என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

    நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ஸ்ரீராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பெருமாளுக்கு 10-நாள் பிரம்மோற்சவமும், ஸ்ரீராமானுஜருக்கு 10 நாள் அவதார திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஸ்ரீராமானுஜரின் 1006-வது ஆண்டு அவதார திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. யானை, குதிரை, சூரிய பிரபை உள்ளிட்ட வாகனங்களில் ஸ்ரீராமானுஜர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 9-வது நாளான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. காந்தி சாலை, திருமங்கை ஆழ்வார் சாலை வழியாக ராமானுஜர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஸ்ரீஆதிகேசவ பெருமாள் பிரம்மோற்சவ விழா மே 4-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை 10-ம் நாள் நடை பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 10-ந் தேதி காலை தேர் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    • பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணிமங்லம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த காவனூர் படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன். நேற்று முன்தினம் விஜயரங்கன், அவரது மனைவி, 2 மகள்களும் வேலைக்கு சென்றுள்ளனர்.

    மாலையில் விஜயரங்கனும், அவரது மனைவியும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டிருந்தது.

    இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
    • ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    காஞ்சீபுரம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் 8 அடி அகலம்,8 அடி உயரத்தில 5 முகங்கள் உடைய ஒரு லட்சத்து 8 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது.

    இதனை பூ வியாபாரி கார்த்திகேயன் என்பவர் தலைமையில் ஏராளமான சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து ராஜவீதிகளில் வீதி உலாவாக எடுத்து வந்தனர்.

    இந்த பிரம்மாண்ட ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் மலர்தூவி வரவேற்று பயபக்தியுடன் வழிபட்டனர். பூக்கடை சத்திரத்தில் தொடங்கிய சிவலிங்கம் உலா பின்னர் திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை அடிவாரம் அடைந்ததும் அங்குள்ள உள்ள நித்ய அன்னதான சத்திரத்தின் தலைவர் விஸ்வநாதனிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    சிவலிங்க வீதி உலாவின் போது சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டன. ருத்ராட்ச சிவலிங்கத்தை வழிபட ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பாவாபேட்டை தெருவை சேர்ந்தவர் அயூப் கான்(வயது50).வேன் டிரைவர்.

    நேற்று இரவு அவர் சவாரிக்கு சென்றுவிட்டு ரங்கசாமி குளம் பகுதியில் வேனை நிறுத்தினார். பின்னர் அயூப்கான் அங்கு மதுகுடித்ததாக தெரிகிறது.

    அப்போது அவ்வழியே மதுபோதையில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் அயூப்கானிடம் பணம் கேட்டு மிரட்டினர். இதனை அயூப்கான் கண்டித்தார். இதனால் அவருக்கும், வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அயூப்கானை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். மேலும் அருகில் கிடந்த கல்லால் அவரது தலையில் கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அயூப்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவ்வழியே சென்றவர்கள் அயூப்கான் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலையில் தொடர்புடைய சேக்குப்பேட்டையை சேர்ந்த பிரதீப் குமார் (20), பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    பணம் கொடுக்காததால் வேன் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் பால் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து கூடுதலாக பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வெளியே அவற்றை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 576 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவர் மீதும் ஆவின் பால் நிறுவன பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.

    • விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
    • சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது.

    ஆலந்தூர்:

    சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வங்கதேச தலைநகரம் டாக்கா செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

