என் மலர்
கிருஷ்ணகிரி
- தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார்.
- கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் பெண்டேகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (வயது 40).
இவரது மகள் பவித்ரா. பவித்ராவுக்கு, தமிழரசன் என்பவருக்கும் திருமணமாகி கவிதமிழ் என்ற 3 மாத குழந்தை உள்ளது.
இந்நிலையில் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டைவிட்டு புறப்பட்ட பவித்ரா குழந்தையை அங்கு விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஷோபனா புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் கிருஷ்ணகிரி முருகன் நகரை சேர்ந்த சூர்யா என்ற வாலிபர்தான் பவித்ராவை கடத்தி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ராவையும், கடத்தியதாக கூறப்படும் சூர்யாவையும் தேடி வருகின்றனர்.
- உறவினர்கள் டியூசன் மையத்திற்கு சென்று கேட்டனர். அப்போது அவர்கள் வரவில்லை என தெரிவித்தனர்.
- சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரிக்கு செல்ல கூடிய அரசு பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள பி.சி.புதூரை சேர்ந்தவர் திம்மராஜ். இவரது மகள் பசவராஜ் (வயது 13).
இவர் தாசினாவூர் கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் தங்காடி குப்பத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரின் மகன் ஹரிபிரசாத் (13), குமார் என்பவரின் மகன் ஹரீஷ் (13) ஆகியோர் 9-ம் வகுப்பு உடன் படித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் மாலை அவர்கள் 3 பேரும் 6 மணி அளவில் அந்த பகுதியில் உள்ள டியூசன் சென்டருக்கு படிக்க செல்வதாக கூறி சென்றனர்.
ஆனால் அவர்கள் 3 பேரும் டியூசன் செல்லவில்லை. இந்த நிலையில் இரவு வீடு திரும்பாததை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் டியூசன் மையத்திற்கு சென்று கேட்டனர். அப்போது அவர்கள் வரவில்லை என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 3 மாணவர்களின் பெற்றோரும் மகராஜகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினார்.
மேலும் அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் நாரலப்பள்ளி கூட்டு ரோடு அருகில் கிருஷ்ணகிரிக்கு செல்ல கூடிய அரசு பஸ்சில் ஏறி சென்றது தெரிய வந்தது.
மாணவர்கள் 3 பேரையும் மகராஜகடை போலீசார் தேடி வருகின்றனர்.
- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
- விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த 20 பேர் கீழ் குப்பத்தில் உள்ள முருகன் கோவிலில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்காக சுற்றுலா வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்னகரை காப்பு காட்டு பகுதியில் இன்றுகாலை வந்த போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனுக்கு அடியில் சிக்கி சாந்தி (வயது45) என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். 19 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான சாந்தியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்தால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
- இருசக்கர வாகனத்தை நிறுத்தி கல்லால் தாக்கியுள்ளனர்.
- இரண்டு பல் உடைந்து படுகாயம் அடைந்த மகேஷ் குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த காளப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது28). கூலி தொழிலாளி. இவர் ஓசூரில் இருந்து காவாபள்ளி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த 25 முதல் 30 வயது மதிக்கதக்க மூன்று பேர் மகேஷ் குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கல்லால் தாக்கியுள்ளனர்.
இரண்டு பல் உடைந்து படுகாயம் அடைந்த மகேஷ் குமார், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த 6-ந் தேதியில் இருந்து மாயமானார்.
- கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த சிண்டங்கம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் திருப்பதி (வயது 20). இவர் கிட்டம்பட்டி பகுதியில் உள்ள கால்நடை பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ந் தேதியில் இருந்து மாயமானார்.
இதுகுறித்து திருப்பதியின் உறவினர் ஞானவேல் என்பவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் சரிதா (வயது 15). இவர் கடந்த 9-ந் தேதியில் இருந்து காணவில்லை. இதுகுறித்து அவரது தாய் ராணி அளித்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சரிதாவை தேடி வருகின்றனர்.
- ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
- முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.
ஓசூர்,
ஓசூர் அருகே ஜுஜுவாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு 272 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி விழாவில் பேசினார்கள். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.
மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன், மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் அசோகா, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் துணைத்தலைவர் ஆனந்த ரெட்டி, பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், மற்றும் ஆசிரிய, ஆசிரியையர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற மங்கை (வயது40), செல்வி (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எட்டிப்பட்டி காமராஜ் நகரில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சாராயம் விற்ற மங்கை (வயது40), செல்வி (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் அடைத்தனர்.
