என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.
    • மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ஆண்கள் சிகிச்சை பிரிவு பகுதியில் இரவு நேரத்தில் வெளியே இருந்த நாய்கள் குரைத்தபடியே இருந்தன.

    அப்போது நோயாளிகள் வெளியே வந்து பார்த்தபோது கரடி ஒன்று ஒய்யாரமாக மருத்துவமனைக்குள் நடமாடி கொண்டிருந்தது.இதை பார்த்ததும் பொதுமக்களும், நோயாளிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரமாக நடமாடி கொண்டிருந்த கரடி, பின்னர் நோயாளிகள் கூச்சலிட்டதால் வனப்பகுதிக்குள் சென்றது.

    கடந்த சில நாட்களாக கோத்தகிரி பஜார் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடிகள், நடமாடி வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரியில் இருந்து கூக்கல் தொரை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி அருகே திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்,ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து பெரும் சேதமடைந்தது.

    இதனால் கூக்கல்தொரை பகுதியில் இருந்து கோத்தகிரி போன்ற நகர்புற பகுதிகளுக்கும் போக்குவரத்து தடைபட்டது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மண், ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாநில நெடுஞ்சாலை துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் விழுந்த பாறை மற்றும் மண் சரிவுகளை கனரக எந்திரம் மற்றும் ஜே.சி.பி. எந்திர வாகனங்களை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு பாதிப்புகளை நீலகிரி கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயன், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மண்சரிவால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக் கூடிய போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளதால், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான கூக்கல், கக்குச்சி வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புவியியல் துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வரும் காலங்களில் இப்பகுதியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு பேரிடர்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தெரிவித்தார்.உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ், சாலை ஆய்வாளர்கள் சேகர்,ஜெயக்குமார், சிவ க்குமார், கிருஷ்ணன்,முருகன் மற்றும் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா பகுதியில் உள்ள மளிகைக்கடை கதவை கரடி உடைத்தது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    மஞ்சூர் பகுதிகளில் கடைகளை உடைத்தும் பொருட்களை சூறையாடியும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி ஒன்றை சமீபத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விட்டனர்.

    இதையடுத்து சில தினங்கள் கரடி அட்டகாசம் சற்று குறைந்திருந்தது. தற்போது மீண்டும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா பகுதியில் உள்ள மளிகைக்கடை கதவை கரடி உடைத்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாம்ராஜ் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது.

    இரவில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி முனீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்தது.

    கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை எடுத்து வீசி சூறையாடியது. மேலும் பொருட்களை அங்குமிங்கும் வாரி இறைத்ததுடன், கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணையையும் குடித்தது.

    காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    • சத்துணவு கூடம் ரூ.9.34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு கூடம் ரூ.9.34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மற்றும் மசினகுடி ஊராட்சி மன்ற தலைவர் மாதேவிமோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நாகேஷ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவக்குமார், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா, மசனகுடி பஜார் தி.மு.க கிளை செயலாளர் சதீஷ்குமார், சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது
    • ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து சிறப்பு பாடல்களை பாடினர்.

    ஊட்டி,

    நீலகிரி கேத்தியிலுள்ள சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. கோவை மண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வா் அருமைராஜ், கல்லூரி தாளாளா் டேனியல் காட்வின், செயலா் பிரின்ஸ் கால்வின், பொருளாளா் அமிா்தம், நீலகிரி வட்டகை தலைவர் ஜேம்ஸ்கிமெண்ட், நீலகிரி வட்டகை நிர்வாக உறுப்பினர் அருள் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவ்விழாவில் கேத்தி பேருராட்சி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் இணைந்து சிறப்பு பாடல்களை பாடினர்.

    • 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி தினசரி மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.மேலும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பழக்கடைகளில் விற்பனை செய்யபடும் பழங்கள் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா ? எனவும் ஆப்பிள் பழங்களின் மேல் மெழுகு பூச்சு உள்ளதா, என ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 கடைக்காரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். உரிமம் இன்றி உணவு பொருட்களை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். 

    • அந்த நாய்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.
    • இந்த 2 நாய்கள் குட்டி ஈனும் வயதைக் கடந்திருக்கிறது.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை வந்து செல்வதாக கூறி பொதுமக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நாய் குறைக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குடியிருப்பு வாசிகள் ஒரு சிலர் அங்கு நேரில் சென்று பார்த்தனர். அப்போது சங்கிலியால் 2 நாய்கள் கட்டப்பட்டு கிடந்தது.

    இதைத் தொடர்ந்து விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், 2 வளர்ப்பு நாய்களை மீட்டு, பிக்கட்டியில் இயங்கி வரும் சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நாய்கள் ஒரு வாரத்திற்கு மேலாக உணவு, தண்ணீரின்றி மிகவும் நலிவுற்ற நிலையில் மெலிந்து போய் இருந்தது. தற்போது அந்த நாய்களுக்கு அங்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து விலங்குகள் நல செயல்பாட்டாளர்கள் ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் ஊட்டியை சேர்ந்த பொறி வியாபாரம் செய்து வந்த உதயகுமார் என்பவர் 2 கிரேட் டேன் ரக நாய்களை வளர்த்து வந்ததும், இதன் பின்னர் அந்த நாய்களை வனப்பகுதியில் கட்டி சென்றதும் தெரிய வந்தது.

