைய கல்குவாரியில் போதைபொருளுடன் நின்ற பாடந்துரையை சேர்ந்த சத்யா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இதேபோல் நிலாக்கோட்டையில் ஷாஜகான் என்ற வாலிபரும், ஊட்டியில் சீனிவாசன் என்பவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் நீலகிரியில் 7 பேர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி அண்ணா நகர் செந்தூர் முருகன் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சார்பில், திருத்தேர் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, பஜனை வழிபாடு மூலம் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக சூண்டி திருக்கல்யாண மலையை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெரிய சூண்டி சித்தி விநாயகர் கோவிலை இரவு 11 மணிக்கு அடைந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
- கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
கூடலூர்,
கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் கோத்தர் வயல் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கூடலூரை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மேல் கூடலூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகேஷ் (18) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.
- 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- 2-வது வார்டு உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பெட்டை லைன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சரியான நடைபாதை இல்லாததால் மழைக்காலங்களில் குழந்தைகள், முதியோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் கேத்தி பேரூராட்சி தலைவர் முன்னிலையில் அப்பகுதியில் நடை பாதை அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பூமி பூஜை கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து பேரூராட்சி தலைவர் ஹேமா மாலினி மற்றும் 2-வது வார்டு உறுப்பினர் விக்டர் வசந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
- பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.
- நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி
நீலகிரியில் பேராசிரியர் அன்பழகன் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் பேராசிரியரின் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜூ, செந்தில், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், தம்பி இஸ்மாயில், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், ஜெயராமன், ஆட்டோ ராஜன், மார்கெட் ரவி, தியாகு, அமலநாதன், ஊட்டி நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னு, கஜேந்திரன், மீனா, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ், ஆட்டோ பாபு, பெரியசாமி, ஸ்டான்லி, நிக்கோலஸ், ராஜம்மா, உதயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.
- அரிசி ராஜா யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் 15 வயதுடைய மக்னா யானை ஒன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. வீட்டை உடைத்து அரிசியை ருசித்து சாப்பிடும் இந்த யானையை அந்த பகுதியினர் அரிசி ராஜா யானை என்று அழைத்து வந்தனர்.
இந்த யானை அந்த பகுதியைச் சேர்ந்த 2 பெண்களை மிதித்து கொன்றது. இதனால் இந்த யானையை பிடிக்க வனத்துறையினர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதன் காரணமாக ஒரு வாரத்துக்கும் மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கடந்த வாரம் வனத்துறையினர் பிடித்தனர்.
பின்னர் அந்த யானை காங்கிரஸ் மட்டம் பகுதியில் விடப்பட்டது. யானையை ரேடியோ காலர் சிக்னல் மூலமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் காட்டில் விடப்பட்ட மசினக்குடி வனப்பகுதிக்கு மீண்டும் திரும்பி இருப்பதை வனத்துறையினர் கண்ட றிந்துள்ளனர். அந்த யானை மீண்டும் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக 7 கும்கி யானைகள் உதவியுடன் அரிசி ராஜா யானையை வனத்து றையினர் கண்காணித்து வருகிறார்கள்.
அந்த யானை எக்காரணம் கொண்டும் கூடலூர் பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க வேண்டும் என்றும், அதற்கு எத்தனை பணியாளர்கள், எத்தனை வாகனங்கள் ஆனாலும் உபயோகித்து கொள்ளலாம் என்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
- கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 320 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் 49 பேர் கொண்ட போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து தற்கொலை செய்த தினேஷ் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர். ஆனால் தினேசின் குடும்பத்தினர் வேலைக்கு சென்றிருந்தனர். இதனால் வீடு பூட்டிக்கிடந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி விட்டு போலீசார் சென்றனர்.
இதுபற்றி தினேசின் தந்தை போஜன் கூறுகையில் நானும், எனது குடும்பத்தினரும் பணிக்கு சென்றபோது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்துள்ளனர். அருகில் இருந்தவர்களிடம் விவரங்களை கேட்டு சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றனர்.
கொடநாடு வழக்கை விரைந்து முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அடுத்தக்கட்டமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர்.
மேலும் விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் போலீசாரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம், தருமபுரி, கோவை உள்ளிட்ட இடங்களில் சைபர் கிரைம் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 10 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 பேர் சி.பி.சி.ஐ.டி. தனிப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் மாநகர சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ், வீராணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாற்றப்பட்டவர்கள் பழைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இன்று தனிப்படையில் இணைந்தனர். இவர்கள் விரைவில் பணியை தொடர உள்ளனர்.






