என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மஞ்சூர் அருகே கோவிலில் பூஜை பொருட்களை சூறையாடி எண்ணையை குடித்த கரடி
- மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா பகுதியில் உள்ள மளிகைக்கடை கதவை கரடி உடைத்தது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மஞ்சூர் பகுதிகளில் கடைகளை உடைத்தும் பொருட்களை சூறையாடியும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்ட கரடி ஒன்றை சமீபத்தில் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விட்டனர்.
இதையடுத்து சில தினங்கள் கரடி அட்டகாசம் சற்று குறைந்திருந்தது. தற்போது மீண்டும் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்குந்தா பகுதியில் உள்ள மளிகைக்கடை கதவை கரடி உடைத்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சாம்ராஜ் அருகே முனீஸ்வரர் கோவில் உள்ளது.
இரவில் வனத்தை விட்டு வெளியேறிய கரடி முனீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்தது.
கோவிலில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை எடுத்து வீசி சூறையாடியது. மேலும் பொருட்களை அங்குமிங்கும் வாரி இறைத்ததுடன், கோவிலில் தீபம் ஏற்றுவதற்காக வைத்திருந்த எண்ணையையும் குடித்தது.
காலையில் கோவிலுக்கு வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவசர, அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.






