என் மலர்
கிருஷ்ணகிரி
பர்கூர்:
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதிக்குட்பட்ட தொகரப்பள்ளி துணை மின் நிலையம் அருகே தேர்தல் பணிக்குழு உதவி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஏட்டுகள் மகேந்திரன் சுமதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் வேனில் ரூ.4 லட்சத்து 94 ஆயிரம் பணம் ஆவணம் இன்றி எடுத்துச் சென்றுள்ளார்.
இதை தேர்தல் பணிக்குழு உதவி பொறியாளர் கோவிந்தராஜ் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பர்கூர் தாசில்தார் சண்முகம், போச்சம்பள்ளி தாசில்தார் குமரவேலிடம் ரூ.4 லட்சம் 94 ஆயிரம் பணத்தை ஒப்படைத்தனர். இதனால் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட பழையூர் சோதனைச்சாவடியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சக்தி, சப்- இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக காரில் சேகர் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 820 வைத்திருந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு பென்னாகரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 31), கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர், விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் முருகேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்த கங்கசந்திரத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 26). அதேபகுதியை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் (25), லோகேஷ் (25). சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். விஷ்ணு மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்றார். அவர்கள் குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மார்க்கண்டேய நதி பாலத்தின் மீது சென்ற போது அந்த வழியாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த ஸ்ரீதர், லோகேஷ் ஆகியோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பலியான விஷ்ணுவிற்கு கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுமாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி (வயது 60). அதே ஊரை சேர்ந்தவர் காந்தி (45), இவர்கள் 2 பேரும் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக அஞ்செட்டி போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊத்தங்கரை தாலுகா எட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது 23). கூலித் தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராசு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூரை சேர்ந்தவர் கதிரவன் (வயது 62). விவசாயி. மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கதிரவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், குண்டுகொல்லை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கிரானைட் கம்பெனியின் பின்புறம் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த கருக்கன்சாவடி ஈஸ்வரன் (வயது 42), மாது (49), காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த குணா (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பாண்டவர் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வயலில் டிராக்டர் மூலம் உழவு பணியை மேற்கொண்டார். அப்போது வரப்பு பகுதியில் சென்ற போது நிலைதடுமாறி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த வெங்கடாசலம் டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பர்கூர் தாலுகா கண்ணன்டஅள்ளியை சேர்ந்தவர் அஜித் (வயது 52). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் காகன்கரை -மாடரஅள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஜித் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தளி அருகே உள்ள கெம்பத்தப்பள்ளியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (வயது 25). விவசாயி. இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கோபித்துக் கொண்டு அந்தோணிசாமியின் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த அநதோணிசாமி விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தோணிசாமி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






