என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானம் தரை இறங்கும்போது சக்கரம் இயங்காததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக 143 பேர் உயிர் தப்பினர்.
    ஆலந்தூர்:

    டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது.

    இந்த விமானத்தில் 138 பயணிகள் 5 ஊழியர்கள் உள்பட 143 பேர் இருந்தனர்.

    விமானத்தை கீழே இறக்க விமானி முயற்சித்தார். அப்போது விமானத்தின் சக்கரம் இயங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

    எனவே விமானி வானத்தில் வட்டமடித்தார். சக்கரத்தை இயக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து விமான இறங்கு தளத்தில் தீயணைப்பு வண்டிகள், வீரர்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அதிரடி படையினரும் குவிக்கப்பட்டார்கள்.

    அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகளை மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பரபரப்பான சூழ்நிலையில் விமானம் தரை இறக்கப்பட்டது. அப்போது திடீர் என்று விமானத்தின் சக்கரம் இயங்கத் தொடங்கியது.

    எனவே விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது. அதில் இருந்த 143 பேரும் உயிர் தப்பினார்கள். அதன் பிறகே அங்கு நின்றவர்களும், விமானத்தில் இருந்தவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்த சம்பவத்தால் சென்னை விமானம் நிலையம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
    பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலந்தூர்:

    தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் பெருங்களத்தூர் அருகே ஜி.எஸ்.டி. சாலையுடன் இணையும் பகுதிக்கு அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று காலை ராதாகிருஷ்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தில் இருந்து 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
    சுதந்திர தினத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ஆலந்தூர்:

    சுதந்திர தினத்தையொட்டி சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழிற்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விமான பயணிகள் வழக்கமாக சோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது, உடமைகள், ஆவணங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பார்வையாளர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளியே விமான நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலைய பகுதிகளில் ஜீப்புகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள். வருகிற 20-ந் தேதிக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதர் விழா நிறைவு பெற இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே வரும் நாட்களில் பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    உள்ளூர் விடுமுறை நாட்களையும் சேர்த்து காஞ்சிபுரம் நகரத்துக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. வருகிற சனிக்கிழமை (10-ந் தேதி) முதல் திங்கட்கிழமை (பக்ரீத் பண்டிகை 12-ந் தேதி) வரை பொது விடுமுறையாகும். இந்த 3 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து சுதந்திர தின விடுமுறை. பின்னர் 16-ந் தேதி உள்ளூர் விடுமுறை ஆகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகள் என்பதால் காஞ்சிபுர நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    தொடர் விடுமுறை என்பதால் அத்திவரதர் விழாவில், வரும் நாட்களில் இதுவரை தரிசித்த பக்தர்களைவிட கூடுதலான பக்தர்கள் வருவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அத்தி வரதர் தரிசன நிறைவு நாளான 17-ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி முதல் விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்திவரதரை வழிபட கடந்த 7 நாட்களாக தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் குவிந்து வருவதால் காஞ்சிபுரம் நகரமே குலுங்கி வருகிறது.

    தமிழகத்தின் வெளிமாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.

    நேற்று மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது. காஞ்சிபுரத்தின் எல்லையிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நடந்து வந்தனர்.

    கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து அவர்கள் அத்திவரதரை வழிபட்டனர்.

    காஞ்சிபுரத்தில் திரண்ட பக்தர்கள் கூட்டம்


    39-வது நாளான இன்றும் காஞ்சிபுரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டது. அத்திவரதரை தரிசனம் செய்ய இன்னும் 9 நாட்களே இருப்பதால் இன்று பக்தர்கள் வருகை அதிகரித்தது. அடுத்த வாரம் முழுமையாக விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அத்திவரதர் தரிசனத்தில் புதிய கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் விதித்து உள்ளது.

    அதன்படி அத்தி வரதர் தரிசன நிறைவு நாளான 17-ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அத்திவரதர் தரிசனம் 16-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்று வரும் பக்தர்கள் 16-ந்தேதி இரவு முழுவதும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17-ந்தேதி அத்திவரதர் சிலைக்கு ஆகம விதிப்படி சடங்குகள் நடைபெற உள்ளது. எனவே 17-ந்தேதி அன்று அத்திவரதர் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.

    பூஜைகள் முடிந்த பின்பு 17-ந்தேதி இரவு அத்திவரதர் சிலை அனந்தசரஸ் திருக்குளத்தில் வைக்கப்படும்.

    கடந்த 38 நாட்களில் இதுவரை 70.25 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். சராசரியாக தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று இரவு தரிசன நேரம் முடிந்தும் 1½ லட்சம் பக்தர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் 2-வது நாளாக தவித்தபடி தரிசனத்துக்காக வரிசையில் காத்துநின்று வழிபட்டு சென்றனர்.

