என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அரியாண்டி குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 108 தீர்த்த குளம், ஏரி, குட்டைகள் உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டது. 

    பல குளங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு குளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி மழை வெள்ள காலத்தில் மழை நீர் வடிய வாய்க்கால்களை அமைத்து கடலுக்கு நீர் செல்லும்படி வைத்திருந்தனர். 

    நீர் வடியும் வாய்க்கால்கள் பெரும்பாலும் பாதிக்கு மேல் தூர்க்கப்பட்டு தார் சாலைகளாக மாறிவிட்டது.மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வடிய பெரும் சிரமமாக இருக்கிறது.

    இதேபோல் வேதாரண்யம் மையப் பகுதியில் போக்கு வரத்து நெரிசல் உள்ள இடமான மாரியம்மன் கோவில் தெரு ஆரம்பத்தில் அரியாண்டி குளம் என்ற அக்னி தீர்த்த குளம் உள்ளது. 

    இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேதாரண்யத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இந்த குளத்தில் தான் பயன்படுத்தி தீ அணைக்க உதவியது. தற்சமயம் இந்த குளம் வெங்காயத் தாமரை நெய்வேலி காட்டாமணி செடிகள் சூழ்ந்து குளம் இருக்கும் இடமே தெரியவில்லை. 

    மேலும் இந்த குளத்தில் மூட்டை மூட்டையாக கழிவுப் பொருளை கட்டி அந்த குளத்தில் போட்டுவிடுகிறார்கள். இதனால் துர்வாடை வீசுகிறது. 

    இந்த குளத்தின் உடைய துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தை தூர்வாரி மண்டிக்கிடக்கும் வெங்காயத் தாமரை செடி கொடிகளை அகற்றி நீரை இறைத்து சுத்தப்படுத்தி கரைகட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாழ்மங்கலம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் பூஜை விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்மங்கலத்தில் அமைந்துள்ள பேழைக்குள்ளிருந்து அருள்பாலிக்கும் ஏழு திருத்தலங்களில் ஒன்றான துமான வாழ்மங்கலம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் பூஜை விழா நடைபெற்றது.

    முன்னதாக அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும், அம்பாள் தரிசனமும் நடைபெற்றது.

    இதில் திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம், அகரக்கொந்தகை, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று ஸ்ரீ வீரமாகாளியம்மன் பேழையில் மீளவும் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
    வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்று ஊர் திரும்பிய ராணுவ வீரரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தென்னடார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார். 

    இந்நிலையில் பணி ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பிய முத்துக்குமாருக்கு தகட்டூர் கடை தெருவில் பொதுமக்கள் புடைசூழ முத்துகுமரன் கையில் தேசிய கொடி ஏந்தி மேள தாளங்கள் முழங்க தென்னடாருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனம் முன் செல்ல ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். 

    வழிநெடுகிலும் பொதுமக்கள் மாலை சால்வை அணிவித்து ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    இந்த நிகழ்ச்சியில் நாகை, திருவாரூர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சிங்காரவேல், மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் செல்வம், பிரபல ஜோதிட நிபுணர் பொதுவுடை மூர்த்தி, ஆசிரியர் பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் ஜெயகுமார், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர், திருக் கண்ணங்குடி, பட்டமங்களம், இராதாமங்களம் ஆகிய ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங் களை பார்வையிட்டு ஆய்வு செய்த பின் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும், 

    வடக்காலத்தூர் ஊராட்சியில் ரூ.16.61 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 250 மீட்டர் தொலைவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், இலுப்பூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் ரூ.297 லட்சம் மதிப்பீட்டில் 4360 மீட்டர் தொலைவில் சாலை அமைக்கும் பணியினையும், மற்றும் 23.20 லட்சம் மதிப்பீட்டில் 480 மீட்டர் தொலைவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும், 

    தேவூர் ஊராட்சியில் ரூ.14.40 இலட்சம் மதிப்பீட்டில் 270 மீட்டர் தொலைவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் தேவூர் ஊராட்சி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவெண்காடு அருகே நாங்கூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 108 வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்களில், 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக உள்ளன. ஆண்டுதோறும் இந்த பெருமாள்கள் நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருட சேவை உற்சவம் நடைபெறுtவது வழக்கம். நேற்று கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு, நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலுக்கு குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், வரதராஜ பெருமாள், வைகுண்ட நாதர், மாதவப் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், காவளம் பாடி கண்ணன் மற்றும் நாராயண பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் பக்தர்களால் பல்லக்கில் நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர்.

    கோவிலின் வாயிலில் திருமங்கை ஆழ்வார், பெருமாள்களை வரவேற்றார். பின்னர் அனைத்து பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, கருட வாகனத்தில் 11 பெருமாள்களும் கோவிலின் பந்தலில் இரவு 10 மணிக்கு எழுந்தருளினர். அப்போது திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பட்டாச்சாரியார்கள் பாடினர். மேலும் நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் பாடப்பட்டன. இதன் முடிவில் நள்ளிரவு மேளதாளம் முழங்கிட 11 பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது.

    திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் மனிதநேய வார விழா நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி வளாகத்தில் உள்ள அப்துல் காலம் அரங்கத்தில் மனிதநேய வார விழா நடைபெற்றது. 

    சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராமு, காவல்துறை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் தமிமுன் அன்சாரி மற்றும் ஊர்குடி தங்க பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கல்லூரி தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலாளர் முனைவர். பரமேஷ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள் பிரகாசம், சங்கர் கணேஷ், இயக்குநர் த. விஜயசுந்தரம், தேர்வு நெறியாளர் முனைவர். சின்னதுறை, கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.நடராஜன், துணை முதல்வர். கலியபெருமாள், மற்றும் முனைவர் கற்பகம் 

    பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் தனசேகர், நாகூர் காவல் துணை ஆய்வாளர் ராஜேஷ், தமிழ் துறை கூடுதல் தலைவர் ரமேஷ், காதர் ஷா, அப்சர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

    இறுதியில் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    இந்த ஆண்டு மாசி மக பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா 28 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வரும் 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தேர் அலங்கரிக்கும் பணிக்காக பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    வேத சிவாச் சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நாகையில் 13 ஆண்டுகளுக்கு முன்பு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 12 மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டி குடும்பத்தினர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பூம்புகார், செருதூர், விழுந்தமாவடி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற, மணிவண்ணன், செண்பகம், சிவசுப்பிரமணியன், முருகன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 12 மீனவர்கள் கடந்த 2007 - 09ம் ஆண்டு வரை மாயமாகினர்.

    மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தரக்கோரி அவர்களுடைய உறவினர்கள், நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தனர். 

    இந்நிலையில் மாயமான மீனவர்கள் இலங்கை சிறையில் இருப்பதாக நாகையில் உள்ள உறவினர்களுக்கு அங்குள்ளவர்கள் மீனவர்கள் சிறையில் இருக்கும் புகைப்படங்களை கடந்த 2014ம் ஆண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

    புகைப்படங்கள் வெளியாகி 7 வருடங்கள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கிய நிலையில், இதுவரை மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள புகைப்பட ஆதாரங்களுடன் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த மீனவர்களின் உறவினர்கள், சிறையில் உள்ளதாக கூறப்படும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்பு ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    10 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்தி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தந்தை இல்லாமல் காணாமல் போன மீனவர்களின் குழந்தைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தவித்து வருவதாகவும் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

    வேதாரண்யம் நகராட்சியில் போட்டியிடும் 21 அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி 21 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வேதாரண்யம் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் வெளியிட்டார். முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். 

    1&வது வார்டு முதல் வரிசையாக 21 வார்டு உறுப்பினர்கள் விபரம்:& 

    ராணி, ஹஜிதா அம்மாள், செந்தமிழ்செல்வி, ராதா,  செல்வி, பன்னீர்செல்வம், அம்சலேகா, சத்யா, ஜெகிலா,  சீனிவாசன், குமார பாரதி, புனிதா, குமார், வசந்தி, ரமேஷ், பாபுராஜ், சத்யா, நமசிவாயம், இளங்கோவன், கற்பகம், மணிரஞ்சனா  ஆகியோர் போட்டியிடுவார்கள் என அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் நகர் மன்றத் தலைவர் வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்பட்டார்.
     
    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் கிரிதரன், வழக்கறிஞர் சுப்பையன், மாவட்ட கவுன்சிலர் திலீபன் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் குமரவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஓய்வுபெற்ற ஆணையர் ராஜரத்தினம் உள்பட ஏராளமான முக்கிய கட்சி பிரமுகர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    நாகையில் இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்: 

    நாகை  துறைமுகத்தில் இருந்து சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்று இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து நாகை தனிப்படை போலீசார், நாகை துறைமுகம், வேதாரண்யம் கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கண்காணிப்பை பலப்படுத்தினர்.

    இந்நிலையில் நேற்றிரவு நாகை துறைமுகம் அருகே சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார், ஒரு லோடு வேனை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
     
    அப்போது காரில் வந்த 6 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், லோடு வேனையும், காரையும் சோதனையிட்டனர்.

    அப்போது லோடு வேனில் தவிடு மூட்டைக்கு அடியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 500 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர் சிங்காரவேல், சீர்காழி மற்றும் தேனியை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், மணிவாசகம், உமாபதி உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களும், ஒரு லோடு வேனும், பைபர் படகு ஒன்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 

    தனிப்படை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து  கஞ்சா பொட்டலங்கள் லோடு வேன் மூலம் நாகை துறைமுகத்திற்கு கடத்தி வரப்பட்டதும், பின்னர் படகு மூலம் இலங்கைக்கு அதனை கடத்திச் செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.

    தொடர்ந்து கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தெரிவித்துள்ளார்.

    வேளாக்குறிச்சி ஆதீனம் மணிவிழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    வேதம் நிறைந்த தமிழ்நாட்டின் கண் உள்ள புனிதமான சைவ ஆதீனங்களில் மாநிலத்தின் ஜீவநதி என போற்றப்படும் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளதும், 14-ம் நூற்றாண்டில், சிவபுரம் சத்தியஞான தீர்க்கதரிசிகளால் தோற்றுவிக்கப்பட்டதுமான புகழ்மிக்க திருக்கைலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மணி விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டைமண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்புகலூர் ஆதீன இளவரசு ஸ்ரீஅஜபா நடேஸ்வர சுவாமிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
    கீழ்வேளூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் இரண்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது.

    மூன்றாவதாக இருந்த மெயின் கதவை உடைக்க முடியாமல் அப்படியே போட்டு விட்டு மர்ம நபர்கள் தப்பியதும்  தெரிய வந்தது.
     
    இதனால் கல்லாவில் இருந்த ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் பணம் மற்றும் 15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் தப்பியது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ×