search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வாலிபர்களை கடத்திய கடத்தல் கும்பலை மரத்தில் கட்டிவைத்து  சரமாரியாக தாக்கிய ஊர்மக்கள்
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே 2 வாலிபர்களை கடத்திய கடத்தல் கும்பலை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய ஊர்மக்கள்

    • போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள்.
    • கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷியாம் (வயது 17). பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷியாம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் ஷியாமிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஷியாமை கடத்தி சென்றனர்.

    அன்று இரவு கடத்தல் கும்பல் ஷியாமிடம், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி போனை தருமாறு கூறினார்கள். அவர் உடனடியாக தனது உறவினர் பிரேம் (20) என்பவருக்கு போன் செய்து அழைத்தார். பிரேம் ஷியாமை தேடி அவர் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது அந்த கும்பல் பிரேமையும் கடத்தி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் அவர்கள் இருவரையும் அங்குள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடியே 2 வாலிபர்களின் உறவினரான பிரேம் நசீர் என்பவரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டனர். 2 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் தாங்கள் சொல்லும் மொபைல் நம்பருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் செலுத்துமாறு கூறினார்கள். மேலும் போலீசில் புகார் அளித்தால் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

    இதையடுத்து பிரேம் நசீர், கடத்தல்காரர்கள் சொன்ன மொபைல் நம்பருக்கு ஜிபே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். தன்னிடம் அவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதற்கு கடத்தல்காரர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மேலும் ரூ.4 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். ஆனால் மேலும் பணம் வேண்டும் என்று அவர்கள் கூறியதால் மீண்டும் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். ஆனாலும் கடத்தல் கும்பல் 2 வாலிபர்களையும் விடவில்லை. ரூ.14 ஆயிரம் அனுப்பிய பிறகும் இருவரையும் விடுவிக்காததால் அவர்களது குடும்பத்தினர் ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள். அப்போது கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் அங்கு செல்வதற்கு முன்பே ஊர் பொதுமக்கள் வனப்பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கு கடத்தப்பட்ட 2 வாலிபர்களும் கடத்தல் காரர்கள்கள் 4 பேரும் இருந்தனர். பொது மக்கள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல் கும்பல் கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    பதிலுக்கு பொதுமக்கள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கடத்தல்காரர்கள் நிலை குலைந்தனர். பின்னர் கடத்தப்பட்ட 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மீட்டனர். அதன் பிறகு கடத்தல்காரர்கள் 4 பேரையும் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஒருவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றவர்களுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த நட்ராஜ் (31), அய்யப்பன் (19), படப்பையை சேர்ந்த மணிகண்டன் (19), சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (19) என்று தெரிய வந்தது. இந்த கும்பல் இதே போல் பொதுமக்களை கடத்தி சென்று பணம் பறித்து வருவதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல்காரர்களை ஊர் பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×