    அத்திவரதர் இன்று மஞ்சள் நிற வண்ண பட்டாடை மற்றும் இரு கைகள் மற்றும் தோள்களிலும் பச்சை கிளிகளை வைத்தபடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பெருமாளின் இந்த அபூர்வமான கோலத்தினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருக்கிறார்கள். பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் மாடவீதிகள் முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

    ரங்கசாமி குளத்தில் இருந்து திருக்கச்சி நம்பி தெரு வழியாக பக்தர்களை நிறுத்தி தரிசனத்துக்கு போலீசார் அனுப்பி வருகிறார்கள்.

    தற்போது வி.ஐ.பி. வரிசைகளில் கடும் கூட்டம் அலைமோதுகிறது. வரும் நாட்களில் கூடுதல் நெரிசல் ஏற்படும் என்பதால் அந்த பாதை இன்று மாற்றி அமைக்கப்பட்டது.

    வழக்கமாக வி.வி.ஐ.பி- வி.ஐ.பி.க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு செல்வது வழக்கம். அதே பாதையில் பொது தரிசன பக்தர்கள் திரும்பி வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதனை தடுக்க தற்போது வி.ஐ.பி. தரிசனம் செல்லும் பாதையில் கம்பு, பலகைகள் மூலம் தற்காலிக பாலம் போன்று கட்டப்பட்டு உள்ளது.

    இந்த பாலம் வழியாக செல்லும் வி.வி.ஐ.பி.க்கள் அதே வழியாக திரும்பி வர வேண்டும். வி.ஐ.பி.க்கள் அதே வழியாக சென்று பொது தரிசன பாதையில் வரும் பக்தர்களுடன் சேர்ந்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனால் தரிசனம் முடிந்து வெளியே வரும் பொது தரிசன பாதையில் கூடுதல் இடம் கிடைப்பதால் பக்தர்கள் நெரிசல் இன்றி வரமுடியும்.

    இந்த பணி நடப்பதை அடுத்து இன்று காலை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தரிசனத்துக்கு வந்த அவர்கள் கோவிலில் காத்து நின்றனர்.

    இதேபோல் பொது தரிசனத்துக்கும் அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தாமதமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வி.ஐ.பி.க்கள் அனைவரும் பாலம் அமைக்கும் பணி முடிந்ததும் இன்று மதியத்துக்கு பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    அத்திவரதரை தரிசிக்க முக்கிய பிரமுகர்கள் நேற்று வரிசையில் காத்திருந்த போது மின்சாரம் தாக்கியதில் 30-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

    இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் அத்திவரதர் விழாவையொட்டி பாதுகாப்பு பணிக்கு வந்த கோவை சப்-இன்ஸ்பெக்டர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தார்.

    காஞ்சீபுரம், ஆக. 8-

    அத்திவரதர் விழாவை யொட்டி காஞ்சீபுரத்தில் சுமார் 12 ஆயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீசார் இதில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் வெள் ளிங்கிரி (வயது50) பாதுகாப்பு பணிக்காக காஞ்சீபுரம் வந்து இருந்தார். அவர் பணி முடிந்து வாலாஜாபாத்தில் தங்கி இருந்தார்.

    திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வெள்ளிங்கிரி இறந் தார்.

    பாதுகாப்பு பணிக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வெள்ளிங் கிரியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன வழியில் இன்று ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலர் காயம் அடைந்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் வைபவம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முடியவுள்ளது. இதனையடுத்து நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, கட்டுக்கடங்காத கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அத்தி வரதரை இனி தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம் எனவும், தங்கி இருக்கும் அளவுக்கு தயாராக பக்தர்கள் வர வேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.

    அத்தி வரதரை காண வந்த மக்கள்

    இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்கும் விஐபி தரிசன வழியில் இன்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இப்போது சரி செய்யப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

    அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் இறந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வரிசையிலும் தரிசன முறையிலும் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த மேலும் 2 பேர் இறந்த சம்பவம் பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    பொள்ளாச்சியை சேர்ந்த முதியவர் லட்சுமணன் (70) இன்று காலை அத்திவரதரை தரிசிக்க குடும்பத்துடன் பக்தர்களோடு நடந்து வந்தார். வாகன மண்டபம் அருகே வந்தபோது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.

    நீலகிரியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது65). இவர் குடும்பத்துடன் அத்தி வரதரை வழிபட நேற்று காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டு வந்தார். அவர்கள் ஒலிமுகமது பேட்டையில் உள்ள தற்காலிக பஸ் நிறுத்தத்துக்கு பஸ்சில் வந்து இறங்கினார். அப்போது ரத்தினத்துக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். மாரடைப்பால் ரத்தினம் இறந்திருப்பது தெரியவந்தது.

    அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் வரையில் தங்கி இருக்கும் வகையில் தயாராக வரவேண்டும் என்றும் பக்தர்களுக்கு கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி தொடங்கியது.

    சயன கோலத்தில் 31 நாட்கள் காட்சி தந்த அத்தி வரதரை தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் ஒவ்வொரு நாளும் கூட்டம் அலைமோதியது. 31 நாட்களில் 50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கடந்த 1-ந்தேதியில் இருந்து நின்ற கோலத்தில் அத்திவரதர், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அத்திவரதர் தரிசனத்துக்கு கூட்டம் அலைமோதி வருகிறது.

    கடந்த 6 நாட்களாகவே கட்டுக்கடங்காத கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரமே திணறியது. செவ்வாய்க் கிழமையான நேற்று அத்தி வரதரை 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    அத்திவரதர் தரிசனத்தின் 38-வது நாளான இன்றும் காஞ்சிபுரத்தில் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மஞ்சள் மற்றும் மெஜந்தா வண்ண பட்டுடையில் காட்சி தந்த அத்திவரதரை தரிசனம் செய்ய அதிகாலையிலேயே லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

    கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களை அணி அணியாக பிரித்து போலீசார் கோவிலுக்குள் அனுப்பி வைத்தனர். இருப்பினும் கோவிலுக்குள்ளேயும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. முண்டியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள் கோவிந்தா கோ‌ஷம் முழங்க அத்திவரதரை பயபக்தியுடன் தரிசித்தனர்.

    இன்று காலையில் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டதால் 10 மணி நேரம் வரை காத்திருந்த பின்னரே பக்தர்களால் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரம் வரையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இளைஞர்கள், இளம் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் என வயது வித்தியாசம் இல்லாமல் அத்திவரதரை காண மக்கள் குவிந்து இருந்தனர். இன்று 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கலெக்டர் பொன்னையா

    அத்திவரதர் தரிசனத்துக்கு வருகிற 17-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைகிறது.

    இதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்த முறை அத்தி வரதர் தரிசன வாய்ப்பை தவறவிட்டால் அடுத்து 40 ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும் என்பதால் கடைசி கட்டத்தில் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடிக்கிறார்கள். இதன் காரணமாகவே கூட்டம் அலை மோதியது.

    வருகிற 10-ந்தேதி (சனிக்கிழமை)யில் இருந்து அத்தி வரதர் தரிசனத்தின் கடைசி நாளான 17-ந்தேதிக்குள் தொடர் விடுமுறையும் வருகிறது. வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதால் அன்று அரசு விடுமுறையாகும்.

    முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை. இதனால் வருகிற சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களும் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பிறகு ஆகஸ்டு 15-ந்தேதி சுதந்திர தின விடுமுறை. மறுநாள் (16-ந் தேதி) காஞ்சீபுரத்துக்கு உள்ளூர் விடுமுறை. 17-ந் தேதி அத்திவரதர் தரிசனத்துக்கு கடைசி நாள். இதனால் இந்த 3 நாட்களும் காஞ்சிபுரத்தை நோக்கி மக்கள் கட்டுக் கடங்காத வகையில் படையெடுப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    வி.ஐ.பி. தரிசனத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பாஸ் இல்லாத யாரையும், போலீசார் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தனியாக அழைத்துச் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் தரிசனத்துக்காக வரும் வாகனங்கள் நீண்ட தூரத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டு விடுகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள வாலாஜாபாத், கீழம்பி பைபாஸ் 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் தூசி, பொன்னேரி கரை ஆகிய இடங்கள் வரை மட்டுமே வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு இறங்கி வேறு வாகனங்களில்தான் செல்ல வேண்டும்.

    இந்த வாகனங்களும், காஞ்சிபுரம் பெரியார் நகர், ரங்கசாமி குளம் ஆகிய 2 இடங்கள் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இங்கிருந்து அத்திவரதரை தரிசிக்க சுமார் 3 கி.மீ. தூரம் சாதாரண பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வி.ஐ.பி. கார் பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே தங்களது வாகனத்தில் கோவில் வரை செல்ல முடிகிறது.

    நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர். ரங்கசாமி குளம் முதல் திருக்கோவில் வரை முதியவர்கள் செல்ல இலவச ஆட்டோக்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஏற்பாடுகளும் செய்யப்பட வில்லை. முக்கிய பிரமுகர்கள், பாஸ் வைத்திருப்பவர்கள் பல்வேறு தெருக்கள் மூலம் கார்களில் சென்று எளிதாக கோவில் அருகில் சென்று விடும் நிலையில் சாதாரண பக்தர்களே அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மேல் மாவட்ட நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அத்திவரதர் தரிசனத்துக்காக இதுநாள் வரையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று முதல் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று அளித்த பேட்டியில் இரவு 11 மணி வரையில் இருக்கும் தரிசனம். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரையிலும் நீட்டிக்கப்படும் என்றார்.

