என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது :-

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி களில் காணப்படும் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சி களுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான சாலைகள் என பல சாலை கள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் பெரும் கனமழையால் சாலைகளில் ஏராளமான ராட்சத பள்ளங்கள் ஏற் பட்டுள்ளது. இந்த ராட்சத பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளங்கள் எங்கெல்லாம் உள்ளது என்று தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர்.

    மேலும் இந்த சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல வும், அனைத்து வாகனங்க ளும் செல்ல முடியாத நிலையில் இந்த சாலைகள் காணப்படுகிறது. ஆகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்து மிகவும் மோச மான நிலையில் காணப்படும் சாலைகளான பரசேரி-– திங்கள்நகர்-புதுக்கடை சாலை, கன்னியாகுமரி-–பழைய உச்சக்கடை சாலை, மங்காடு சாலை (முஞ்சிறை- கோழிவிளை), தொழிக் கோடு-முள்ளூர்துறை சாலை, மங்காடு கணபதி யான்கடவு-நடைக்காவு சாலை, கருங்கல்-எட்டணி- இரவிபுதூர்கடை சாலை, கருங்கல்-மார்த்தாண்டம் சாலை, கருங்கல்- கருமா விளை-குளச்சல் சாலை, பணமுகம் – ஆலங்கோடு சாலை, சூழால்-நடைக்காவு சாலை, விரிவிளை- மங்காடு சாலை, மிடாலம்- பாலூர் சாலை, காஞ்சாம்பு றம்-வைக்கலூர் சாலை, நம்பாளி-கிராத்தூர் சாலை, கொல்லங்கோடு- கண்ண நாகம்-பாறசாலை சாலை, நீரோடி-இரையுமன்துறை சாலை, தேங்காப்பட்டணம்- குழித்துறை சாலை, கொல் லங்கோடு-களியக்கா விளை சாலை உட்பட மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாநில மற்றும் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சாலைகள், ஊராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொந்த மான சாலைகள், கொல் லங்கோடு நகராட்சிக்கு சொந்தமான பல்வேறு சாலைகள் மழையினால் சேதமடைந்து மிகவும் மோ சமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்படும் அனைத்து சாலைகளையும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்தாமரைகுளம் :

    தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 71 லட்சம் மதிப் பில் சாலை பணிகள் நடக்கிறது. இந்தப் பணிகளை முகிலன்குடியிருப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த் திகா பிரதாப், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாநில தலைமை செயற்குழு உறுப் பினர் ஆர்.எஸ்.பார்த்த சாரதி, தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, செயல் அலுவலர் சந்தோஷ் குமார், பேரூ ராட்சி துணை தலைவி மல்லிகா, கவுன்சி லர்கள் எட்வின்ராஜ், பூவியூர் காமராஜ், அமுதா பால்ராஜ், திருமதிபாய், தி.மு.க. நிர்வாகிகள் பேரா சிரியர் டி.சி. மகேஷ், தாமரை பிரதாப் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
    • வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 80), தொழில் அதிபர். இவரது மகள் வெளியூரில் வசித்து வருகிறார்.

    அவருக்குச் சொந்தமான வீடு கவியலூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் பராமரித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை அவர், வழக்கம் போல் விளக்குகளை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் அங்கு வந்த போது, வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி தொழில் அதிபர் பொன்னையாவுக்கு அவர் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விட்டு தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மெயின் கேட் கதவின் பூட்டு மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் யாரும் செல்ல வில்லை என விசாரணை யில் தெரியவந்தது. இருப்பி னும் பூட்டை உடைத்தது யார்? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • ரூ.20 ஆயிரம் பறிமுதல்
    • லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.

    இதை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் நட வடிக்கை மேற்கொண்டுள் ளார். தனிப்படை அமைக் கப்பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறது. இருப்பினும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளும் மாநகர பகுதியில் சப்ளை செய்யப் பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் கிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளிர்பான கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கடை உரிமையாளர் அன்பு குமார் (48) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரூ.20,030-ஐ பறி முதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பு குமாரி டம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குமரி மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ப வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி விற்பனை நடை பெறுவது தெரியவந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • 29-ந்தேதி கடைசி
    • கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை யின் அரசாணைபடி ஆண்டு தோறும் ஆதிதிராவிட மக் களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவ ருக்கு அம்பேத்கர் விருதை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 2023-24-ம் நிதி ஆண்டிற்கான அம்பேத்க ரின் பெயரில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத் திற்கு அரிய தொண்டு செய்ப வருக்கு 2024-ம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்பட உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டுகள் செய்தவர்கள் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் அம்பேத்கர் விருதுக் கான விண்ணப்பத்தை குமரி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் பெற்று 29-ந்தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜரத்தினத்தை தேடி வருகின்றனர்.
    • சம்பத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    ராஜாக்கமங்கலம், நவ.25-

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் ஓடை தெருவை சேர்ந்தவர் சகாயம். இவரது மகள் அஸ்வின்ரினி (வயது 27). இவர் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் காலையில் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. உடனடியாக பெற்றோர்கள் இவரை உறவினர்கள் வீட்டில் தேடியும் அஸ்வின்ரினி எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து அவரது தாயார் மஜோரா வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன அஸ்வின்ரினியை தேடி வருகின்றனர். வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 68), கட்டிட தொழிலாளி. இவர் சம்பத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் அவரை பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜரத்தினத்தை தேடி வருகின்றனர்.

