என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் கடந்த 19-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டனர். 11 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். இதுவரை மாவட்டத்தில் 43 ஆயிரத்து 782 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43 ஆயிரத்து 350 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 79 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    உள்ளாட்சி தேர்தலில் இந்து முன்னேற்ற கழகம் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    இந்து முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஹரிஹர சுதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் கோபிநாத் கலந்து கொண்டு இயக்கத்தின் வளர்ச்சி பணிகள், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, உள்ளாட்சி தேர்தலில் இந்து முன்னேற்ற கழகம் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து விளக்கி பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு நிர்வாகிகள் மணி, உதயகுமார், சம்பத்குமார், தங்க தமிழ்ச்செல்வன், சாஜன், ரஞ்சித் குமார், விக்னேஷ், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    ஓசூர் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தேர்பேட்டையை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 24). தனியார் நிறுவன ஊழியர். இவர் ஓசூரில் சீதாராம்மேடு அருகில் நடந்து சென்றபோது 2 பேர் வழிமறித்து செல்போனை பறித்தனர். அப்போது, சசிக்குமார் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து அந்த 2 பேரையும் பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஓசூர் பார்வதி நகர் குமார் (வயது 25), கும்பாரபேட்டை அஜய்குமார் (24) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா செம்படமுத்தூர் அருகே உள்ள கும்மனூரை சேர்ந்தவர் சென்னம்மாள் (வயது 87). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.
    அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா - இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன், சிஎஸ்கே அணி கேப்டன் தல டோனி மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
    சென்னை:

    அன்லான் ஆர்ட் சலூன் திறப்பு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அழகு சாதனவியல் ஹேர் ஸ்டைல் சலூன் (Cosmetology Hair style & Medi Saloon) என்று அழைக்கப்படும், இங்கு தலை முடி, நகம், தோல், இமை உள்ளிட்ட அனைத்திற்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு சரிசெய்யப்படும். டாக்டர் நிஷா மற்றும் அப்பு ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனின் நிறுவனர்கள். 

    எம் எஸ் டோனி

    இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் என்.சீனிவாசன், சிஎஸ்கே அணி கேப்டன் டோனி ஆகியோர் அன்லான் ஆர்ட் சலூனை திறந்து வைத்து அறிமுகப்படுத்தினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் ஐஷரி கணேஷ், கலா மாஸ்டர், நடிகர்கள் விக்ரம் பிரபு, கலையரசன், ஓவியர் மற்றும் நடிகர் ஏ.பி.ஶ்ரீதர், பிக்பாஸ் ஷாரிக், பிக்பாஸ் நமீதா மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை சிறப்பித்த தல டோனி, அதன் பின் அங்கு வந்திருந்த சிறுவர்களுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 80 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 38 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் 2வது அலை பரவுதல் தடுப்பு ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு 18வது வாரமாக நேற்று காலை வழக்கம்போல் திறக்கப்பட்டது.

    இந்த சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கேயம் இன காளைகள் வளர்ப்போர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனை சந்தையில் நேற்று காங்கேயம் இன பசுமாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அதிக ஆர்வத்துடன் நேரில் திரண்டு வந்து கலந்து கொண்டனர். 

    இதன்படி இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 80 காங்கேயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 38 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

    இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன கிடாரி கன்றுடன் செவலை பசுமாடு ரூ.95 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

    மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.34 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    குருபரப்பள்ளி, சூளகிரி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் வேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குருபரப்பள்ளி, சூளகிரி, காமன்தொட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சூளகிரி நகரம், மாதரசனப்பள்ளி, உலகம், ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாத்தகோட்டா, பந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, குப்பச்சிப்பாறை, எண்ணேகொள்புதூர், சிட்கோ, போலுப்பள்ளி, ஜீனூர், சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், ஆவல்நத்தம், பதிமடுகு, வே.மாதேப்பள்ளி, வேப்பனப்பள்ளி, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிகுப்பம், எப்ரி, தம்மண்டரப்பள்ளி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மும்மூர்த்தி நகர் பகுதியில் மழைநீர் தேங்கி நின்று பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் இன்று காலை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை உடனடியாக வரவைத்து அங்கு தேங்கி நின்ற மழைநீர் மற்றும் சகதிகளை உடனடியாக அப்புறப்படுத்தி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக மாற்றி அமைக்க உத்தரவிட்டார். இந்த பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த பகுதியில் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

    இந்த ஆய்வின் போது திருப்பூர் மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், வடக்கு மாநகர் பொறுப்பாளர் தினேஷ் குமார், இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
    மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    அசாம் மாநிலம் காச்சார் மாவட்டம் காந்திகாரம் தாலுகா கும்பூர் பக்கமுள்ள உத்தர்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கவுரக்கா கோலா (வயது 55). இவர் ஓசூர் பேகேப்பள்ளி கோவிந்த அக்ரஹாரத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரை தொட்டதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி கவுரக்கா கோலா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் குருபூஜை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    கோவை மருதமலை முருகன் கோவிலில் பாம்பாட்டி சித்தர் சன்னதி உள்ளது. பாம்பாட்டி சித்தர் பிறந்ததினத்தை குருபூஜை விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதையடுத்து நேற்று பாம்பாட்டி சித்தர் குருபூஜை விழா நடந்தது. பாம்பாட்டி சித்தர் சன்னதி முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அபிஷேகமும் அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ராயக்கோட்டை அருகே அம்மன் கோவிலில் நகை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயக்கோட்டை:

    ராயக்கோட்டை அருகே உள்ள எடவனஅள்ளி கிராமத்தில் பாஞ்சாலியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், கோவிலில் இருந்த 3 பவுன் நகைகளை திருடிச் சென்றார். இது குறித்து ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அத்திப்பள்ளி பக்கமுள்ள சின்ன தாசரஅள்ளியை சேர்ந்த லட்சுமணன் (வயது 35) என்பவா் நகையை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி தாலுகா கிட்டம்பட்டி பக்கமுள்ள மட்டமந்தையை சேர்ந்தவர் அஜித்குமார். இவரது மனைவி பிரியா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த பிரியா உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியா இறந்தார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×