    அப்போது அந்த விமானத்தில், சென்னையில் இருந்து டாக்கா செல்ல வந்த, ஹையூல் அலி முகமது ஷேக் (28) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை.
    • போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் வீடு கட்டுவதற்கு பணி ஆணை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க. ஒன்றிய துணை செயலாளருமான சுபரஞ்சனியின் கணவர் கன்னியப்பன் தங்களது கிராமத்தில் 19 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணை உள்ளதாக மாவட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளரான அழகுபொன்னையாவிடம் வழங்கினார். இதேபோல் பயனாளிகளுக்கும் இந்த ஆணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அழகு பொன்னையா ஆய்வு செய்தபோது அந்த ஆணை போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இதுவரை சிறுமாங்காடு கிராமத்திற்கு எந்த ஒரு பணி ஆணையும் வழங்கப்படவில்லை. ஆனால் என்னுடைய பெயரில் போலி ஆணை தயாரித்து பயனாளிகளிடம் கொடுத்து ஏமாற்றி உள்ளனர் என்று தெரவித்து இருந்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி போலி ஆணை வழங்கியதாக ஊராட்சி தலைவியின் கணவர் கன்னியப்பன் மற்றும் 5-வது வார்டு உறுப்பினர் பிலோமினாவின் கணவரான தி.மு.க.வை சேர்ந்த வாசு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களுக்கு போலி ஆணையை அச்சடித்து கொடுத்தது யார்? இதன் பின்னணியில உள்ளவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீடுகட்ட போலி ஆணை கொடுத்த விவகாரத்தில் ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் அவரது நண்பர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நெய்த வாயல் ஊராட்சி. இங்கு 100 நாட்கள் வேலைதிட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஊராட்சி தலைவர் பாலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அதிகாரி சந்திரசேகரை பொதுமக்கள் பொதுக்கழிப்பிடம் கட்டி பயன்பாடற்றுக் கிடப்பதாக நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறும்போது,

    100 நாட்கள் வேலை என கூறி குறைந்த நாட்களே வேலை வழங்குகிறார்கள். சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்கவில்லை. 3-வது மற்றும் 4-வது வார்டில் மின்மாற்றியை மாற்றி அமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை குடிநீருக்காக கட்டப்பட்ட குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பழுதடைந்த நிலைமையில் உள்ளது.அரசாங்கத்தால் வீடு கட்டும் திட்டத்திற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நான்கு வருடம் கடந்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

    • தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும்.
    • தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும்.

    மணி எட்டு ஆச்சுடா... இன்னுமா தூங்குறே என்று அம்மாவோ, அப்பாவோ அலாரம் அடித்த பிறகுதான் பெரும்பாலும் படுக்கையில் இருந்து லேசாக புரள்வார்கள்.

    ஆனாலும் எழும்ப மாட்டார்கள். ஏம்மா தூக்கத்தை கெடுக்கிறே என்றுதான் கோபப்படுவார்கள். ஆனால் இப்போது தூக்கம் வராததே பலருக்கு பிரச்சினையாகி வருவது ஆச்சரியமாகி உள்ளது.

    பொதுவாக தூக்கமின்மை என்பது பல்வேறு காரணங்களால் ஏற்பட்டாலும் இதுவும் ஒரு நோயாக உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 30 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எல்லா நோய் சார்ந்த பிரிவுகளைபோல் தூக்க குறைபாடு சிகிச்சை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த துறைக்கு பிரத்யேகமாக மருத்துவ குழுவினரும் இருக்கிறார்கள். இதுபற்றி மருத்துவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொருவருக்கும் தூக்கம்தான் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம். அயர்ந்து தூங்கி எழுந்தாலே உடல் புத்துணர்ச்சி பெற்று விடும்.

    தூக்கமின்மை ஏற்பட்டால் உளவியல் செயல்பாடு மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருப்பினும் வயதுக்கு ஏற்ப தூக்க முறையில் மாற்றமும் வரும். உதாரணமாக வயதானவர்களுக்கு இரவில் தூக்கம் குறையலாம். அதற்கு ஈடுகட்டும் வகையில் பகலில் தூங்குவார்கள்.

    தூக்கமின்மை என்பது ஒருவரை சோர்வாகவும், மனச்சோர்வுடனும், எரிச்சலுடனும் செயல்பட வைக்கும். அன்றாடம் செய்யும் வேலை திறனை குறைக்கிறது.

