என் மலர்
நீலகிரி
- மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது.
- மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு மசினகுடி, மாயாறு, சீகூர், மங்களப்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. இவை மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதிகள் ஆகும். முதுமலை புலிகள் சரணாலயத்தில் வளைந்து நெளிந்து ஓடும் மாயாறு, வனவிலங்குகளுக்கு நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே காட்டு விலங்குகள் தினமும் இங்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் மசினக்குடி அருகில் உள்ள மாயாற்றுக்கு ஒரு காட்டு யானை தண்ணீர் குடிக்க வந்தது. அப்போது அங்கு மற்றொரு யானையும் பிளிறியபடி வந்தது. அப்போது 2 யானைகளும் ஒன்றுக்கொன்று முறைத்து பார்த்தபடி இருந்தன. இந்த நிலையில் அவை திடீரென ஒன்றுக்கொன்று சண்டை போட தொடங்கின. எனவே அந்தப் பகுதியில் யானைகளின் பிளிறலும், தந்தங்கள் மோதிக் கொள்ளும் சப்தமும் பெரிதாக எதிரொலித்தது. இதனைக்கேட்ட பொதுமக்கள் அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்களில் ஒரு சிலர் காட்டு யானைகள் ஆக்ரோசத்துடன் மோதிக்கொண்ட காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.
மசினகுடி மாயாறு பகுதியில் யானைகளின் பயங்கர சண்டை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு 2 யானைகளும் அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டன.
மசினகுடியில் காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை வீடியோ எடுத்த ஒருவர், அந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுவும், மசினக்குடி காட்டு யானைகளின் ஆக்ரோஷ சண்டையை, டிவிட்டர் இணையதள பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.
2 காட்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதி கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
- மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை வளங்கள், அழகுகள் நிறைந்த பகுதியாகவும், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் காணப்படுகிறது.
இங்கு நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கோடை காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி என பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடந்தது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. நாளை தொடங்கி 5 நாட்கள் வரை இந்த கண்காட்சியானது நடக்கிறது.
இந்த மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
மலர் கண்காட்சியையொட்டி, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டு 175 ஆண்டுகள் மற்றும் 125-வது மலர் கண்காட்சியை குறிக்கும் வகையில் மலர்கள் மற்றும் பல வகையான பொருட்களை கொண்டு வடிவமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் பல்லாயிரம் லில்லியம்ஸ் மலர்கள் மற்றும் கொய்மலர்களை கொண்டு பல்வேறு வகையான வனவிலங்குகள், குழந்தைகளை கவரும் வகையிலான கார்ட்டூன் பொம்மைகள், பல அலங்காரங்கள் என பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
மலர்களால் உருவாக்கப்படும் அலங்காரங்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 325 ரகங்களில் 3.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவில் உள்ள மலர்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்குகிறது.
இவை அனைத்தும் தற்போது சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது நாளை கண்காட்சியை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.
இதுதவிர இந்த ஆண்டு மலர் கண்காட்சி அரங்கினுள் 35 ஆயிரம் பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவை சிறப்பிக்கும் வகையில் காட்சி மாடங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு மலர்களின் பல வகை அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன.
- ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளில் அதிக அளவு பலாத்தோட்டங்கள் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானை, கரடி போன்ற வன விலங்குகள் சாலையில் தற்போது அதிகமாக நடமாடி வருகின்றது . இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுற்றி தஞ்சமடைந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது சாலையில் செல்லும் வானங்களை சேதப்படுத்தியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வந்தது. கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகளின் கண்களில் அகப்படாத அந்த யானை நேற்று மாலை குஞ்சப்பனை பகுதியில் உள்ள சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சிறை பிடித்தது சாலையின் நடுவில் நின்றிருந்த யானையால் அப்பகுதியில் வாகனங்கள் மேலும் கீழும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்றிருந்த அந்த யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது
- தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.
- மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும்.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன.
கோத்தகிரி சுற்றியுள்ள கூக்கல்தெரை, கக்குச்சி ,கூக்கல், கட்டப்பெட்டு, பில்லிக்கம்பை , தீனட்டி, மானியடா, நெடுகுளா போன்ற பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது பண்படுத்தி மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர், முள்ளங்கி, நூல் கோல், பீன்ஸ், பூண்டு, பட்டாணி, அவரை போன்ற மலை காய்கறிகளை விளைவித்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
மேலும் ஒரு சில விவசாயிகள் வெளிநாட்டு காய்கறிகளை சாகுபடி செய்து வருமானம் பெற்று வருகின்றனர். தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பீட்ரூட் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். பீட்ரூட் விளைந்து அறுவடைக்கு தயாரானதை அடுத்து விவசாயிகள் அதனை அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் மார்க்கெட்டில் பீட்ரூட்டுக்கான ெகாள்முதல் விலை மிகவும் குறைந்து காணப்படுகிறது. சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பீட்ரூட் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது ரூ.20 முதல் 25 ரூபாய்க்கே பீட்ரூட் விற்பனையாகி வருகிறது.இதனால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மலைக்காய்கறிகளுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது.
- இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய்(வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.
தற்போது விடுமுறை என்பதால் சஞ்சய் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் கொடநாடு செல்லும் சாலை பிரிவில் நெடுகுளா சுண்டட்டியில் உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தனர். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி,
தற்போது கோடைசீசன் தொடங்கியுள்ளதால் ஊட்டி மற்றும் குன்னூருக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பஸ் நிலைய கட்டண கழிப்பிடம் திறக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
பஸ் நிலையத்தின் 4 புறமும் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது குறித்து குன்னூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
குன்னூர்,
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் தமிழக அரசின் இந்துசமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலின் தேர் திருவிழா உற்சவம் கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கி நடந்தது. தேர்த்திருவிழா திருக்கல்யாண நிகழ்ச்சி, ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தது.
