என் மலர்
கரூர்
- கரூர் அரசு மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறை பேரவை தொடக்கம்
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் நடேசன் தலைமையில் நடைபெற்றது
வே.பாளையம், ஜூலை. 18-
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை பேரவைத் துவக்க விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ஹரிஷாஸ்ரீ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியின் பொருளியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர் லோகநாதன் கலந்து கொண்டு இந்திய பொருளாதாரத்தில் மின் வணிகத்தின் பங்கு பற்றி தன்னுடைய அனுபவங்களை மாணவிகளுக்கு எடுத்துரைத்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். முடிவில் மாணவி தர்ஷினி நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர், கல்லூரி உள் தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர்,பிற துறையைச் சார்ந்த துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது
- ஆலோசனைக் கூட்டத்தில் ஒட்டு மொத்த பொதுமக்கள் வலியுறுத்தல்
வே.பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் வழியாக சேலம்- கரூர், தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியனை இடித்து அந்த வழியாக அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் தவுட்டுப்பாளையம் முதல் பாலத்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதன் காரணமாக தவுட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்டர் மீடியா உடைக்கப்பட்டு அந்த வழியாக சென்ற பாதை அனைத்தும் நெடுகிலும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் , பொதுமக்களும் செல்ல முடியாது. அதே போல் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களும் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்று மீண்டும் வீடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.இதனால் தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், அக்ரஹாரம், கட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமச் சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். அதன் காரணமாக தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே(சுரங்க வழி பாதை) அமைத்து தருமாறு மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியதில் இருந்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே அமைப்பது குறித்த பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் புகளூர் தாசில்தார் முருகன் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களின் நலன் கருதி தவுட்டுப்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சப்வே அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அனைவரும், ஒட்டுமொத்தமாக தாசில்தாரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியிடமும், மாவட்ட கலெக்டர் இடமும் பேசி ஒரு வாரத்திற்குள் தகவல் தெரிவிப்பதாக புகளூர் தாசில்தார் முருகன் தெரிவித்தார்.
- குளித்தலை அருகே சிறுவன், சிறுமி மாயமாகி உள்ளனர்
- பாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்,
குளித்தலை அடுத்த, பாப்பயம்பாடி இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் மருதாயி (வயது 45) கூலித்தொழிலாளி. இவரது மகள் செல்லம்மாள், பேரக்குழந்தை விஜய், இருவரும் கடந்த, 13 மாலை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால், இதுவரை வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மருதாயி கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார், மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
- தொட்டிலில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலியானது
- அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பெருமாள் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 38) இவருடைய, இரண்டு வயது பெண் குழந்தை பவ்யா கடந்த, 14ல் வீட்டில் உள்ள தொட்டிலில் துாங்கி கொண்டிருந்தது. அப்போது, துாக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, திடீரென கீழே தவறி தரையில் விழுந்தது. இதில், குழந்தை பவ்யாவுக்கு தலையில் அடிப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த குழந்தை பவ்யா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
- வெள்ளி விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் இலவச விமான சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்
- பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாகம் ஏற்பாடு
வேலாயுதம்பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஆர்.என்.ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனம் தொடங்கி 24- ஆண்டுகள் முடிவடைந்து 25-வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வாக 10 ஆண்டுகளுக்கு மேல் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை பெருமைப்படுத்தி அவர்களை சிறப்பிக்கும் வகையில் இலவச விமான சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 28 ஆசிரிய, ஆசிரியைகள் பயணம் சென்றனர் . இவர்களுடன் ஆர்.என். ஆக்ஸ்போர்டு கல்வி நிறுவனங்களின் தாளாளர் சக்திவேல் , செயலாளர் ராஜா, இயக்குனர் டாக்டர் அருள் ஆகியோரும் சென்றனர் .சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அந்தப் பகுதிகளை சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப படுக்கை வசதியுடன் கூடிய ஏசி சொகுசு பேருந்தில் பயணம் செய்து பள்ளியை வந்தடைந்தனர். விமான பயண சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- கரூர் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- சட்டங்கள், திட்டங்கள் குறித்து விளக்க உரை
வே.பாளையம் ,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான வுமன் ரெட்ரஸல் செல் " சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.முதுகலை 2-ஆம்ஆண்டு மாணவி சன்மதி வரவேற்றார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர் சாருமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலாசுந்தரி கலந்து கொண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக கருத்துகள் எடுத்துரைத்தார். மேலும் முதியோருக்கான பாதுகாப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்பு அலுவலர், விரிவாக்க அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டன.181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வாழ்வில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். .இவ்விழாவில் துணை முதல்வர், கலைப்புலத்தலைவர், பேராசிரியர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வுமன் ரெட்ரஸல் செல் ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வானை, ராசாம்பாள் செய்திருந்தனர்.இளங்கலைத்தமிழ் 3-ஆம்ஆண்டு மாணவி சுஜிதா நன்றி கூறினார்.