    தற்போது உதயகுமாரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவையில் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்துடன் அவர் கோவையில் இருக்கிறார். நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் உடைய உதயகுமார், இந்த 2 நாய்கள் குட்டி ஈனும் வயதைக் கடந்திருக்கிறது. இவற்றால் இதற்கு பின்னர் எந்த பலனும் இல்லை என்பதால் சிறுத்தை அல்லது ஏதாவது விலங்கினத்திற்கு உணவாகட்டும் என்று வனப்பகுதியில் விட்டு சென்றுள்ளார்.

    தற்போது அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வளர்ப்பு பிராணிகள் நல பாதுகாப்பு செயற்பாட்டாளர் நைஜில் கூறுகையில், ஆதிகாலம் முதல் தொன்றுதொட்டு நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீது மனிதர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். கொரோனா தாக்குதலுக்கு பிறகு வெளியிடங்களுக்கு செல்ல முடியாதால் வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வம் அதிகரித்தது. நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை நன்றாக பராமரிக்க வேண்டும் இல்லாவிட்டால் அதற்குரிய மையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுபோல் காடுகளில் விட்டு செல்லக்கூடாது என்றார்.

    • மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது.
    • அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. தற்போது மழை குறைந்து கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. கடும் குளிரால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோத்தகிரியில் இருந்து மசக்கல் செல்லும் சாலையில் உயிலட்டி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர்.

    இந்த நீர்வீழ்ச்சியை சுற்றிலும் மக்கள் மலை காய்கறி பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். கேரட், முட்டைக்கோஸ், மேரக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. மண் மற்றும் பாறைகள் சரிந்து கோத்தகிரி-மசக்கல் சாலையில் வந்து விழுந்தது. இதனால் அந்த சாலை முழுவதும் மண்ணும், பாறாங்கற்களுமாக காட்சியளித்தது. மேலும் அந்த சாலையே தெரியாத அளவுக்கு மண் மூடி காணப்பட்டது.

    இன்று காலை அந்த வழியாக வந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மண் மற்றும் பாறாங்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டு, அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலை வழியாக தான் ஏராளமான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் இந்த சாலையில் கல்லூரி மற்றும் விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

    • கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
    • சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(21). கூலித்தொழிலாளி.

    இவர் தன்னுடன் பணியாற்றும் மற்றொரு கூலி தொழிலாளியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.

    அப்போது அந்த தொழிலாளியின் 8 வயது மகளுடன் அவர் பழகினார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு இனிப்பு வாங்கி கொடுத்து ஏமாற்றி அவரை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதை யாரிடமாவது வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி கடந்த 25-ந் தேதி அஜித்குமாரை, கைது செய்து, ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், அஜித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதன் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவு நகல் ஊட்டி கிளை சிறையில் இருந்த அஜித்குமாரிடம் வழங்கப்பட்டது. பின், அஜித்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடக்கிறது.
    • தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் கர்ப்பப்பை நீர்க்கட்டி பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் மற்றும் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் மூலிகை மருந்துகள் மற்றும் மருந்தியல் துறை சார்பில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் தலைமை தாங்கினார். டாக்டர் சண்முகம், டாக்டர் ஷங்கர், டாக்டர் பிரியங்கா துவாரம்புடி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்தனர். கல்லூரி இணை பேராசிரியர் அருண் அனைவரையும் வரவேற்றார். இதில் தொழில்நுட்ப தகவல், முன்னறிவிப்பு மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் துறை தலைவர் சண்முகம், லக்னோ மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர். ராஜேஷ் குமார் ஜா, முதன்மை விஞ்ஞானி மற்றும் வணிக மேம்பாட்டு அதிகாரி டாக்டர் நசீம் ஏ.சித்திகி, சமூக சேவகர் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் தேசிய அளவில் பார்மசி கல்லூரியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 40க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள், போஸ்டர் மற்றும் ஆயுவுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டது. விழாவின் நிறைவில் சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது.
    • நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அரவேணு,

    கோத்தகிரி சக்திமலை முருகன் கோவிலில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மார்கழி மாத பிரதோஷ பூஜை நடைபெற்றது. இதனையொட்டி சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து அபிஷேக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. நந்தி தேவருக்கும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மார்கழி மாத பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மனு அளித்து முறையிட்டனா்.
    • நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை, கூடலூர் நகராட்சி கவுன்சிலர்கள் வெண்ணிலா சேகா், வா்கீஸ், சத்தியசீலன், ஆபிதா பேகம், தனலட்சுமி, ஏ.உஸ்மான் உள்ளிட்டோா் நேரில் சந்தித்து கூடலூா் நகரின் வளா்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மனு அளித்து முறையிட்டனா்.

    அதில், கூடலூரில் கடந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த தொடா் கனமழையால் நூலக கட்டிடம் இடிந்து யாரும் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களின் பயன்பாட்டுக்காகவும், போட்டித் தோ்வு எழுதும் இளைஞா்களின் நலனுக்காகவும் அந்த இடத்தில் வாகன நிறுத்தத்துடன் கூடிய நவீன நூலக கட்டிடம் கட்டித் தரவேண்டும்.

    நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இளைஞா்களின் நலனுக்காக அரசு கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள வெற்றிடத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.

    கூடலூா் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியின் மைதானத்தை சீரமைத்து மாணவா்களின் பயன்பா ட்டுக்கு விடவேண்டும்.

    கூடலூா் நகராட்சியில் மேலாளா், வருவாய் ஆய்வாளா் மற்றும் சுகாதார ஆய்வாளா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

    அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

    ×