search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது
    X

    கண்காட்சியில் இடம்பெறும் மலர்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் 125-வது மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது

    • கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது.
    • மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை வளங்கள், அழகுகள் நிறைந்த பகுதியாகவும், சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் காணப்படுகிறது.

    இங்கு நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    கோடை காலத்தில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி மாவட்டம் முழுவதும் கோடை விழா என்ற பெயரில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி என பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த 6-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி நடந்தது.

    கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவில் தொடங்குகிறது. நாளை தொடங்கி 5 நாட்கள் வரை இந்த கண்காட்சியானது நடக்கிறது.

    இந்த மலர் கண்காட்சியை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    மலர் கண்காட்சியையொட்டி, சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவின் நுழைவு வாயில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சியில் சிறப்பு அலங்காரமாக பல்லாயிரக்கணக்கான மலர்களை கொண்டு தேசிய பறவையான மயில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா நிறுவப்பட்டு 175 ஆண்டுகள் மற்றும் 125-வது மலர் கண்காட்சியை குறிக்கும் வகையில் மலர்கள் மற்றும் பல வகையான பொருட்களை கொண்டு வடிவமைப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மேலும் பல்லாயிரம் லில்லியம்ஸ் மலர்கள் மற்றும் கொய்மலர்களை கொண்டு பல்வேறு வகையான வனவிலங்குகள், குழந்தைகளை கவரும் வகையிலான கார்ட்டூன் பொம்மைகள், பல அலங்காரங்கள் என பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    மலர்களால் உருவாக்கப்படும் அலங்காரங்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் 325 ரகங்களில் 3.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    பூங்காவில் உள்ள மலர்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த மலர்கள் அனைத்தும் பூத்து குலுங்குகிறது.

    இவை அனைத்தும் தற்போது சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இது நாளை கண்காட்சியை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    இதுதவிர இந்த ஆண்டு மலர் கண்காட்சி அரங்கினுள் 35 ஆயிரம் பல வண்ண மலர் செடிகள் அடுக்கி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழாவை சிறப்பிக்கும் வகையில் காட்சி மாடங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு மற்றும் பல்வேறு மலர்களின் பல வகை அலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் ஆகியவை சுற்றுலா பயணிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மலர் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×