search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padukhar Day Festival"

    • நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என 4 கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு என்று தனி பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் மே மாதம் 15-ந் தேதி படுகர் தின விழாவை கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி நேற்று படுகர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் முக்கிய அமைப்பான இளம் படுகர் சங்க கட்டிடத்தில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பாரம்பரிய படுகர் நடனம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் படுகர் இன மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் பாரம்பரிய வெள்ளை நிற உடை அணிந்து பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.

    இதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் படுகர் தின விழா கொண்டாடப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 19 ஊர்த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர் , எட்டுர் தலைவர் ஆலா கவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. படுகர் மக்களின் பாடல்கள் எழுதியவர்கள், இசையமைத்தவர்கள், பாட்டு பாடியவர்கள் என பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தனர். அதனைத் தொடர்ந்து படுக இன்னிசை கச்சேரி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களது பாரம்பரிய உணவு, உடை இசையுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    ×