என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பல்லலர் மேடு, சி.எஸ்.எம்.தோப்பு தெரு பிள்ளையார்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சீ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அங்கு உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையொட்டி, கோவிந்தம்மாள் (வயது 62), விசாலாட்சி (57) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது.
    • முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

    காஞ்சிபுரம்:

    உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு வாசல் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையில் இணை ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளை எனும் அமைப்பு செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பை அதன் முன்னோர்கள் உருவாக்கி அதில் இருந்து வரும் வருவாயில் ஒரு பகுதியை கோவில் செலவுகளுக்கும், மீதத்தை கட்டளை செலவுகளுக்கும் வைத்து கொள்ள வேண்டும் எனவும், இந்த சொத்தானது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் எழுதி வைத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் இந்த சொத்தானது அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

    இந்த அமைப்பின் கீழ் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தது.

    குறிப்பாக வேலூரில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் சித்தேரிமேடு என்ற இடத்தில் 350 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த அமைப்பின் வாரிசுரிமை பரம்பரை அறங்காவலராக சி.வி.சந்திரசேகரன் என்பவரும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கொல்லா சிங்கண்ண செட்டி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் கட்டியது மற்றும் பயணிகள் தங்கும் விடுதி கட்டியது என சட்ட விரோத செயல்களையும் செய்து வந்ததாகவும், சொத்துகளை அறநிலையத்துறைக்கு தெரியாமல் விற்க முயற்சித்திருப்பதாகவும் பல்வேறு புகார்கள் அறநிலையத்துறைக்கு வந்தது. இதனை தொடர்ந்து சந்திரசேகரை அறநிலையத்துறை இணை ஆணையர் பதவி நீக்கம் செய்ததுடன் கட்டளையின் தக்காராக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியை நியமித்தும் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் முத்துலட்சுமி கொல்லா சிங்கண்ண செட்டி கட்டளையின் தக்காராக கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார். மேலும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையர் (பொறுப்பு) லட்சுமி காந்தன் பாரதி தலைமையில் செயல் அலுவலர்கள் வேலரசு, கார்த்திகேயன், ஆய்வாளர் பிரித்திகா, தனி தாசில்தார் வசந்தி, கிராம நிர்வாக அலுவலர் கோகுலகிருஷ்ணன், சிவகாஞ்சி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கட்டளை அலுவலகத்துக்கு சென்று அதை மீட்டு தக்காராக முத்துலட்சுமி நியமனம் பற்றிய தகவலை கதவில் ஒட்டினார்கள்.

    இதன் மூலம் கட்டளை இடத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மேலும் கட்டளை சொத்துகள் சம்பந்தமாக ஏதேனும் விவரங்கள் தேவைப்படுவோர் தக்காராக நியமிக்கப்பட்டுள்ள முத்துலட்சுமியை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
    • காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலராக (முழு கூடுதல் பொறுப்பு) சு.உமாபதி பதவி ஏற்றார். மேலும் இவர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் துணைப் பதிவாளர் மற்றும் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

    உமாபதி ஏற்கனவே காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்), பணியாளர் அலுவலர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் செயலாளர், பொது விநியோக திட்ட பொது மேலாளர், காஞ்சிபுரம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மண்டல மேலாளர் போன்ற துணைப்பதிவாளர் பணியிடங்களில் முழு கூடுதல் பொறுப்பில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர்.
    • டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளன.

    கிரிக்கெட் வீரர் டோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அவர் விளையாடும் போது ரசிகைகள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

    இந்நிலையில் டெல்லியை சேர்ந்த 'மேக்-அப்' கலைஞரான தீக்ஷிதா ஜிந்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் டோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக டோனி போலவே மாறிய காட்சிகள் உள்ளன.


     இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளிக்கிறார்கள்.

    • பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:-

    காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் நிலையம் அமைக்க தகுதியான இடத்தினை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய குழுத்தலைவர் மலர்கொடி குமார் உடன் இருந்தனர்.

    • கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.
    • மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்துக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பி. டி.ஆர்.பாலு தலைமை தாங்கினார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்தார். நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, மகளிர் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் பிற துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், பாராளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் காப்பீட்டு திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகள் காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப் போம் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா போன்ற திட்டப் பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி, பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர்வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம், செயல்படுத்தும் திட்டங்கள், மாற்று திறனாளிகளுக்கான திட்டங்கள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவை பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் மழைநீர் வடிவதற்காக செயல்படுத்தும் பணிகளின் விவரங்களை கேட்டறிந்த டி.ஆர்.பாலு எம்.பி. மழை காலம் வருவதற்குள் அரசு பணிகளை முடிக்கும் வகையில் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

    • கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    • அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஸ் (வயது29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (21) ஆகியோருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் சேர்ந்து அதீசை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தம்பி கொலையில் அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அப்போது காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.
    • ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஏலக்காய்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகள் ஷீபா (வயது 25), இவர் குன்னவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷீபாவின் குடும்பத்தினர் ஷீபாவை காணவில்லை என ஒரகடம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் ஷீபாவிடம் யார் யார் செல்போனில் பேசி உள்ளனர் என்ற விவரத்தை போலீசார் சேகரித்தனர்.

    ஷீபாவிடம் கடைசியாக பேசிய ஒரகடம் அடுத்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் (வயது 26) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சாமுவேலும் ஷீபாவும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து பழகி வந்ததாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி சாமுவேலிடம் ஷீபா கூறிவந்தார்.

    இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷீபா காதலன் சாமுவேலுடன் காரில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். வெளியே சென்று விட்டு வீடு திரும்பியபோது சுங்குவார்சத்திரத்தை அடுத்த கோவலவேடு ஏரி பகுதிக்கு ஷீபாவை அழைத்துசென்று அங்கு வைத்து ஷீபாவின் கழுத்தை டிஷர்ட் மூலம் நெரித்து கொலை செய்ததும் உடலை ஏரியின் மதகுப்பகுதியில் வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த கொலை சம்பவம் குறித்து தொடர்ந்து காதலன் சாமுவேலிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள்.
    • கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ஷியாம் (வயது 17). பிளஸ்2 படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷியாம் அந்த பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் முகவரி கேட்பது போல் ஷியாமிடம் பேச்சு கொடுத்தனர். திடீரென்று அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஷியாமை கடத்தி சென்றனர்.

    அன்று இரவு கடத்தல் கும்பல் ஷியாமிடம், குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு பேசி போனை தருமாறு கூறினார்கள். அவர் உடனடியாக தனது உறவினர் பிரேம் (20) என்பவருக்கு போன் செய்து அழைத்தார். பிரேம் ஷியாமை தேடி அவர் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது அந்த கும்பல் பிரேமையும் கடத்தி வைத்துக் கொண்டனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் அவர்கள் இருவரையும் அங்குள்ள வனப்பகுதிக்கு கடத்தி சென்றனர். பின்னர் அங்கிருந்தபடியே 2 வாலிபர்களின் உறவினரான பிரேம் நசீர் என்பவரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டனர். 2 பேரையும் விடுவிக்க வேண்டுமானால் தாங்கள் சொல்லும் மொபைல் நம்பருக்கு ரூ.50 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் செலுத்துமாறு கூறினார்கள். மேலும் போலீசில் புகார் அளித்தால் இருவரையும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டினார்கள்.

    இதையடுத்து பிரேம் நசீர், கடத்தல்காரர்கள் சொன்ன மொபைல் நம்பருக்கு ஜிபே மூலம் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். தன்னிடம் அவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கூறினார்.

    ஆனால் அதற்கு கடத்தல்காரர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மேலும் ரூ.4 ஆயிரம் பணத்தை ஜிபே மூலம் அனுப்பினார். ஆனால் மேலும் பணம் வேண்டும் என்று அவர்கள் கூறியதால் மீண்டும் ரூ.5 ஆயிரம் அனுப்பினார். ஆனாலும் கடத்தல் கும்பல் 2 வாலிபர்களையும் விடவில்லை. ரூ.14 ஆயிரம் அனுப்பிய பிறகும் இருவரையும் விடுவிக்காததால் அவர்களது குடும்பத்தினர் ஒரகடம் போலீசில் புகார் அளித்தனர்.