    • கால்வின் மருத்துவமனை சார்பில் நடக்கிறது
    • இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையில் கால்வின் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் நாகர்கோவில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவி ழாவை முன்னிட்டு பொது மக்கள் பயன்பெறும் வகை யில் ஆலய திருவிழாவின் அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்லும்பாதை அருகே இலவச கண் மருத்துவ முகாம் நடை பெறுகிறது.

    முகாமானது இன்று (25-ந்தேதி) முதல் 5-ம் நாள் திருவிழா வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், 6-ம் நாள் திருவிழா முதல் திருவிழா வின் கடைசி நாள் வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை பெறுகிறது.

    இந்த முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

    மேலும் மருத்துவ குழுவினரால் கண் பரிசோதனை செய்யப் பட்டு பரிசோத னைக்கு பிறகு தேவைப்படும் நபர்க ளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விலையில் கண் கண்ணாடி கள் வாங்கிக்கொள்ளலாம். மேலும் கண்புரை உள்ள வர்களுக்கு குறைந்த செல வில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் முகா மில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
    • அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மாநில, மாவட்ட புதிய நிர்வாகிகளை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்து வருகிறார். வர்த்தக அணி மாநில இணை செயலாளராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருடன் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார். மாநில வர்த்தக அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜன் நாகர்கோவில் ராஜன் மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளரும், கன்னியாகுமரி மாவட்ட மொத்த மருந்து வணிகர் சங்க தலைவரும், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி, பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளராக உள்ளார்.

    • நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி
    • ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் 8-வது வார்டுக்குட்பட்ட அம்மன் கோவில் 6-வது குறுக்கு தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் படிக்கட்டு அமைக்கும் பணி மற்றும் 52-வது வார்டுக்குட்பட்ட தெங்கம்புதூர், புதுக்குடியிருப்பு குறுக்குசாலை, அஞ்சுகுடியிருப்பு மற்றும் பெருமாள்புரம் முதல் குளத்துவிளை செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சேகர், ரமேஷ், தொழில்நுட்ப அதிகாரி பாஸ்கர், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞர் அணி செயலாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    நாகர்கோவில்: தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை தரர்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் தாலுகா அலுவலகங்களுக்கு வரப்பட்டு பின்னர் வழங்கப்படும்.

    இதுபோல் கரும்பு, சர்க்கரை,அரிசி உள்ளிட்ட பொருட்கள் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பிக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடை மூலம் விநியோக செய்யப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள வேட்டி, சேலைகள் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தது. அதனை அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அறிவித்த உடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது.

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது
    • தூத்தூர் பகுதியில் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். எனவே தூத்துர் பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்

    நாகர்கோவில் : நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னகுப்பன், மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டன்ஸ்டன் தலைமையில் மீனவ பெண்கள் கலெக்டரிடம் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில், ஓமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கோவளம் மீனவர்கள் உட்பட 17 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். பின்னர் மீனவர்கள் கூறியதாவது:-

    தூத்தூர் பகுதியில் ஏராளமான விசைப்படகு மீனவர்கள் உள்ளனர். எனவே தூத்துர் பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்போது இரயுமன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரயுமன்துறை பகுதியில் உதவி இயக்குனர் அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் மீனவர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரி சின்ன குப்பன் கூறுகையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை பொறுத்தமட்டில் மக்கள் தொடர்பு கொள்ள வசதியான இடத்தில் அமைக்க வேண்டும். எனவே தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் பிரச்சனைக்காகத்தான் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தனிப்பட்ட பிரச்சனைகளை கூட்டத்தில் தெரிவிக்க கூடாது. மீனவர் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து மீனவர்கள் கூறுகையில், குமரி மாவட்டத்தில் மானிய விலை மண்ணெண்ணெய் வழங்குவதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இரயுமன் துறை, தூத்தூர் பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் 6 மாதம் ஆகியும் மண்எண்ணை வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆன பிறகும் நாகர்கோவிலுள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். புரோக்கர்கள் கொடுத்தால் ஒரு மாதத்தில் மண்எண்ணை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள். மீனவர்களை கண்டு கொள்வதில்லை.எனவே அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் ஜூன் மாதம் 3 வள்ளங்கள் விபத்துக்குள்ளானது. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவளத்தில் ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் கூறுகையில், மானிய விலை மண்எண்ணை விண்ணப்பித்த மீனவர்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் நடந்த விபத்தில் 2 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு படகு பதிவு செய்யப்படாதது ஆகும். சம்பந்தப்பட்ட வள்ளங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரயுமன்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.30 கோடியும் துறைமுகத்தை தூர்வார ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மீனவர்பிரிவு பெருங்கோட்ட பொறுப்பாளர் சகாயம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி முதல் பள்ளம் இணைப்பு சாலையும், இரயுமன்துறை-வள்ளவிளை இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் கடற்கரை பகுதியில் கெட்டப்பட்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் குமரி மாவட்டத்தில் ரூ.55 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதி தூண்டில் உள்ள அமைக்கப்படாமல் காணாமல் போய் உள்ளது. அது குறித்த முழு விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    ×