என் மலர்tooltip icon

    மதுரை

    • ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    • மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 27 ஆயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கரிசல்குளம், பனையூர், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மில்களில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல் வந்தது.

    உடனே மதுரை மண்டல ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்துவது என்று முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து குடிமைப்பொருள் உணவு வழங்கல் புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியா தலைமையில் அதிகாரிகள் பல்வேறு குழுவாகப் பிரிந்து ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது கரிசல்குளம் அரிசி ஆலையில் பதுக்கி வைத்திருந்த 8500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல பனையூர் மில்லில் 14 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அனுப்பானடி அரிசி ஆலையிலும் 4700 கிலோ ரேசன் அரிசி மூட்டைகள் சிக்கியது.

    இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், கையும் களவுமாக பிடிபட்ட பனையூர் அரிசி ஆலை உரிமையாளர் முத்து கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். எனவே கோழி தீவனம் என்ற பெயரில், அரிசி கடத்தல் கும்பல் புதிய தொழிலுக்கு மாறி உள்ளது. இதன்படி அவர்கள் மாவட்டம் முழுவதிலும் ரேஷன் அரிசிகளை கடத்தி வந்து ரைஸ் மில்லில் பதுக்கி வைத்து உள்ளனர். அதன் பிறகு இந்த கும்பல் மில்லில் ரேசன் அரிசியை அரைத்து கோழி தீவனமாக மாற்றி, வெளி மாவட்டங்களுக்கு கடத்திச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்து உள்ளது.

    பனையூர் ஆலையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து கோழி தீவனமாக மாற்றும் வேலையில் முத்து கிருஷ்ணனுக்கு மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, செல்வம், கண்ணாயிர மூர்த்தி ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

    அரிசி ஆலை உரிமையாளர் முத்துகிருஷ்ணன் போலீசில் பிடிபட்டது தெரிய வந்ததும் மேற்கண்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனைத் தொடர்ந்து முத்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 27 ஆயிரத்து 200 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்.

    • முகம் முழுவதும் ரத்த வழிய நடக்க முடியாத நிலையில் அவர்கள் இருந்தனர்.
    • காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய அடித்ததாக தெரிவித்தனர்.

    துாத்துகுடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் 19ந் தேதி விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் காவல்நிலையத்தில் கடுமையாக தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று விசாரணை நடைபெற்ற போது முக்கிய சாட்சியான ராஜாசிங் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 


    இந்த சம்பவம் நடைபெற்ற போது நான் சிறையில் இருந்தேன். சாப்பிட செல்லும் போதுதான் அவர்களை நான் பார்த்தேன், இருவரும் நடக்க முடியாமல் இருந்தனர். முகம் முழுவதும் ரத்த வழிய அவர்கள் சோர்வாக இருந்தனர். அவர்களிடம் நான் கேட்ட போது சாத்தான்குளத்தில் வைத்து அடித்து விட்டதாக கூறினர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய காவல்துறையினர் அடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தேன்.

    வேறு வழக்கு ஒன்றிற்காக என்னையும் சாத்தான் குளம் காவல்நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தூண்டுதலின் பேரில் மூன்று நாட்கள் வைத்து அடித்து சித்தரவதை செய்து கொடுமைப்படுத்தினர். மற்றொரு காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்று அடித்தனர். இதனால் எனது உடலில் படுகாயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். செய்யாத குற்றத்திற்காக என்னை சித்தரவதை செய்து கையெழுத்து வாங்கி சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மதுரையில் விடிய விடிய கனமழையால் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் சூழ்ந்தது.
    • சகதி காடான வீதிகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.



    மதுரையில் பெய்த மழையால் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை நின்றிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவு பலத்த இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். கனமழை காரணமாக கண்மாய் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

    மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க் டவுன், ஒத்தக்கடை, ஊமச்சிக்குளம், அய்யர்பங்களா, திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக மழை தண்ணீர் கண்மாய்களுக்கு செல்ல வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் தண்ணீர் தேங்கி சகதிகாடாக உள்ளதால் மக்கள் நடக்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் இரவு பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு-

    சிட்டம்பட்டி -13, கள்ளந்திரி -10, தனியா மங்கலம்- 14, மேலூர் -8, சாத்தையாறு அணை- 9, வாடிப்பட்டி -22, உசிலம்பட்டி -5, மதுரை வடக்கு -21, தல்லாகுளம் -19, விரகனூர் -7, விமான நிலையம் -8, இடைய பட்டி -40, புலிப்பட்டி -40, சோழவந்தான் -11, மேட்டுப்பட்டி -19, பேரையூர்- 45, ஆண்டிப்பட்டி -29.

