என் மலர்
நீலகிரி
- மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
- உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தொடர் மழையால் உறைபனி ஒரளவு குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. கார்கள், புல்தரைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
ஊட்டியில் அதிகபட்சமாக 22.7 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 3.5 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.
உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். குளிரில் இருந்து காத்து கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
குளிரால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சுவர்ட்டர் அணிந்து கொண்டு சென்றனர்.
- அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
- வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையதில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு சென்று விட்டு மீண்டும் சமவெளிப்பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோத்தகிரி மார்க்கமாகவே செல்கின்றனர்.
இப்படி கோத்தகிரி பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் மலைப்பாதைகளில் உள்ள வளைவுகளில் வாகனங்களை வேகமாக இயக்கி அடிக்கடி விபத்து ஏற்படுத்தி வந்தனர்.
இதனை முழுமையாக தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நெடுஞ்சா–லைத்துறை சார்பில் கோத்த–கிரியில் இருந்து குஞ்சப்பனை வரையிலான மலைப்பா–தையின் வளைவுகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தியும், வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய பகுதிகளில் வேகத்தடை அமைக்கும் பணியும் கடந்த 3 மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்தது.
ஆனால் பெரும்பாலான பகுதிகளில் சாலை பணி மற்றும் வேகத்தடை அமைக்கும் பணி 90 சதவிகிதம் முடிந்த பின்னரும் மீதமுள்ள 10 சதவிகித பணிகளை முடிக்காமலேயே உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணி 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமலேயே உள்ளது.
இதனால் சிறிய வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அரவேணு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு கடத்தல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மேனகா, ஏட்டு சுமதி, முருகேசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போலீசார் குஞ்சப்பனை சோதனை சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு மினிலாரி வந்தது. அதனை போலீசார் மறித்து சோதனை நடத்தினர்.
அப்போது அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி அதிகளவில் இருந்தது.
இதையடுத்து டிரைவர் ஜோசப் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழ் கோத்தகிரி மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து கூடுதல் விலை கொடுத்து அரிசிகளை வாங்கி, மேட்டுப்பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
மேலும் கடத்தப்பட்ட 2 டன் அரிசியை பறிமுதல் செய்து, ஊட்டியில் உள்ள அரிசி கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
- அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
- பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.
ஊட்டி,
கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரையில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை தாங்கி அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் தாசில்தார் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.தேவா்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம், தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு பொதுமக்கள் உள்பட பலா் முகாமில் கலந்து கொண்டனா்.
- விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
- முதல் தர தேயிலைக்கு ரூ.25 வரை விலை கிடைக்கிறது.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு தேயிலை விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள்.
மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் துரித வளர்ச்சி காலமாக உள்ளது.
தேயிலை செடியில் கொழுந்துகள் நன்கு வளர சூரிய ஒளி தேவைப்படுகிறது. அது மட்டும் இன்றி சரியான முறையில் இடுப்பொருட்கள் தெளிப்பான்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் துரித வளர்ச்சி பருவ காலமான அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், போதிய சூரிய வெளிச்சம் இல்லாததாலும் பச்சை தேயிலை மகசூல் குறைந்து உள்ளது.
வழக்கமாக டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக தேயிலை கொழுந்துகள் கருகி விடும். தற்போது பனிப்பொழிவு இல்லா விட்டாலும், தொடர் மழை, மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை காரணமாக சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் உள்ள செடிகளில் கொப்புள நோய் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி பல பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் மகசூல் வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை முன்று தயக்கமாக பிரித்து கிலோவுக்கு ரூ.18 முதல் ரூ.19 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது.
முதல் தர தேயிலைக்கு ரூ.25 வரை விலை கிடைக்கிறது. கோத்தகிரியில் மாறிய காலநிலையால் தேயிலை மகசூல் குறைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
- கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
- திரளானோர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.
கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்
எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.
இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.
ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
- சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் ஊட்டியின் முக்கியமான சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் நிறைந்து காணப்படுகிறது.அனைத்து உணவகங்கள் மற்றும் கடைவீதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களிலும் கடுமையான கூட்டம் காணப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது.இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதனால் சட்ட ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் இடையூறு இல்லாமல் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கோத்தகிரி,
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சரவணன், அசோக்கிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன் திடீரென அருகில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கை வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அசோக் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். பயந்து போன சரவணன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் மனைவி அசோக்கை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அப்போது டாக்டர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் அசோக்கிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.