    இனி வரும் நாட்களில் தரிசனத்துக்கு வருபவர்கள் 2 நாட்கள் வரையில் தங்கி இருக்கும் வகையில் தயாராக வரவேண்டும் என்றும் பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அத்திவரதர் தரிசனத்துக்கு குறுகிய நாட்களே இருப்பதால் அடுத்த 10 நாட்களும் பக்தர்கள் அலை அலையாய் காஞ்சிபுரம் நோக்கி திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற் கொண்டுள்ளது.

    அத்திவரதர் தரிசனம் 17-ந் தேதி மதியம் 12 மணிக்கு நிறைவடையும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அருள்பாலித்த அத்திவரதர் தற்போது நின்றகோலத்தில் காட்சி தருகிறார். நேற்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீல நிற பட்டாடையில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முதியோர், மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு வசதியாக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பல்வேறு அமைப்பினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, சென்னை- கிழக்கு கடற்கரை சாலை போன்றவற்றில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் காஞ்சீபுரம் நோக்கி வந்தவண்ணம் இருந்தனர்.

    காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 16-ந் தேதி காஞ்சீபுரம் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரையின் பேரில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் நள்ளிரவு 2 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தின நாளாகும். விடுமுறை தினமான அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி அன்றையதினம் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    தற்போது 7 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக வரும் நாட்களில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வருகிற 16 மற்றும் 17-ந் தேதிகளில் டோனர் பாஸ் மூலம் முக்கிய நபர்கள் தரிசப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    சென்னை விமான நிலைய ஓடு பாதையில் புறப்பட தயாராக இருந்த சிங்கப்பூர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை கண்டுபிடித்ததால் 133 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று இரவு 9.55 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    அதில் 133 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

    இதையடுத்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தார். விமானத்தை மேலே கொண்டு செல்ல இயலாது. திரும்ப கொண்டுவர அனுமதிக்கும்படி கேட்டார். அதன்படி விமானத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இழுவை வாகனம் மூலம் அந்த விமானம் ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தொழில்நுட்ப கோளாறை வல்லுனர்கள் சரி செய்தனர். 2 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு அந்த விமானம் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
    அத்திவரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந்த 31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1-ந் தேதியில் இருந்து நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதரை வழிபட தமிழகம் மட்டும் இல்லாமல், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    விழா தொடங்கிய முதல் வாரத்தில் சுமார் 1½லட்சம் பேர் தினந்தோறும் அத்திவரதரை வழிபட்டு சென்றனர். தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தினந்தோறும் சராசரியாக 2½ லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.

    நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர். இதனால் காஞ்சிபுரம் நகர வீதிகள் முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.

    நகர பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மறுநாள் வந்து சாமி தரிசனம் செய்யுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததை காண முடிந்தது.

    விழாவின் 37-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீலநிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று காலையில் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

    இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு அர்பன் வங்கி வரை நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    நேற்று இரவு காஞ்சிபுரத்தில் கடும் மழை பெய்ததையடுத்து இன்று காலை வெப்பம் தணிந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் களைப்பின்றி நின்றனர்.

    போலீசார் நீண்ட கயிறு கட்டி பக்தர்களை பிரித்து ஒழுங்கு படுத்தி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கு கோபுர வாசலில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பொது மக்களிடம் கடும் கெடுபிடிகாட்டினர். ஆனால் அவர்கள் சிலரை எந்தவித ‘பாஸ்’ம் இல்லாமல் தரிசனத்துக்கு உள்ளே அனுமதித்தனர். இதனால் பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவில் மாடவீதிகள், திருக்கச்சி நம்பி தெரு, செட்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெரு, அழுதப்படித் தெரு, அஸ்தகிரி தெரு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    பொது தரிசனத்தில் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர். இதேபோல் வி.ஐ.பி. வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையே சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோவிலில் திரண்டு உள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது.

    அத்திவரதர் விழா வருகிற 17-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசையைச் சேர்ந்த சிற்பி டி.கே.பாணி, சந்தன மரத்தில் 5 அங்குல உயரத்தில் காஞ்சி அத்திவரதரை உருவாக்கி உள்ளார்.

    இந்த சந்தன மரச்சிலையானது 5 அங்குல உயரம், 4 அங்குல அகலம், 2 அங்குல குறுக்களவுடன் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அத்திவரதர் சிலையை 25 நாள்களில் தயார் செய்துள்ளார். தற்போது இந்த சந்தன மரச்சிலை பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
    ×