என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமீத் (வயது 26). இவர் ஓசூரில் காமராஜ் நகரில் தங்கி கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. அமீத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த அமீத் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே விபத்தில் டீ மாஸ்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள சூரங்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் (வயது 30). டீ மாஸ்டர். சம்பவத்தன்று இவர் தனது மொட்டில் பொம்மை பள்ளியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜிஞ்சம்பட்டி கூட்டுரோடு அருகே சென்றபோது எதிரே வந்த கோழி லோடு ஏற்றிய மினி லாரி மாதப்பன் ஓட்டிச்சென்ற மெபாட் மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடிய மாதவனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள், மாதப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மாதப்பனுக்கு மாதேஸ்வரி என்ற மனைவியும், மோகன ரூபன் என்ற மகனும், தாரிகா, கீர்த்தனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
    போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதே போல், மத்தூர் பஸ் நிலையம் மற்றும் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

    இது தொடர்பான புகார்களின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க, ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி மேற்பார்வையில், மத்தூர் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார், சம்பவம் நடந்்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 2 பேர் மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. விசாரணையில், அனுமன்தீர்த்தம் பகுதியை சேர்ந்த தணிகாச்சலம் (வயது 35), வெங்கடேசன் (30) ஆகியோர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

    தணிகாச்சலம், தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். வெங்கடேசன், அனுமன்தீர்த்தம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 திருட்டு மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.
    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி போலீசார் சிகரலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற சதன் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஓசூரில் வாகனம் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    தர்மபுரி மாவட்டம் குரும்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிவேல் (வயது 25). லாரி டிரைவர். இவர் ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த முனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர் அருகே யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன.

    தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவு, தண்ணீரை தேடி காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த யானைகள், தனித்தனியாகவும், கூட்டமாகவும் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பீதி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், ஓசூர் அருகே தொரப்பள்ளி பக்கமுள்ள திருச்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா (60) என்ற விவசாயி இன்று அதிகாலையில் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒற்றை யானை திடீரென அவரை துரத்திச் சென்று, கால்களால் மிதித்தது இதில், ராஜப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அந்த யானை மீண்டும் காட்டுக்குள் சென்று பதுங்கி விட்டது. இறந்துபோன ராஜப்பாவிற்கு, பாப்பம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் டவுன் போலீசார், பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கவுதம் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1,300 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஊத்தங்கரை அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    ஊத்தங்கரை அருகே உள்ள லக்கம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதியவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெரியார் சிலை எரிந்து நாசமானதற்கு காரணம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான முருகவேல் என்பது தெரியவந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டிநாயனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது.

    இந்த சமத்துவபுரம் வளாகத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் டயரை கொழுத்தி, பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளதாக, அப்பகுதியில் வசிப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அத்துடன் மாவட்ட திக சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து காட்டி நாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சரவணன், மகாராஜகடை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், பெரியார் சிலை எரிந்து நாசமானதற்கு காரணம் அதே சமத்துவபுரத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளியான முருகவேல் (வயது38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து போலீசில் முருகவேல் அளித்துள்ள வாக்குமூலத்தில், தான் அதிகாலை குளிர்காய பெரியார் சிலை அருகில் டயரை கொளுத்தினேன். அது எரிந்ததில், பெரியார் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காய்ந்து போன பூமாலையில் தீ பற்றிக் கொண்டது. இதனால் சிலை சேதம் அடைந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கிருந்து நானும் எனது வீட்டிற்கு சென்றுவிட்டேன். பின்னர், அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் நானும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டேன். அப்போது போலீசாரிடம், அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சிலைக்கு தீ வைத்துவிட்டு தப்பியதை நான் பார்த்தேன் என கூறினேன்.

    பின்னர், என்னை தனியாக அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உண்மையை நான் ஒப்புக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.

    தளி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ளது மதகொண்டப்பள்ளி. இங்குள்ள அரசு பள்ளி முன்பு தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கார்த்திகேயன், சசிக்குமார், மணிமேகலை மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தளியை சேர்ந்த தனசேகர் (வயது 60) என்பதும், வீட்டு குத்தகை பணத்தை வாங்கி வந்தது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் அந்த பணத்தை தேன்கனிக்கோட்டை தாசில்தார் தண்டபாணியிடம் ஒப்படைத்தனர்.
    பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அடுத்த கத்தாழை மேடு பகுதியில் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டு இருந்த பெரியாரின் சிலைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

    பெரியாரின் வெண்கல சிலைக்கு தீவைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தீவைப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆந்திர மாநில எல்லையான குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட அரியனப்பள்ளி சோதனைச்சாவடிகளில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையையொட்டி, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லையோரங்களில் 11 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு போலீசார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லை,, கர்நாடக எல்லையான நேரலகிரி, ஓசூர் தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ்., பூனப்பள்ளி, கர்னூர், பாகலூர், கக்கனூர் ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் பர்கூர் தொகுதிக்குட்பட்ட ஆந்திர மாநில எல்லையான வரமலகுண்டா, குருவிநாயனப்பள்ளி, தளி தொகுதிக்குட்பட்ட கர்நாடக மாநில எல்லையான கும்ளாபுரம் மற்றும் கெம்பட்டி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மது கடத்தலை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×