என் மலர்
கன்னியாகுமரி
- பா.ஜ.க. பிரமுகரின் மகள்
- தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்
இரணியல் :
இரணியல் அருகே குருந்தன்கோடு பட்டன் விளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49), மரவேலை செய்து வருகிறார். இவரது மனைவி சிவந்திகனி. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிவந்திகனி குருந்தன்கோடு யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.
இவரது மகள் சஜித்ரா (19). இவர் வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிறு வயதில் இருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் அதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி காலை வீட்டு மாடி அறையில் சஜித்ரா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்த நிலையில் தீ காயங்க ளுடன் கிடந்துள்ளார். உட னடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசா ரிப்பள்ளம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்த னர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சஜித்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
- மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
கருங்கல் :
கீழ்குளம் அருகே குஞ்சாகோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக அரையாக்குழி விளை புளியடி குளம், பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் வேணு என்பவர் வீடு மதில் சுவர் மற்றும் வீட்டின் தலைவாசல் படிக்கட்டு வரை இடிந்து விழுந்து சேதமடைந்தது. வீட்டை சுற்றி குளத்து நீர் சூழ்ந்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜே.சி.பி.யை வரவழைத்து குளத்தில் இருந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு மழைநீரால் சூழப்பட்ட வீட்டினுள் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதன்மூலம் அந்த வீடும் பாதுகாக்கப்பட்டது.
அப்போது கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோபால், பேரூராட்சி செயல் அலுவலர் ரெகுநாதன், பேரூராட்சி உறுப்பினர் ஜாஸ்மின், லிபின்தாஸ், விக்னேஷ், ஜோஸ், அபிலாஷ், கிறிஸ்டோபர், சிங் உட்பட பலர் உடனிருந்தனர். இவர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
- கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பருவ மழை கள் வழக்கத்தை விட குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைந்தது. நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை மைனஸ் அடிக்குச் சென்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து இருந்தது. முக்கடல் அணையும் பிளஸ் அளவிற்கு வந்தது. தொடர்ந்து பெய்த மழை நேற்று முன்தினம் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக மலைப்பகுதிகளில் பெரும் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிலும் சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகள் மழையின் காரணமாக கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளான பள்ளியாறு, பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளமாக ஓடியது.
திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பியதால், மறுகால் பாய்ந்து சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த சூழலில் நேற்று பகல் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. கன மழையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பிவிட்டது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு-2 அணை பகுதியில் 34.2 மி. மீ. மழையும், சிற்றாறு-1 அணை பகுதியில் 24.6 மி. மீ. மழையும், பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ. மழையும் பதிவாகி உள்ளது. புத்தன் அணை பகுதியில் 17.6 மி.மீட்டரும், பேச்சிப்பாறை அணையில் 12.4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு தொடர்கிறது. இன்று காலை நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 37.84 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகள் உச்ச அளவை எட்டி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1451 கன அடி நீரும், பெரு ஞ்சாணி அணைக்கு 1180 கன அடி தண்ணீரும் வந்து கொண்டி ருக்கிறது. நேற்று சிற்றாறு-1 அணையில் இருந்து உபரி நீர் விநாடிக்கு 500 கன அடி திறந்து விடப்பட்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் பழையாறு, வள்ளி ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை யோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவு விழுவதால், 5-வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மழை குறைந்தபோதிலும், வெள்ளத்தின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தே உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர்.
மழை பெய்யும் போதெல்லாம் தங்கள் குடியிருப்பு பகுதி இதே நிலையை தான் சந்திக்கிறது. இதுபற்றி பலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என அங்கு வசிப்போர் வேதனை தெரிவிக்கின்றனர். மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாரில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. 3 இடங்களில் மரம் முறிந்து விழுந்துள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவலோகம் (சிற்றாறு-2) 34.2 சிற்றாறு-1 24.6, பெருஞ்சாணி 19.8 புத்தன் அணை 17.6 பேச்சிப்பாறை 12.4, பாலமோர் 5.2 முள்ளங்கினாவிளை 4.6 திற்பரப்பு 4.5, தக்கலை, களியல், மாம்பழத்துறையாறு 3.2.
- நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
திருவட்டார்:
குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்த இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு பேராசிரியர் டாக்டர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரீஸ் காரணம் என்று கூறியிருந்தார். அதில் டாக்டர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் ப்ரீத்தி, ஹரீஸ் இருவரும் மனதளவிலும் துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர் பரமசிவம், ஹரீஸ், ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாக்டர் பரமசிவத்தை குலசேகரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள். நேற்று மூகாம்பிகா கல்லூரிக்கு சென்ற அவர்கள் மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டனர். பின்னர் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மதியம் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர் பயிற்சி டாக்டர் ஹரீசிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகத்தை கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்ககிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் மூலஸ்தானத்துக்கு அருகில் அமைந்துள்ள மண்டபத்தில் தியாக சவுந்தரி அம்மன் என்ற உற்சவ அம்பாளுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. அதன் பிறகு தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து அங்கு இருந்து உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி தனது தோளில் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலுமண்டபத்துக்கு எடுத்துச்சென்றார். அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர்.
அதன்பிறகு கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. அந்த கொலுமண்டபத்தில் ஏராளமான கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு அலங்கரித்து வைத்திருந்த கொலுவையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி 10 நாட்களும் காலை 10 மணிக்கு நடக்கும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க அர்ச்சகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனித நீர் எடுத்து காசி விஸ்வநாதர் முன்பு வைத்து பூஜை நடத்தப்பட்டது.
