search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர்- அத்தி வரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்
    X
    பக்தர்களுக்கு அருள் பாலித்த அத்திவரதர்- அத்தி வரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்

    அத்திவரதரை வழிபட இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம்

    அத்திவரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

    கடந்த 31-ந்தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1-ந் தேதியில் இருந்து நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

    அத்திவரதரை வழிபட தமிழகம் மட்டும் இல்லாமல், வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    விழா தொடங்கிய முதல் வாரத்தில் சுமார் 1½லட்சம் பேர் தினந்தோறும் அத்திவரதரை வழிபட்டு சென்றனர். தற்போது பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தினந்தோறும் சராசரியாக 2½ லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.

    நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர். இதனால் காஞ்சிபுரம் நகர வீதிகள் முழுவதும் மனித தலைகளாக காணப்பட்டன.

    நகர பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மறுநாள் வந்து சாமி தரிசனம் செய்யுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததை காண முடிந்தது.

    விழாவின் 37-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை மற்றும் நீலநிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று காலையில் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் பல இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.

    இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மேற்கு கோபுர வாசலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு அர்பன் வங்கி வரை நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

    நேற்று இரவு காஞ்சிபுரத்தில் கடும் மழை பெய்ததையடுத்து இன்று காலை வெப்பம் தணிந்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் களைப்பின்றி நின்றனர்.

    போலீசார் நீண்ட கயிறு கட்டி பக்தர்களை பிரித்து ஒழுங்கு படுத்தி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேற்கு கோபுர வாசலில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பொது மக்களிடம் கடும் கெடுபிடிகாட்டினர். ஆனால் அவர்கள் சிலரை எந்தவித ‘பாஸ்’ம் இல்லாமல் தரிசனத்துக்கு உள்ளே அனுமதித்தனர். இதனால் பக்தர்களுக்கும், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கோவில் மாடவீதிகள், திருக்கச்சி நம்பி தெரு, செட்டித்தெரு, சுண்ணாம்புக்கார தெரு, அழுதப்படித் தெரு, அஸ்தகிரி தெரு ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    பொது தரிசனத்தில் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டனர். இதேபோல் வி.ஐ.பி. வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையே சுமார் 2 லட்சம் பக்தர்கள் கோவிலில் திரண்டு உள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்தபடி உள்ளது.

    அத்திவரதர் விழா வருகிற 17-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவள்ளூர் அருகே உள்ள திருமழிசையைச் சேர்ந்த சிற்பி டி.கே.பாணி, சந்தன மரத்தில் 5 அங்குல உயரத்தில் காஞ்சி அத்திவரதரை உருவாக்கி உள்ளார்.

    இந்த சந்தன மரச்சிலையானது 5 அங்குல உயரம், 4 அங்குல அகலம், 2 அங்குல குறுக்களவுடன் மிகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த அத்திவரதர் சிலையை 25 நாள்களில் தயார் செய்துள்ளார். தற்போது இந்த சந்தன மரச்சிலை பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.
    Next Story
    ×