அப்போது சரவணன் அறவேனு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்ததை கண்டு உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
- 3,122 வரையாடுகள் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஊட்டி,
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் 2022 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்குள் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. நீலகிரி வரையாடு திட்டம் பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடா்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாட்டினை அறிமுகம் செய்தல், நோய் கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டுக்கு சிகிச்சை அளித்தல், சோலை புல்வெளிகளை சீரமைத்தல், களப்பணியாளா்களுக்கு தளவாடங்கள் மற்றும் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை செயல்படுத்த உள்ளது.
ேமலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 7-ந் தேதியை வரையாடு தினம் என அறிவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டு, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை படி 3,122 வரையாடுகள் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மிகப் பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து அழிவுக்கு ஆளாகி உள்ளது.
மேலும் அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, அமிலத்தன்மை வாய்ந்த மரங்கள், காட்டுத் தீ, சுற்றுச்சூழல் தரவு மற்றும் பாதுகாப்புத் திட்டமிடலுக்கான புரிதல் இல்லாமை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் சில வாழ்விடப் பகுதிகளில் மட்டுமே இவை வாழ்ந்து வருகின்றன.இந்த நீலகிரி வரையாடு திட்டத்தின் மூலம் வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டும். அவற்றிற்கு உரிய வாழ்விடங்களை மேலும் பெருக்குவதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள வரையாடுகளை காப்பாற்றப்படும். இதனால் நீலகிரி வரையாடு திட்டத்துக்கு வன விலங்கு ஆா்வலா்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
- நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 3,122 வரையாடுகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன. மேலும் பதினெண்கீழ்க்கணக்கு, திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய திருக்குற்றால குறவஞ்சி பாடலிலும் வரையாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நீலகிரி வரையாடு இனம் அழிந்து வரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஆடு வகைகளை பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கையின்படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மிக பரந்த அளவில் வாழ்ந்து வந்த இந்த வரையாடு இனம், எண்ணிக்கை குறைந்து, அழிவுக்கு ஆளாகுதல், அந்நிய களைச்செடிகளின் ஆக்கிரமிப்பு, காட்டுத் தீ, சுற்றுச்சூழல் உள்ளிட்டவை காரணமாக தற்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்குள் சில வாழ்விட பகுதிகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் வரையாடுகளின் உண்மையான வாழ்விடங்கள் மீட்கப்பட்டு அவை வாழ ஏதுவான சூழலை உருவாக்கி அவற்றின் எண்ணிக்கை பெருக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை மின்நிலையம். குந்தா அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக ராட்சத குழாய்கள் மூலம் இங்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்காக பென்ஸ்டாக் பகுதியில் சர்ஜ்சாப்(காற்று போக்கி) அமைக்கப்பட்டுள்ளது. குழாய் பராமரிப்பு பணிகளுக்கு செல்லும் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு வின்ச் உள்ளது.
இந்த பகுதியில் வெளியாட்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சம்பவத்தன்று இரவு 4 போலீஸ்காரர்கள் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் வெளியில் இருந்து சத்தம் வந்தது.
உடனடியாக போலீசார் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது வெளியே 2 குட்டிகளுடன் காட்டு யானைகள் நின்றிருந்தன.
இதனால் அதிர்ச்சியான போலீஸ்காரர்கள் மின் விளக்குகளை அணைத்து விட்டு போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து யானை நிற்கிறதா என்பதை பார்த்து கொண்டே இருந்தனர்.
யானைகள் அங்கிருந்து நகராமல் அங்கேயே நின்றிருந்ததுடன், கட்டிடத்தை சுற்றி நின்று கொண்டது.
இதனால் உள்ளே இருந்த போலீசாருக்கு பயம் ஏற்பட்டது. இதற்கிடையே தகவலின் பேரில் மஞ்சூர் சப் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான போலீசார் வனத்துறையை சேர்ந்த துரையுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு கட்டிடத்தை சுற்றி யானைகள் நின்றிருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியாகினர். உள்ளே இருப்பவர்களை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக யானையை விரட்டி பட்டாசு வெடித்தனர்.
வெடி சத்தம் கேட்டதும் யானைகள் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து சென்றன. அதிகாலையில் யானைகள் முழுவதும் சென்ற பின்னர் கட்டிடத்தில் இருந்த 4 போலீஸ்காரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
போலீசார் அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த காட்டுயானைகள் அங்கு இருந்த பொருட்களை மிதித்து சேதப்படுத்தியது.
யானைகள் நடமாடத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ரேஞ்சர் சீனிவாசன் தெரிவித்தார்.
கெத்தை மின்நிலையத்தில் போலீஸ்காரர்களை விடிய விடிய காட்டு யனைகள் சிறைபிடித்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது
- வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து மாயாருக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று சாலையை கடந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.






