search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான பெண்ணை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன்? -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
    X

    மாயமான பெண்ணை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன்? -மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

    • 19 மாதங்களுக்கு முன்பு மாயமான பெண்ணை இதுவரை கண்டுபிடிக்காதது ஏன்? என்று போலீசாருக்கு, மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
    • மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா தூங்கா ரெட்டியபட்டியைச் சேர்ந்த சிவக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், சங்கீதா என்பவருக்கும் கடந்த 2011 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பாளையத்தில் தனி குடித்தனம் இருந்தோம். என் மனைவி டெய்லராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6.3.2021-ந் தேதி அன்று எனது மனைவி மாயமானார். இது தொடர்பாக புதியம்பட்டி போலீசில் புகார் செய்தேன். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை என் மனைவியை கண்டுபிடித்து ஒப்படைக்க எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை நீதிபதி டி.ராஜா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனு தாரர் வக்கீல் சத்திய மூர்த்தி ஆஜராகி, மனுதாரர் மனைவியை கண்டு பிடிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    19 மாதங்களாக அவரை கண்டுபிடிக்கவும் இல்லை. இந்த வழக்கை முடித்து வைக்கவும் இல்லை. எனவே போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரர் மனைவியை மீட்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    அப்போது நீதிபதிகள் மனுதாரர் மனைவியை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம்? என கேள்வி எழுப்பினர்.

    விசாரணை முடிவில், மனுதாரர் மனைவியை ஒரு வாரத்தில் மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    Next Story
    ×