    இதையடுத்து போலீசார் பணம் அனுப்பிய செல்போன் நம்பரை வைத்து கடத்தல் கும்பல் பதுங்கி இருக்கும் இடத்தை தேடினார்கள். அப்போது கடத்தல் கும்பல் வடக்குப்பட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் வனப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் அங்கு செல்வதற்கு முன்பே ஊர் பொதுமக்கள் வனப்பகுதிக்கு திரண்டு சென்றனர். அப்போது அங்கு கடத்தப்பட்ட 2 வாலிபர்களும் கடத்தல் காரர்கள்கள் 4 பேரும் இருந்தனர். பொது மக்கள் கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர். அப்போது கடத்தல் கும்பல் கத்தியை காட்டி மிரட்டினார்கள்.

    பதிலுக்கு பொதுமக்கள் கற்கள் மற்றும் மரக்கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் கடத்தல்காரர்கள் நிலை குலைந்தனர். பின்னர் கடத்தப்பட்ட 2 வாலிபர்களையும் பொதுமக்கள் மீட்டனர். அதன் பிறகு கடத்தல்காரர்கள் 4 பேரையும் பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் ஒருவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒருவருக்கு மண்டை உடைந்தது. மற்றவர்களுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கடத்தல்காரர்கள் 4 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த நட்ராஜ் (31), அய்யப்பன் (19), படப்பையை சேர்ந்த மணிகண்டன் (19), சென்னை கண்ணகி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (19) என்று தெரிய வந்தது. இந்த கும்பல் இதே போல் பொதுமக்களை கடத்தி சென்று பணம் பறித்து வருவதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல்காரர்களை ஊர் பொதுமக்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு நிலைநாட்டியவர் ஆதிசங்கரர். இவரது 2532-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆதிசங்கரர் ஜெயந்தி விழா தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

    திருப்பதியில் உள்ள விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    இதேபோல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடுமுழுவதும் சங்கரர் ஜெயந்தி விழாவை கொண்டாட காஞ்சி சங்கரமடம் ஏற்பாடு செய்துள்ளது. ஆதி சங்கரரின் சத்தியம், ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை பரப்புவதே இதன் நோக்கம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சசிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன ஆதிசங்கரர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. அதேபோல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள ஆதிசங்கரர் சன்னதியில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் சார்பில் திருப்பதி, காலடி, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாடு முழுவதும் ஆதிசங்கரருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இன்று மாலை நடை பெறும் நிகழ்ச்சியில் காஞ்சி பாடசாலையில் 4 வேதங்கள் கற்ற 175 மாணவர்களுக்கு சான்றிதழ்களை சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்குகிறார்.

    இதுகுறித்து சங்கர மடத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 'ஆதிசங்கரரின் 2532-வது ஆண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த வேதபண்டிதர்கள், ஸ்ரீநகரில் உள்ள சங்கராச்சாரியா மலையிலும், புனேயை சேர்ந்தவர்கள் நேபாளத்திலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் அமிர்தசரஸ் மற்றும் சண்டிகரிலும், புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிக்கிமிலும் கூடி உள்ளனர். ஆதிசங்கரர் ஒருமைப்பாட்டுக்காக பாடுபட்டார்' என்றனர்.

    • நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.
    • பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவர் கல்லூரியின் வரவு-செலவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வருவதாக தெரிகிறது.

    அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே இந்த கல்லூரியில் வசூலிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பெறப்படும் டெபாசிட் பணம் வங்கியில் நிரந்தர வைப்புநிதி கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.

    இந்நிலையில் பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. கல்லூரிக்கு சொந்தமான 9 வங்கி கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.

    ரூ.3 கோடி வரை பண மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் இந்த பணத்தை எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வங்கி கணக்கு விவரங்களை நிர்வகித்து வரும் ஊழியர் பிரபு மீது சந்தேகம் உள்ளதாக கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×