என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் “அ“ கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் பார்வையிட்டார். பின்னர், தடுப்புசுவர் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மனாபபுரம் கோட்டம், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" வருவாய் கிரா மத்திற்குட்பட்ட வைக்கலூர் பகுதியில் கடந்த 15.10.2023 அன்று இரவு பெய்த கனமழையின் காரணமாக 16.10.2023 அன்று சிற்றார் அணையிலிருந்து 1000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெ டுத்து பரக்காணி தடுப்பணை ஓரமாக தண்ணீர் வரப்பெற்று புருஷோத்தமன் நாயர், சுனில்குமார் ஆகியோரின் வீடுகள் சேதமடைந்ததோடு, கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது சுமாதேவி வீடும் சேதமடைந்தது.

    மேலும் கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் "அ" கிராமம், பரக்காணி என்னுமிடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அரிப்பு ஏற்படாதவாறு தண்ணீர் நிரம்பியுள்ள பட்டா நிலத்தில் மண் நிரப்புதல் மற்றும் தடுப்பணை மேலும் நீட்டித்து கட்டுவது தொடர்பான திட்டப்பணி பொதுப்பணி துறையில் நிலுவையில் உள்ளது. இந்த பணியினை விரைந்து முடித்திடக்கோரி அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரியும், கரைகள் அரிப்பு ஏற்படாமல் இருக்க தடுப்பு சுவர் கட்ட வேண்டியும் அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அதனடிப்படையில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவுறுத்தலுக்கிணங்க பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்த 3 குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கையினை மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக அனுப்பியதை தொடர்ந்து கனமழையினால் வீடுகளை இழந்த வைக்கலூர் பகுதியை சேர்ந்த 3 குடும்பத்தினருக்கும் கொல்லங்கோடு நக ராட்சிக் குட்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போதும் வைக்கலூர் பகுதி அதிக அளவு சேதமடைந்திருந்தது.

    தாமிரபரணி ஆற்றுப்படுகைக்குட்பட்ட வைக்கலூர், ஆற்றங்கரை பகுதியில் அமைந்திருந்த 2 வீடுகள் சேதமடைந்து சாலைகள் அரிப்பு ஏற்பட்டதன் அடிப்படையில், ஆற்றோர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சா லைத்துறை மற்றும் நீர்வளம் ஆதாரத்துறை யினருக்கு அறிவுறுத்தப்பட் டது.

    அதனடிப்படையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று தடுப்பு சுவர் அமைப்பதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, மனோதங்கராஜ், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலையில் திருவட்டார் வட்டம், மேக்கோடு கிராமத்தில் புதிதாக அமையவுள்ள ஊழியர்களின் மாநில காப்பீடு மருத்துவமனைக்கான இடத்தினை பார்வையிட்டார்கள்.

    நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பொதுப்ப ணித்துறை (நீர்வளம்) துணை செயற்பொறியாளர் பொறியாளர் பாஸ்கர், திருவட்டார் தாசில்தார் முருகன், கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் கமலாசனன் நாயர், ஷீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்தாமரைகுளம்:

    அகஸ்தீஸ்வரம் மேலதெருவை சேர்ந்தவர் ஜெகதா (வயது 58). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (62), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஜெகதா கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மதியம் துணிகளை வீட்டில் மொட்டமாடியில் உள்ள கொடியில் காயபோடும்போது தன்னைத்தானே நிலைதடுமாறிமேலே இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு துடி துடித்துள்ளார்.

    இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பக்கத்தில் நின்றவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ராதாகிருஷ்ணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெகதா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெகதாவின் மகளுக்கு நாளை திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துபார்த்து செய்து வந்த நிலையில் திடீரென அவர் பலியானது அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பஸ் மற்றும் பல்வேறு வாகனங்களில் வருகின்றனர். வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அவர்கள் வந்து செல்கின்றனர்.

    நேற்று மாலை பெங்களூரூவில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் இன்று காலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச்சென்றதும், பணிமனைக்கு செல்ல டிரைவர் மற்றும் கண்டக்டர் புறப்பட்டனர்.

    அதற்கு முன்னதாக பஸ்சுக்குள் யாராவது இருக்கிறார்களா? ஏதேனும் பொருட்களை விட்டுச்சென்றுள்ளார்களா? என அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, பஸ்சின் கடைசி சீட்டுக்கு அருகே உள்ள டூல்ஸ் பாக்சை (பழுது உபகரணங்கள் வைக்கும் பெட்டி) திறந்து பார்த்தனர்.

