என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார்களை தேர்வு செய்வதில் கடந்த 5 ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரியநாட்டுதெரு மீனவ கிராமத்தில் மீனவ பஞ்சாயத்தார்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று நகுலன் (வயது30) என்பவர் மகாலட்சுமிநகர் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் நகுலனின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. உடனே அருகில் இருந்தவர்கள் நகுலனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர் குழுவினர் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரிநாட்டுதெருவைச் சேர்ந்த தர்மபாலன், அருண்குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி போலீசார் வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து பொதுமக்கள் அநாவசியமாக வெளியே சுற்றுவதை தடுக்க பல்வேறு பகுதிகளில் போலீசார் தடுப்பு அரண்கள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் கவிவர்மன் உள்ளிட்ட போலீசார் உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மாஸ்க் அணியாமல் வந்த நபரை நிறுத்தி ஏன் மாஸ்க் அணியவில்லை என போலீசார் கேட்டனர். அப்போது குடிபோதையில் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு அவசரமாக தான் செல்வதாகவும் தனது உறவினருக்கு உடல்நிலை சரி இல்லை என்றும் பொய் காரணம் கூறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.
இதையடுத்து அவரின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் நாகூர் அலகுகாரன் தோட்டத்தைச் சேர்ந்த செல்லமுத்து (வயது 31) என தெரியவந்தது. அப்போது திடீரென சாலையில் அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டவர் போலீசாரை ஒருமையில் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் அவர்மீது 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி வட்டத்தில் கொரோனா பரவலை தடுத்து கட்டுப்படுத்திட கோட்டாசியர் நாராயணன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. காவல் துணை கண்காணிப்பாளர் யுவபிரியா, வட்டாசியர் சண்முகம், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், நகராட்சி ஆணையர் பெ.தமிழ்செல்வி, வைத்தீஸ் வரன்கோவில் பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் பங்கேற்று பேசுகையில், கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் உடல்வலி, காய்ச்சல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்படும்.அப்போது நோய்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதனை சாதாரண காய்ச்சல் என நினைத்து மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.
இதனால் கிருமி நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தியதும் மூச்சுதிணறல் போன்ற அபாய கட்டம் ஏற்பட்டவுடன்தான் மருத்துவமனை செல்கின்றனர். காய்ச்சல் அறிகுறி இருந்தாலே பரிசோதனை மேற்கொண்டு மருத்துவர் பரிந்துரைப்படி நடந்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் தொற்று பரவலை தடுக்க வீடு, வீடாக சுகாதார களபணியாளர்கள் சென்று காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் குழந்தைகள் நல அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்ம சேகர் மற்றும் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் பால்ராஜ் வேதாரண்யம், நகரில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது செங்காதலை சாலையில் ஒரு மாட்டுக் கொட்டகையில் ஸ்கூட்டரில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருந்ததை கண்டுபிடித்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர். சாராயம் கடத்தி வந்த வீரவிநாயகம் (வயது 44) என்பவரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.






