என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வாக்காளர் மெக்கானிக் கையெழுத்தை போலியாக போட்டு முன்மொழி கடிதம் கொடுத்ததாக கூறி நாகை நகராட்சி 33&வது வார்டில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி 33-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட ரவி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வழங்கிய ஆவணங்களில் முன்மொழி கடிதத்தில் அதே பகுதியை சேர்ந்த வாக்காளர் கார்த்திக் என்பவரின் கையெழுத்திட்டு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று நாகை நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள், முன் மொழி கடிதம் கொடுத்த மெக்கானிக் கார்த்திக்கை தொடர்புகொண்டு பேசியபோது அவர் தான் யாருக்கும் எந்த கடிதமும் கொடுக்கவில்லை, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் யார் என்றே தெரியாது, என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து மெக்கானிக் உடையோடு அலுவலகத்துக்கு வந்த கார்த்திக் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். வாக்காளருக்கே தெரியாமல், அவருடைய முகவரி, கையெழுத்துடன் முன்மொழி கடிதம் கொடுத்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரவியின் வேட்புமனுவை தேர்தல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
    நாகப்பட்டினம்:

    கடந்த 31ஆம் தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை, காரைக்கால் மீனவர்கள் 21 பேரையும் அவர்களது இரு விசைப்படகுகளும் இலங்கை மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர். 

    இதற்கு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்களைப் பிடித்து செல்வதும் இலங்கை தமிழ் மீனவர்கள் இருவர் உயிரிழப்பிற்கு அவர்களே காரணம் என்றும் கூறி இலங்கையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவங்களால் இந்திய இலங்கை இருநாட்டு மீனவர்களுக்கு இடையே கடற்பரப்பில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. 

    இதையடுத்து கடலில் சுமூகமாக இருநாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

    இதனிடையே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம், இந்திய கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்லுங்கள் என தமிழக அரசு அறிவுறுத்தியதை தொடர்ந்து, நாகை மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதற்கிடையே எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடித்தால், விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பதுடன் சம்பந்தப்பட்ட விசைப்படகு, 1 மாதம் கடலுக்குள் செல்ல அனுமதிப்பது இல்லை என்று நாகை மீனவர்கள் முடிவெடுத்துள்ளனர். 

    இந்த அறிவிப்பினை துறைமுகம் மற்றும் அப்பகுதி கடலோர மீனவ கிராமங்களில் அவர்கள் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர். 

    இதையடுத்து நாகை அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் கல்லாறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி அடைக்கப்பட்ட திருக்கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா நடந்தது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோவிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    பின்னாளில், இந்தக் கோவிலுக்கு வந்த சமயக் குரவர்களான 
    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத் 
    தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் இதில் அப்பர் சுவாமிகள் பாடலில் கதவைத் திறக்கவும், சம்பந்தர் பாடலில் கதவை 
    மீண்டும் திருக்காப்பு செய்ததாகவும் ஐதீகம்.

    இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா 
    நடைபெற்று வரும் நிலையில் மூடிப்பட்டிருந்த வெள்ளிக்கவச 
    திருக்கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகளான ஆசான் முத்துக்குமாரசுவாமி, பரஞ்ஜோதி தேசிகர் கொண்ட குழுவினர் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.

    அப்போது 10 திருப்பதிக பாடல்களுக்கு பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கதவு திறக்கப்பட்டடு மணவாள சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. 

    இதில் கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி குடும்பத்தினர், ஸ்தலத்தார் கயிலை மணி வேதரத்னம், நகராட்சி பொறியாளர் மோகன் உட்பட ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    நாகை தேவூர் தேவ துர்க்கையம்மன் கோவிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் தை வெள்ளியையொட்டி 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

    திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எனவும் பிரார்த்தனையோடு குத்துவிளக்கு ஏற்றி, 108 வேத மந்திரங்கள் முழங்க குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர். 

    தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    திருக்குவளை அருகே தெற்குபனையூரில் நூலகம் திறப்பு விழா நடந்தது.
    நாகப்பட்டினம்:

    நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் முக்கிய இடங்களில் நூலகத்தினை தொடங்க உத்தரவிட்டதின் அடிப்படையில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் கயல்விழி மேற்பார்வையில், முதற்கட்டமாக திருக்குவளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்குபனையூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நூலகத்தினை திறந்து வைத்தார்.

    இந்த நூலகத்தில் மாணவர்களின் எதிர்காலத்திற்கும், இளைஞர்களின் வாழ்க்கையினை நெறிமுறைபடுத்தும் வகையிலும், இல்லத்தரசிகளின் பொழுதினை இனிமையாக்கும் வகையிலும், சிறுவா¢களின் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும், முதியவர்களின் பொழுதினை பயனுள்ளதாக மாற்றும் வகையில் புராண கதைகளும், போட்டித் தேர்விற்கு தயாராகும் நபர்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் வாழ்க்கை முறை, கோட்பாடுகள் மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய நூல்களும் உள்ளன. இதனை பொது மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
    நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படும் வகையில் வாலிபால் போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ் முன்னிலை வகித்தார்.

    போட்டியில் போலீஸ் துறையின் எவரெஸ்ட் அணிக்கும், நாகை பீச் அணிக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கூறுகையில்,போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த வாலிபால் போட்டி நடத்தப்படுகிறது என்றார்.

    இதில்   போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், விஜய் லூர்துபிரவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராஜ் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழாவில் திருக்கதவு திறக்க, அடைக்க பாடும் வரலாறு திருவிழா இன்று மாலை நடக்கிறது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு உடையது. 

    வேதங்கள் பூஜைசெய்து மூடி கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று சிறப்புமிக்க கோவில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

    இந்த ஆண்டு மாசி மக பெருவிழா 29&1&2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் வரலாற்று சிறப்புமிக்க திருவிழாவான மூடிக்கிடந்த கதவை அப்பரும் சம்பந்தரும் தேவாரப் பதிகங்கள் பாடி பிறந்த வரலாறு நிகழ்ச்சி இன்று 4-2-2022 மாலை நடைபெறுகிறது.

    இந்த விழாவில் அப்பரும் சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப் பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடி மரத்தடியில் நிறுத்தப்பட்டு மூடிக்கிடந்த கதவைத் திறக்கும் வரலாற்று திருவிழாவை யொட்டி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கதவை கபாட பூஜைகள் செய்து தேவார ஓதுவார்கள் தேவார பதிகங்களை பாட கதவு திறக்கப்படும்.

    அப்போது சன்னதியில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக காட்சி அளிக்கும்.

    இந்த கண்கொள்ளாக்காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்க கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் அரசின் வழிகாட்டுதல் படி நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
    திருமருகல் அருகே சி.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சி.பி.சி.எல் நிறுவனத்தை கண்டித்து நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு சங்கம் சார்பில் ஒருநாள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் லிம்மிட்டெட் நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது.

    சுமார் 618 ஏக்கர் பரப்பளவில், ரூ.38 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய தொகை வழங்க வலியுறுத்தியும் அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் சி.பி.சி.எல். பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டால் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இதில் சி.பி.சி எல் ஆலை விரிவாக்கத்திற்காக தங்களது விளைநிலங்களை இழக்கும், விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு முன் முட்டம் கிராமத்திற்கு அரசால் வழங்கப்பட்ட நியாயமான இழப்பீட்டை வழங்கிட வேண்டும், சி.பி.சி.எல் நிறுவனத்தால் பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் மற்றும் சாகுபடிதாரர்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் நிரந்தர பணிக்கு உத்திரவாதம் வழங்கிடவும், பாதிக்கப்படும் விவசாய சாகுபடிதாரர் மற்றும் அனைத்து விவசாய கூலி தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கும் மாற்று வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும்.

