என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு
    X

    கோத்தகிரி அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் ஆய்வு

    • சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அரவேணு,

    கோத்தகிரியில் இருந்து கூக்கல் தொரை வழியாக கோத்தகிரி செல்லும் சாலையில் அமைந்துள்ள உயிலட்டி நீர்வீழ்ச்சி அருகே திடீரென மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்,ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து பெரும் சேதமடைந்தது.

    இதனால் கூக்கல்தொரை பகுதியில் இருந்து கோத்தகிரி போன்ற நகர்புற பகுதிகளுக்கும் போக்குவரத்து தடைபட்டது. இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மண், ராட்சத பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து மாநில நெடுஞ்சாலை துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு சாலையில் விழுந்த பாறை மற்றும் மண் சரிவுகளை கனரக எந்திரம் மற்றும் ஜே.சி.பி. எந்திர வாகனங்களை கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு பாதிப்புகளை நீலகிரி கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ், ஊட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாயன், நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தடுப்பு சுவர்கள் அமைத்து சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினரிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மண்சரிவால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக் கூடிய போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளதால், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையான கூக்கல், கக்குச்சி வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி கிராம பகுதிகளுக்கு செல்ல கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புவியியல் துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வரும் காலங்களில் இப்பகுதியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு பேரிடர்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தெரிவித்தார்.உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன், உதவி பொறியாளர் ரமேஷ், சாலை ஆய்வாளர்கள் சேகர்,ஜெயக்குமார், சிவ க்குமார், கிருஷ்ணன்,முருகன் மற்றும் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் மூலம் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×