- பழைய பேட்டை நேதாஜி சாலை, 4, 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், எல்லப்பன் நகர் பகுதிகளில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆய்வு செய்தார்.
- பின்னர், ஆங்காங்கே தேங்கியிருந்து மழைநீரை உடனே வெளியேற்ற அறி வுறுத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, சூளகிரி, தளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் 64.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று பகலில் சாரல் மழை பெய்தது.
மேலும், கிருஷ்ணகிரி நகரில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அவதியுற்றனர். 5 ரோடு பெங்களூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, ஜே.சி.பி வாகனம் கால்வாயில் இருந்து அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து நகராட்சியில் மழைக்கு பாதிக்கப்பட்ட பழைய பேட்டை நேதாஜி சாலை, 4, 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், எல்லப்பன் நகர் பகுதிகளில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆய்வு செய்தார்.
பின்னர், ஆங்காங்கே தேங்கியிருந்து மழைநீரை உடனே வெளியேற்ற அறி வுறுத்தினர். இதையடுத்து அவரது முன்னிலையில் மழைநீர் வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணை யாளர்(பொ) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், இளநிலை பொறியாளர் அறிவழகன், துப்புரவு ஆய்வாளர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் மீன் ஜெயக்குமார், சந்தோஷ், முகம்மது ஆசிப், செந்தில்குமார், தேன்மொழி, நிர்வாகிகள் கனல் சுப்பிரமணி, முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நவலை, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர் கெலவரப்பள்ளி அணை, கே.ஆர்.பி அணை மற்றும் சாத்தனூர் அணைகளில் நீர் நிரம்புகிறது. மேலும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தருமபுரி மாவட்டம் கே.ஈச்சம்பாடி அருகில் ஒரு சிறிய அணைகட்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆண்டுதோறும் மூன்று முறை வெள்ளப்பெருக்கு ஏற்படும் தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில மாதங்களுக்கு மழையின்றி வறண்டு காணப்பட்டது.
தற்பொழுது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 8000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து வினாடிக்கு சுமார் 20,478 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 17,478 கன அடி தண்ணீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.
இந்நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 24478 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து அணைக்கட்டு நிரம்பி, தண்ணீர் வழிந்தோடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து 1 மாதத்திற்கு மேலாக ஆற்றில் தண்ணீர் செல்வதால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள நவலை, பெரமாண்டப்பட்டி, தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, கீழ்மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வரவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தேங்கிய மழைநீரால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
- மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கம்பம்பள்ளி அரசு பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் ேதங்கி காணப்படுகிறது. மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகள் கல்வி கற்க முடியாமல் அவதிப்பட்டனர்.
கம்பம்பள்ளி வளாகத்தில் மழை தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இந்த மழை வெள்ளத்தால் பள்ளி வகுப்பறைக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து அதிகாரியிடம் பல முறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் இன்று காலை பள்ளி முன்புள்ள சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தேங்கியுள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
- இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.
- ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கீழ்.எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 47). இவர் மருந்தகம் வைத்து சட்டத்திற்கு புறம்பாக மருத்துவம் பார்த்து வந்தார்.
இவர் போலி மருத்துவர் என்று தகவல் கிடைத்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ இணை இயக்குனரின் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதன்குமார் அவர் மருந்தகத்தை ஆய்வு மேற்கொண்டார். அவருடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத், காவலர் சிங்காரவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோர் முன்னிலையில் கைது செய்யப்பட்டு, மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
- பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நேற்று முன்தினம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- 5 ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஊர் பொதுமக்கள் நேற்று காலை ஆடுகளை வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து, ஏரியில் தெப்பம் விட்டு மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள படேதலாவ் ஏரிக்கு மார்க்கண்டேயன் நதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் 5ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நேற்று முன்தினம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 5 ஆண்டிற்கு பிறகு ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி ஒன்றியம் பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், ஊர் பொதுமக்கள் நேற்று காலை ஆடுகளை வெட்டி, சிறப்பு பூஜைகள் செய்து, ஏரியில் தெப்பம் விட்டு மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி எம்எல்ஏ., கே.அசோக்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், பஞ்சாயத்து தலைவர் மஞ்சுளா வெங்கடேசன், துணைத் தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் முத்து, கந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று அதிக அளவில் தண்ணீர் வெளியேறியதால், ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஏரியில் குளித்தும், மீன்களை பிடித்தும் மகிழ்ந்தனர்.