    சி.பி.சி.எல் நிறுவனம் சுற்றியுள்ள பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், குத்தாலம், முட்டம் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களை பாதிக்காத வகையில் கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, வாழ்வதற்கு ஏற்ற சுற்றுச்சூழல், குடிநீர் ஆதாரம் ஆகியவற்றுக்கான பாதுகாப்பை வெளிப்படைத் தன்மையோடு உறுதி செய்திட வேண்டும்.30 ஆண்டுகளுக்கு முன் கொடுத்து இதுவரை நடைமுறைபடுத்தாத வாக்குறுதியை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை விளை நிலங்களில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணா விரத போராட் டத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் சுமூக தீர்வு ஏற்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவிலுள்ள தோப்பு புறம் போக்கு பகுதியில் பண்ணைக்குட்டை அமைக்க 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்ற சென்றனர்.

    அப்போது அங்கு உள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த தோப்பு புறம்போக்கு இடத்தில் மீனவர்களுக்கு வீடு கட்டுவதற்காக இடம் கேட்டுள்ளோம் எனவே குளம் வெட்ட கூடாது என்று தடுத்துள்ளனர்.

    உடனடியாக 100 நாள் வேலை வாய்ப்பில் பணியாற்றிய 52 தொழிலாளர்களும் வேதாரணியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மண்வெட்டி கூடையுடன் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து வேலை செய்ய அனுமதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

    தகவல் அறிந்த புஷ்பவனம் ஊராட்சி மன்ற தலைவர் நாடிமுத்து, துணைத் தலைவர் ராஜகோபாலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம், பணி மேற்பார்வையாளர் வேல் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் நாளை இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வேலை வழங்கப்படும் என ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராமலிங்கம் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
    திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் இல்ல திருமண விழா வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை 5-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் மாலை 6.00 மணிக்கு வரவேற்பு விழாவும்,6-ந்தேதி தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மகாராஜா மஹாலில் காலை திருமண விழாவும் நடைபெற உள்ளது.
    வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததால் நாகை நகராட்சி அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை நகராட்சி தேர்தலில் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் எம்.சி.ஏ. பட்டதாரியான அமிர்தவள்ளி (வயது 33) என்பவர் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்குவதற்காக நாகை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

    அப்போது அவருடைய பெயர், வரிசை எண் உள்ளிட்டவைகள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக அந்த படிவத்தில் இடம்பெற்றிருந்தது.

    இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி தான் உயிரோடு இருக்கும்போது தனது பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரோடு இடம்பெற்றது எப்படி? இந்த தவறுக்கு யார் காரணம்? என்று நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டார். ஆனாலும் அங்கு அவருக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவள்ளி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் வாங்குவதற்காக நேற்று காலை எனது கணவருடன் வந்தேன்.

    வேட்பு மனு படிவத்தை கேட்டபோது நான் இறந்து விட்டதாகவும், இதனால் என்னுடைய பெயர் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் அட்டவணையில் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து நகராட்சி அலுவலர்கள் எனக்கு வேட்பு மனு படிவம் தர மறுத்து விட்டனர்.

    ஆனால் முதன்மைப் பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளது. இப்போது துணை பட்டியலில் என்னுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இடம் பெற்றிருக்கிறது என நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

    நான் தான் அமிர்தவள்ளி என்பதை நிரூபிக்க எனது ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை காட்டியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

    இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் மணிவேலன் நேரில் வந்து இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்தார்.


    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் யோகா பயிற்சி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு யோகா பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சியும் அளிக்கப்பட்டது. 

    யோகப் பயிற்சி செய்வதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், உடல் சுறுசுறுப்போடு செயல்படும் என யோகா பயிற்றுநர் பாண்டியன் விளக்கம் அளித்தார். 

    இதில் கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ்.பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் ராமபாலன், தேர்வு நெறியாளர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சிவராம கிருஷ்ணன், முதலாம் ஆண்டு துறைத்தலைவர் தீபா, முனைவர் தாரணி, உடற்கல்வி இயக்குனர் வேலவன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ& மாணவிகள், பேராசிரியர்கள கலந்து கொண்டனர்.
    ×