    அங்கு 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகள் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனை எடுத்து எண்ணி பார்த்தபோது ரூ.2 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பணத்தை பார்வையிட்டனர்.

    அதனை வைத்துச்சென்றது யார்? என்ற விவரம் தெரியவில்லை. தவறுதலாக விட்டுச்சென்ற பணமா? அல்லது யாராவது அதனை மறைத்து கொண்டு வந்ததா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ஒரு வாலிபர் அங்கு வந்து பஸ்சில் தான் வந்தபோது, சிம்கார்டை தொலைத்து விட்டதாக கூறி பஸ்சுக்குள் ஏறி தேடினார். அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கிடமாக இருந்தது. இந்நிலையில் பணத்தை விட்டுச்சென்றதாக அவர் கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரையும், பஸ்சில் கைப்பற்றப்பட்ட ரூ.2 லட்சத்தையும் போக்குவரத்து துறையினர், கன்னியாகுமரி போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள், விசாரணை நடத்தியபோது, வாலிபர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் என்றும், சுசீந்திரம் கோவிலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை கொண்டு வந்தது ஏன்? அது அவருடையது தானா? என்ற தகவல் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேயர் மகேஷ் எச்சரிக்கை
    • தூய்மை பணி தொடக்கம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வடக்கு கோணத்தில் அனந்தன் குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏற்கனவே படகு சவாரி விடப்பட்டு இருந்தது. போதுமான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வராததால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த குளத்தில் தற்போது ஏராளமான குப்பைகள் கொட்டப்படுவதாகவும் குடிமகன்கள் தொந்தரவு செய்வதாகவும் மேயர் மகேஷுக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மேயர் மகேஷ் குளத்தை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.

    அதன்படி இன்று அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுப்பணித்துறை மாநகராட்சி மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குளத்தின் கரையில் கிடந்த முட்புதர்கள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது அனந்தன் குளத்தில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனில் பொதுமக்கள் யாரும் இந்த குளத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது. வீடுகளில் இருந்து கழிவுகள் விடப்படுவதாகவும் புகார்கள் வந்தது. வீடுகளில் இருந்து கழிவுகளை குளத்தில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் உறிஞ்சிக்குழாய்கள் அமைக்க வேண்டும். பொதுமக்கள் இந்த பகுதியில் மது அருந்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். குளத்தின் கரையில் இருந்து பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்தினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதைத்தொடர்ந்து மீண்டும் குளத்தில் படகு சவாரி விட வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மேயர் மகேஷிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மகேஷ் உறுதி அளித்தார். ஆய்வின்போது நகர்நல அதிகாரி ராம்குமார் பங்குதந்தை சூசை ஆண்டனி, துணை மேயர் மேரி பிரின்சிலதா, கவுன்சிலர் சிஜி பிரவீன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று கடைகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.
    • கடையில் 436 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது இதன் மதிப்பு ரூ.3,500 ஆகும்

    குழித்துறை :

    மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்குட்பட்ட உண்ணாமலை கடை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, மார்த்தாண்டம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று கடைகளை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது உண்ணாமலை கடை குருசடி வீட்டு விளையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவரின் கடையில் 436 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3,500 ஆகும்.எனவே புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
    • மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு புதுகாடு வெட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 57). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தங்கபாய் (49). இவர்களுக்கு 2 மகள்கள் உண்டு.

    மூத்த மகள் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2-வது மகள் வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். செல்லப்பன் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை தங்கபாய் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்துவாங்க சென்று விட்டார். செல்லப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது கதவு சாத்திய நிலையில கிடந்துள்ளது. கதவை திறந்து உள்ளே சென்றபோது செல்லப்பன் பேன் மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்லப்பன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தங்கபாய் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சி.எஸ்.ஐ. பேராயத்தை சார்ந்த போதகர் சிபி ஆகியோர் முன்னிலையில் திருமண ஆராதனை நடைபெற்றது.
    • மணமக்களின் பெற்றோர், மணமகளின் சகோதரர் ரிஷ்வின் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