குன்னூரில் அனைத்து மதத்தினரும் இணைந்து நடத்தக்கூடிய தேர் திருவிழா இதுவாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- ஆலோசனை கூட்டம் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
- புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளை மாவட்ட செயலாளர் ஆய்வு செய்தார்.
ஊட்டி,
ஊட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் மாவட்ட அலுவலகமான ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. ஊட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, பொதுக்குழு உறுப்பினர்கள் துரை, பில்லன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.கே.எஸ். பாபு, கீழ்குந்தா பேரூர் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் சத்தியவாணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழுவினர் விவரங்களையும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகளையும் மாவட்ட செயலாளர் முபாரக் ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் ஊட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் சாகுல் அமீது, ஈஸ்வரன், மாவட்ட பிரதிநிதிகள் சத்யநாதன், முத்து, ஈஸ்வரன், சந்திரன், ராதாகிருஷ்ணன், நேரு, உதகை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தமிழ்வானி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், உமர், சண்முகம், கீழ்குந்தா பேரூராட்சி உறுப்பினர்கள் சண்முகம், மாடாகண்ணு, சாரதா, தீபா, காஞ்சனா, நாகம்மா, மாலினி, பிக்கட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் சாந்தி, நித்யா, சிவகாமி, லட்சுமி, கட்சி நிர்வாகிகள் மனோகரன், சிவகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
- கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.
- பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி காம்பைக்கடை ஹாப்பிவேலி பகுதியில் உள்ள பால் முனிஸ்வரன் கோவிலின் கட்டிட பணி கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரம் கோவில் கட்டிட பணி நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து பேரூர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் ஆசியுடன் அர்ச்சகர் சக்திவேல் தலைமையில் மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி வட்டாட்சியர் காயத்திரி, கோத்தகிரி பேரூராட்சி அலுவலர் மணிகண்டன் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சஸ்பெண்டான 5 ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
- தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின் 2 மாணவர்கள் மீதே அதிக சர்ச்சை எழுந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பிளஸ்-2 கணித தேர்வு நடந்தது. அப்போது தேர்வு எழுதிய சில மாணவர்களுக்கு, கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது.
அதன்பேரில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி தலைமையிலான கல்வி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு எழுத உதவிய காட்சிகள் பதிவாகி இருந்தன. அதன்பேரில் அறை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலராக பணியாற்றிய சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு பிளஸ்-2 தேர்வு வெளியிடப்பட்டது. அப்போது அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் சஸ்பெண்டான 5 ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கை விவரங்கள் சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு அவர் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று மாணவர்களின் பெற்றோர் ஊட்டி கலெக்டர் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். தேர்வு முடிவு அறிவிக்கப்படாததால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே உடனடியாக தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் எனவும் கூறி மனு கொடுத்தனர். அவர்களிடம் முதன்மைகல்வி அதிகாரி முனியசாமி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.
அப்போது அவர் விசாரணை அறிக்கை சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் அதற்கான முடிவு தெரியவரும் எனவும் கூறினார்.
அவர் தெரிவித்தபடி தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட 34 மாணவர்களின் 2 மாணவர்கள் மீதே அதிக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் அந்த 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்ற 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 31 பேர் தேர்ச்சி பெற்றனர். 1 மாணவர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை.
- நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
- மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது.
அரவேணு:
நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என 4 கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு என்று தனி பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15-ந் தேதி படுகர் தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி நேற்று படுகர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் முக்கிய அமைப்பான இளம் படுகர் சங்க கட்டிடத்தில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பாரம்பரிய படுகர் நடனம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 19 ஊர்த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர் , எட்டுர் தலைவர் ஆலா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள் என பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். அதனைத் தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய உணவு, உடை இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
- உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
- 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் உருளைக்கிழங்கு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கொள்முதல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை பதப்படுத்தி கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஏற்றுமதி தரம் வாய்ந்த புரூக்கோலி, ஐஸ்பெர்க் உள்ளிட்ட இங்கிலீஷ் காய்கறிகளையும் சாகுபடி செய்கின்றனர்.
இந்தநிலையில் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, கூக்கல், கட்டபெட்டு, பனஹட்டி, பில்லிக்கம்பை, கக்குச்சி, ஈளாடா, புதுத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மேலும் தங்களது நிலத்தில் விளைந்த உருளைக்கிழங்குகளை தீவிரமாக அறுவடை செய்து வருகின்றனர். ஆனால் மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கொள்முதல் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- காய்கறி மண்டிகளில் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதை நம்பி பெரும்பாலான விவசாயிகள் உயர்தர விதைகளான கிரிராஜா, குப்பிரி ஜோதி, ஜலந்தர் மற்றும் பண்ணை கிழங்கு விதைகளை சாகுபடி செய்து வந்தோம். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் உருளைக்கிழங்கு கிலோ ரூ.28 முதல் ரூ.30 வரை, மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,450-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது விலை வீழ்ச்சி ஏற்பட்டு கிலோவுக்கு ரூ.32 மட்டுமே கிடைக்கிறது. மேலும் நல்ல விதை கிழங்குகள் கிடைக்காததாலும், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி குறைந்ததாலும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