- கரூர் அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி பெண் பலியானார்
- படுகாயம் அடைந்த கணவர், குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை
வே.பாளையம்,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது28). இவரது மனைவி சத்யா (22). இவர்களுக்கு நித்யாஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். இவர்கள் சரக்கு ஆட்டோவில் தர்பூசணி பழத்தை ஊர்ஊராக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் சந்தோஷ் தனது மனைவி சத்யா, குழந்தை நித்யா ஸ்ரீயுடன் சரக்கு ஆட்டோவில் தர்பூசணி பழங்களை ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்துவிட்டு பொத்தனூரில் உள்ள வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, கரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் சரக்கு ஆட்டோ மீது மோதியது . சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சென்டர் மீடியாவில் மோதி குப்புற கவிழ்ந்தது . இதில் சந்தோஷ் சத்யா , குழந்தை நித்யா ஸ்ரீ ஆகிய மூவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்யா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் சத்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சந்தோஷ் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
- கரூர் பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
- சின்னத்தாராபுரம் போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள மலர்ச்சியூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சின்ன தாராபுரத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு பேக்கரிக்கு சென்று விட்டார். மீண்டும் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் உள்ள 4 பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தவை பார்த்து சண்முகம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சின்னதாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் கைரேகை எடுத்து விசாரணை நடத்தியதில் மூன்று பவுன் தங்கச் செயின் மேலும் வெள்ளி கொலுசு, வெள்ளி செயின் காணவில்லை என வீட்டில் உரிமையாளர் கூறினார். இது குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பட்டப்பகலில் நடந்ததால் சின்னதாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (45). விவசாயி.இவர் சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கரூரில் இருந்து சேலம் நோக்கி அதி வேகமாக வந்த கார் முருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த முருகன்கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து முருகனின் மகன் தமிழ்ச்செல்வன் (வயது22) வேலாயுத ம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- வேலாயுதம் பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தவுட்டு ப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவில், மற்றும் புன்னம் சத்திரம் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவில், ஆகிய கோவில்க ளில் ஆனி மாத தேய்பிறை கடைசி சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியை வழிப்பட்டனர் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் வீட்டில் இருந்த வாலிபர் திடீர் மாயமானார்
- வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்
கரூர்.
புகளூர் ஈஐடி பாரி காலனியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (வயது58).இவரது மனைவி மாரியம்மாள் (54). இவர்களது மகன் நரேஷ்குமார் (33).இவர் புகளூர் செம்படா பாளையத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் டிப்ளமோ ட்ரெயினிங் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வீட்டில் இருந்த நரேஷ் குமார் தனக்கு அரசு வேலை கிடைக்கவில்லை என மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் இருந்த வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் நரேஷ் குமார் கிடைக்க வில்லை இது குறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு வேலாயுத ம்பாளையம் போலீஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து நரேஷ் குமார் தானாக எங்காவது சென்று விட்டாரா அல்லது வெளியில் இருந்த போது அவரை யாரேனும் கடத்திச் சென்று விட்டானரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
- கரூரில் மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீஷியன் பலியானார்
- வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
கரூர் மாவட்டம், நன்னியூர் புதுார் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் திவாகர் (வயது 23) .எலக்ட்ரீஷியன். இவர்,அதே பகுதியில் உள்ள, பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் சுவற்றில், மின் இணைப்புடன் கூடிய, டிரில் மெஷின் மூலம் துளை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த திவாகர், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, திவாகரின் தாய் லட்சுமி கொடுத்த புகார்படி, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