    நாகர்கோவில், அக்.22-

    நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள வின் நிஸான் மற்றும் வின் சுசூகி நிறுவனங்களின் நிறுவனர் ஆல்வின்- ெஜபஷீலா ஆல்வின் தம்பதியரின் மகள் டாக்டர் ரித்து ஆல்வினுக்கும் சென்னை வேல்டு விஷன் இந்தியா கிளையின் தலைமை கணக்கு அதிகாரி ெஜயசிங், சென்னை அம்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மார்க்ரெட் ேஜாஸ்பின் தம்பதியரின் மகன் டாக்டர் மேஷாக்குக்கும் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. கஸ்பா தேவாலயத்தில் வைத்து திருமணம் நடை பெற்றது. கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் எ.ஆர். செல்லையா தலைமையில் சி.எஸ்.ஐ. கஸ்பா சபை போதகர் விக்டர் ஞானராஜ், வின்சென்ட் ராபர்ட், ராஜா ஜெயசிங் மற்றும் திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ. பேராயத்தை சார்ந்த போதகர் சிபி ஆகியோர் முன்னிலையில் திருமண ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கோட்டார் பறக்கை சந்திப்பில் அமைந்துள்ள எம்.டி.பி. சமுதாய நல கூட்டத்தில் வைத்து நடை பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நாகர்கோவில் ஸ்காட் நகர் சி.எஸ்.ஐ. திருச்சபை போதகர்கள் ேஜாஸ்வா டாணியல் மற்றும் துணை போதகர் கிறிஸ்டோபர் யூஜின்தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர். டானியல் வாழ்த்தி பேசினார். சென்னை நியூ லைப் மினிஸ்ட்ரீஸ் போதகர் ஜெபகுமார் மண மக்களுக்கு ஆசி கூறி பேசினார்.

    முன்னதாக (திருமணத் திற்கு முந்தைய நாள்) மணமகள் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் மோகன் சி.லாசரஸ் கலந்து கொண்டு மணமக்களுக்கு இறையாசி வழங்கினார்.

    தொடர்ந்து பொன் ஜெஸ்லி குழுமங்களின் தலைவர் பொன்ராபர்ட் சிங், நிஸான் மற்றும் சுசூகி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், திருவனந்தபுரம் மரைக்கார் குழுமங்களின் தலைவர் சுல்பிகர் மரைக்கார், டெரிக் குரூப் நிறுவனங்களின் தலைவர் ஸ்டாலின், தக்கலை கவின் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் கவின், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் சுசூகி டீலர்கள் தினேஷ் மற்றும் கிங்ஸ்டன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்விஜய ராகவன், கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ்கு மார், குமரி பேராய செயலாளர் வழக்கறிஞர் தினேஷ், கருங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் வழக்கறிஞர் டைட்டஸ், ஓய்வுபெற்ற நீதிபதி ரொனால்ட் ஆர்.டேனியல், சுவாமிதோப்பு அன்புவன தலைவர் பாலபிராஜதிபதி அடிகளார், கருங்கல் இயேசு நம்மோடு சபை போதகர் ெஜயந்த் ராஜ், காட்டாதுறை போதகர் காலேப் ஊழியர்கள் ராஜன், குரூஸ் மாசிலாமணி, சுரேஷ்காணி, ரெஜினிகுமார் மற்றும் மருத்துவர்கள், பத்திரிக்கையாளர்கள், சபை போதகர்கள் அரசியல் பிரமுகர்கள், தொழிலதி பர்கள், உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். வேல்டு விஷன் இந்தியா அதிகாரிகள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் மணமக்களின் பெற்றோர், மணமகளின் சகோதரர் ரிஷ்வின் மற்றும் உறவினர்கள் வரவேற்றனர்.

    • விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார்
    • தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் எம்.சி.ஏ. சங்க தொடக்க விழா நடை பெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் என்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த மகா கிருஷ்ணன், விஜய் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

    விழாவில் முதலாம் ஆண்டு எம்.சி.ஏ. மாணவி பவித்ரா வரவேற்று பேசினார். முதல்வர் டாக்டர் ஆர்.ராஜேஷ் சிறப்புரை யாற்றினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜாபர் "கணினி பயன்பாடுகளில் தொழில் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தொழில்நுட்ப விளக்கத்தை வழங்கினார். சங்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தற்போதுள்ள பதவிக்காலத்தில் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும்.

    குழுவில் துணை தலைவர், பொதுச்செயலர், இணை செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பி னர்கள் ஆகியோர் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பா ளரால் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளனர். எம்.சி.ஏ. துறை தலைவர் பேராசிரியர் வஹிதா.கே.தங்கம் சங்க நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முடிவில் தீபக் நன்றி கூறினார்.

    • பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.
    • வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டா ரில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஏராளமான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் மருந்து வாங்கு வதற்கும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் எங்கு பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெண் டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் இன்று ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக பயிற்சி டாக்டர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத் தப்பட்டது. பயிற்சி மாணவி களிடம் தனிஅறையில் சுமார் ஒரு மணி நேரமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டார். பெண் டாக்டர் கூறியுள்ள தகவல்கள் உண்மைதானா? என்பது குறித்த விவரங்களை அவர் பயிற்சி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

    புகார் தெரிவித்த டாக்டர் வேறு யாருக்காவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து உள்ளாரா என்பது குறித்த தகவல்களையும் போலீசார் கேட்டறிந்தனர். பெண் டாக்டர் புகார் கூறிய டாக்டர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்ததாக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்டமாக அவரிடம் விசாரணை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர். பெண் டாக்டர் ஒருவருக்கு டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு குலசேகரம் அருகே மருத்துவக் கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் பயிற்சி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் நடை பெற்று சில நாட்களிலேயே மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுஉள்ளது.

    இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம்அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதை யொட்டி கடந்த 2 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதற்கிடையில் கன்னியா குமரி கடல் நடுவில்அமைந் து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகுபழுதடைந்த நிலையில் இருந்ததால் அதனை கரையேற்றி ரூ.10 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குரத்துக்கழகம் முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து குகன் படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறையில் இருந்து கடல் வழியாக சின்ன முட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கடந்த 5-ந்தேதி கொண்டு செல்லப்பட்டது. அங்கு குகன் படகு கரையேற்றப் பட்டு சீரமைக்கும் பணிநடந்தது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று சின்ன முட்டம் துறைமுகத் தில் உள்ள படகு கட்டும் தளத் தில் இருந்து இறக்கி கடல் வழியாக கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஆயுத பூஜை தொடர் விடுமுறையை யொட்டி குகன்படகு புதுப் பொலிவுடன் நேற்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    • ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடந்தது
    • அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் அஞ்சுகிராமத்தில் நடை பெற்றது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலா ளர் ஜெஸீம் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், அழகப்பபுரம் பேரூர் செய லாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பகவதி குமார் என்ற கண்ணன், ஊராட்சி கழக பொறுப்பா ளர்கள் லீன், செல்லப்பெரு மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூர் செயலாளர் ராஜ பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரத்தை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் நியமனம் செய்த அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்-அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரி விப்பது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிக்காக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பூத் கமிட்டி அமைத்து அயராது பாடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒன்றிய செயலாளராக பதவியேற்றுள்ள ஜெஸீம்-க்கு நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. அ.தி.மு.க. கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை இந்த மாதம் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும், வடக்கு ஒன்றியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறை வேற்றப் பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் லெட்சுமணன், செல்லம்பிள்ளை, வீரபத்தி ரன், விஜயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி
    • பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்ட மைப்பு நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. பின்னர் குமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவன தலைவர் பாஸ்கரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரம் இல்லை என்ற கவர்ச்சிகரமான போலி யான விளம்பரத்தை அறிவித்து மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு செயல்பட்ட நிறுவனத்தை கூட்டமைப்பின் சார்பாக பலமுறை கண்டித்தும் மிகபெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி உள்ளனர்.

    மேலும், செய்கூலி மற்றும் சேதாரம் இல்லாமல் எந்த ஒரு நகையும் செய்ய இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இது போன்ற போலி விளம்பரங்களால் பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்களின் தொழிலும், வாழ்வாதாரமும் பாதிக் கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

    எனவே நியாயமற்ற போலி விளம்பரங்களை உடனடியாக தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி போலியான விளம் பரங்களை தடுத்திட வழிவகை செய்து பல லட்சம் விஸ்வகர்மா நகை தொழிலாளர்கள் மற்றும் நகை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கி றோம். மேலும் பொதுமக்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாமல் இருக்குமாறும் தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தினை கொண்டு தரமான நியாயமான முறையில் நகைகளை வாங்கிடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது விஸ்வகர்மா கூட்டமைப்பின் தலைவர் மாணிக்கம், செய லாளர் முத்துகுமார், பொருளா ளர் நாகேஷ், வழக்கறிஞர் பால முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×