அதன்பிறகு கோவில் முன்பு நிறுத்தி வைத்திருந்த யானைக்கு கஜ பூஜை நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. அதன் பிறகு நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது லெள்ளிக்குடத்தில் புனித நீர் வைத்து கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த யானை ஊர்வலத்தை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு முன்னிலையில். குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர். ஊர்வலம் ரெயில் நிலைய சந்திப்பு, வடக்குரதவீதி, நடுத்தெரு, தெற்குரதவீதி, சன்னதிதெரு, வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு காலை 10 மணிக்கு பகவதி அம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி, ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
நாகர்கோவில், அக்.15-
புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் இன்று காலை 6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு காப்பு கட்டுதல், 6 மணிக்கு கொலு பூஜை, 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு மகாகாளி அலங்கார பூஜை நடக்கிறது.
மேலும் விழா நாட்களில் அபிஷேகம், தீபாராதனை, கொலு பூஜை, அலங்கார பூஜை, திருவிளக்கு பூஜை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. 24-ந்தேதி காலை 8.15 மணிக்கு குழந்தைகளுக்கு திருஏடு தொடங்குதல், 10 மணிக்கு சக்தி ஹோம பூஜை, பகல் 11.30 மணிக்கு கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு மகிஷாசுரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு இளநீர் அபிஷேகம், 7.30 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி அம்பாளை வலம் வருதல், 25-ந்தேதி காலை 8 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி, ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.
- கடற்கரை களை கட்டியது
- சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கன்னியாகுமரி :
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். ஆனால் மழை மேகம் காரணமாக சூரியன் உதயம் ஆகும் காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் சிலைக்கு படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும்போதும், கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழுமபோலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர்
- திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாகர்கோவில் :
ஈத்தாமொழி அருகே பொழிக்கரை பகுதியை சேர்ந்தவர் மரியசானு (வயது 23), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு வருகிற 18-ந்தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மரியசானு நேற்று கன்னியாகுமரி புதுகிராமம் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு அங்கேயே தங்கினார். இந்நிலையில் வீட்டில் இருந்து அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரில் 30 பவுன் நகை, ரூ.7 லட்சம் பணத்துடன் மரியசானு மாயமாகிவிட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- படகு போக்குவரத்து சேவை 1 மணி நேரம் தாமதம்
- கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின
கன்னியாகுமரி L
கன்னியாகுமரியில் இன்று காலை "திடீர்" என்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கு இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ஜேன்சன் ராய் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக இருந்து வந்தார்.
- தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ஜேன்சன் ராய் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் சங்கர் படிப்பக தெருவைச் சேர்ந்தவர் ஜேன்சன் ராய் (வயது 52). இவர் கொட்டாரம் பேரூர் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக இருந்து வந்தார். இவர் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு செல்வராணி என்ற மனைவியும் நேவிஸ் ராஜ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று இரவு தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்ட நிலையில் அலறியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள உறவினர்களும் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி செல்வராணி கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.
- பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.
களியக்காவிளை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக ஆறுகள், குளங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் களியக்காவிளை அருகே உள்ள திருத்துவபுரம் அடுத்த தோப்புவிளை பகுதியில் ஆனந்த் என்பவரது வீட்டில் அருகில் இருந்த பெரிய பாறாங்கல் உடைந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பகுதி கடும் சேதம் அடைந்தது.
பாறை உடைந்து விழுந்த நேரத்தில் வீட்டில் ஆனந்த், அவரது மனைவி மற்றும் தாயார் வேறு அறையில் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். பாறை விழுந்ததில் வீட்டின் அறை முற்றிலுமாக உடைந்து சேதம் அடைந்துள்ளது.
- கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
- நம்ம ஊரு சூப்பரு இயக்க திட்டம்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டு முழுமைக்குமான "நம்ம ஊரு சூப்பரு" இயக்க சுகாதார விழிப்புணர்வு செயல்பாடுகள் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்வது தொடர்பான செயல்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பள்ளி மற்றும் இதர அலுவலக சுகாதார பணியாளர்களை இணைக்க வேண்டும்.
மக்களைத்தேடி மருத்துவம் மூலம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து தோட்டங்கள், மரம் நடுதல், பசுமை தோட்டங்கள் அமைத்தல் மூலம் கிராமத்தினை பசுமையான கிராமமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். சுத்தம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தூய்மை பாரத இயக்க-சுகாதார செய்திகளை கிராமிய கலை மூலம் ஊராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சுய உதவிக் குழுவினரை ஈடுபடுத்தி தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வீடுகள் அளவில் குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து வழங்குதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை கடைகள் மற்றும் வியாபார தலங்களில் பயன்பாட்டினை தடை செய்தல், நெகிழிக்கு மாற்று பயன்பாட்டினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே தண்ணீர் மற்றும் சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பட்டறிவு பயணம் மூலம் விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
இந்த செயல்பாடுகளில் ஊரக வளர்ச்சித்துறை, மகளிர் திட்டம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வி மற்றும் கல்லூரி கல்வித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் என பல்வேறு துறைகளை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயல்பாடுகள் நடைபெற உள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து பகுதி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கூறி உள்ளார்.