    மதுரை மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.9 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 15 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 763கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையை பொறுத்தவரை நீர்மட்டம் 69.46 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1759 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதுரை நகர குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 1819 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • 19 மாதங்களுக்கு முன்பு மாயமான பெண்ணை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன்? என்று போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    • மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தூங்கா ரெட்டியபட்டியைச் சேர்ந்த சிவக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2011 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பாளையத்தில் தனி குடித்தனம் இருந்தோம். என் மனைவி டெய்லராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6.3.2021-ந் தேதி அன்று எனது மனைவி மாயமானார். இது தொடர்பாக புதியம்பட்டி போலீசில் புகார் செய்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை என் மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனு தாரர் வக்கீல் சத்திய மூர்த்தி ஆஜராகி, மனுதாரர் மனைவியை கண்டு பிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    19 மாதங்களாக அவரை கண்டுபிடிக்கவும் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்கவும் இல்லை. எனவே போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரர் மனைவியை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    அப்போது நீதிபதிகள் மனுதாரர் மனைவியை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • திருவண்ணாமலை, திருப்பதி வழியாக மதுரை- கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை- கச்சிகுடா இடையேயான வாராந்திர சிறப்பு ரெயில், டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கச்சிகுடாவில் இருந்து வருகிற 7-ந் தேதி முதல் ஜனவரி 30-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வரும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து வருகிற 9-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை புதன் கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 7.05 மணிக்கு கச்சிகுடா செல்லும். இந்த ரெயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையேயான வாராந்திர ரெயில் சேவை நவம்பரில் இருந்து டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    எர்ணாகுளத்தில் இருந்து வருகிற 19-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 20-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு எர்ணாகுளம் செல்லும். இந்த ரெயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினத்தில் நின்று செல்லும்.மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
    • இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.

    மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-

    பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.

    பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.

    குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.

    அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலுக்கு தனியார் நிறுவனம் சார்பில் www.maduraimeenakshi.org இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. அது இப்போது மூடப்பட்டு விட்டது. தமிழக அரசு சார்பில் https://maduraimeenakshi.hrce.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் பழைய இணையதளம் மூலம் புதிய இணையத்தை பார்வையிடலாம். இதன் மூலம் மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவிலுக்கு நன்கொ டை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அரசு இணையதள முகவரி தவிர கோவிலுக்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளழகர் கோவில் நிலத்தை காட்டி ரூ.70 லட்சம் மோசடி செய்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்க நாயகி முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி பட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.

    மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

    இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே சட்டத்தின் நோக்கம்.
    • சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது.

    மதுரை:

    திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, உய்யகொண்டான் திருமலை கிராமத்தில் உள்ள 51 சென்ட் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்கு முறையான அனுமதி பெறவில்லை. இந்த முறைகேடு குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

    எனவே அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க வேண்டும். இந்த முறைகேட்டை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஒரு கட்டிடத்தை அங்கீகாரமின்றி கட்டலாம். பின்னர் அதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை அதிகாரிகள் ஊக்குவிக்கக்கூடாது. அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சட்டமாகும்.

    கட்டிடம் முறையாக கட்டப்பட்டு உள்ளது என்பதை ஆய்வு செய்து, நிறைவுச்சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், நீர், பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

    நகரத்தில் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனாலும் சட்ட விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவது தடையில்லாமல் நடக்கிறது. விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளன.

    இந்த வழிகாட்டுதல்களை இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே அங்கீகரிக்கப்படாமல் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை 2 வாரத்தில் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

    இது தொடர்பான அறிக்கையை வருகிற 10-ந்தேதிக்குள் இந்த கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    • மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    மதுரை:

    மதுரை கே.புதூரில் ஆயுதங்களுடன் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மதுரை வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனையின் பேரில், கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று காந்திபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு ஐ.டி.ஐ. மைதானத்தில் 10 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இருந்தபோதிலும் அவர்களில் 6 பேரை, தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 அரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து போலீசார் 6 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் அழகர் கோவில் மெயின் ரோடு, மாத்தூர் காலனியைச் சேர்ந்த அந்தோணி (வயது 38), பெருங்குடி, அம்பேத்கர் நகர் மகாலிங்கம் மகன் தொட்டி முருகன் (23), மாரிமுத்து மகன் கருமலை (23), பெருங்குடி இருளப்பன் (28), பெருங்குடி, அம்பேத்கர் நகர், பால்பாண்டி மகன் பாண்டியராஜன் (23), பெருங்குடி மேரி மாதா நகர், கணேசன் மகன் பழனி முருகன் (22) என்பது தெரிய வந்தது. அவர்கள் மதுரை கொள்ளையில் ஈடுபடுவதற்காக ஒன்றாக கூடி திட்டமிட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேரையும் கே.புதூர் போலீசார் கைது செய்தனர்.

    ×