    அது மட்டுமல்ல. ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதயநோய் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். உடலில் இருக்கும் பல்வேறு வலிகள், மோசமான உணவு பழக்கங்கள், பணி நேர மாறுதல்கள், மனஅழுத்தம், கவலை, ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    ஆஸ்துமா, கீல்வாதம், நெஞ்செரிச்சல், நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களாலும் தூக்கம் கெடும். ஒரு நோயாளியின் தூக்கமின்மைக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். சிறந்த தூக்க பழக்கத்தை வளர்த்துக்கொள்ள சில ஆலோசனைகள்.

    * சோர்வாக உணரும்போது மட்டும் தூங்க வேண்டும்.

    * தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் சூடான பால் குடிக்கலாம்.

    * படுக்கை அறை அமைதியாகவும், இருட்டாகவும் இருக்க வேண்டும்.

    * படுக்கைக்கு செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * படுக்கையில் டி.வி. பார்ப்பது, படிப்பது, செல்போன் பயன்படுத்துவது, லேப்டாப்பில் மூழ்கி இருப்பது, கவலைப்படுதலை தவிர்க்க வேண்டும். இவை தூக்கத்தை கலைத்துவிடும்.

    தூக்க கோளாறுகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல இரவு தூக்கம் மிகவும் முக்கியமானது.

    நேத்து ராத்திரி...யம்மா தூக்கம் யோச்சுடி...யம்மா என்பது இரவு சுகமான அனுபவமாக இருக்கலாம்.

    எந்நாளுமே தூக்கம் போச்சே என்று புலம்பினால் அது சோக வாழ்க்கையின் அறிகுறிதான்.

    • கார் டிரைவர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    கஞ்சா விற்பனை மற்றும் புழக்கத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்த டிரைவர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம், பல்லவர்மேடு கிழக்குபகுதியை சேர்ந்தவர் கண்ணுசாமி(43). கார் டிரைவர். இவரது வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வெட்டப்பட்ட தண்ணீர் கேனில் மணல் நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வருவது தெரிந்தது. சுமார் 3 அடி உயரத்தில் வளர்ந்து இருந்த அந்த கஞ்சா செடியை போலீசார் பறிமுதல் செய்து அதனை வளர்த்த டிரைவர் கண்ணுசாமியை கைது செய்தனர். அவர்தான் பயன்படுத்த கஞ்சா செடியை வளர்த்து வந்ததாக தெரிவித்து உள்ளார்.

    இதற்கிடையே அவர் கஞ்சா செடி வளர்த்து சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. கண்ணுசாமி வீட்டில் கஞ்சா செடியை வளர்க்க தொடங்கியதும் அவர் மீது சந்தேகப்பட்ட மனைவி இதுபற்றி கேட்டு உள்ளார். ஆனால் அவர் புளிச்சகீரை செடி என்று கூறி சமாளித்தார். இதனை அப்பாவியாக நம்பிய அவரது மனைவியும் கீரைச்செடி என்று நினைத்து அதற்கு தண்ணீர் ஊற்றி வந்து உள்ளார்.

    ஆனால் வீட்டில் வளர்ந்து வருவது கஞ்சா செடி என்று கண்ணுசாமியின் மகனுக்கு தெரிந்தது. பள்ளியில் படித்து வரும் அவர் இந்த கஞ்சா செடியை செல்போனில் வீடியோவாக படம் பிடித்து எங்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்கிறது என்று தனது நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். பின்னர் இந்த வீடியோ வைரலாக பலருக்கு பரவி உள்ளது. அப்படி இந்த வீடியோ போலீசாரின் செல்போனுக்கும் வந்தது. இதன்பின்னரே உஷாரான போலீசார் கண்ணுசாமியின் வீட்டில் சோதனை செய்தபோது அவர் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தி வந்தது தெரிந்தது. கஞ்சா செடி குறித்து மகன் அனுப்பிய வீடியோவால் அவர் சிக்கிக்கொண்டார். இது தொடர்பாக கண்ணுசாமியிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×