என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கிய பா.ஜனதா தலைவர் உள்பட 1,330 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி சமூக ஊடகத்தில் வெளியிட்டவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியினர் வேல் பூஜை அறிவித்தனர். அதைத்தொடர்ந்து முருக பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் வேல் யாத்திரை நடைபெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் தடையை மீறி கடந்த 6-ந் தேதி திருத்தணியில் வேல் யாத்திரையை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கினார். தடையை மீறியதால் அவர் கைது செய்யப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களிலும் வேல் யாத்திரை தொடங்குவதும், கைது செய்வதும் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சேலத்தில் வேல் யாத்திரை நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று ஈரோட்டில் வேல் யாத்திரை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஈரோடு வந்த மாநில பா.ஜனதா தலைவர் முருகன் நேற்று காலை சென்னிமலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஈரோடு வந்த அவர் சத்தி ரோடு முத்துசாமி வீதி பகுதியில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ என்ற கையடக்க பதிப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து வேல் யாத்திரை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். திறந்த காரில் காவி உடை உடுத்தி, கையில் வேல் ஏந்தி மாநில தலைவர் எல்.முருகன் சம்பத்நகர் வந்தார். அவருக்கு ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் வேல் யாத்திரையை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    சூரசம்ஹாரம் நிகழ்ந்த இந்த நாளில், கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட சென்னிமலையை உள்ளடக்கிய ஈரோட்டில் வேல் யாத்திரையை தொடங்குகிறோம். முருகன் நம் வாழ்வின் ஒளி. நமது முருகக்கடவுளை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடமாட்டோம். அறுபடை வீடுகளுக்கும் வீரபாகுவின் படையுடன் வேல் யாத்திரை செல்கிறோம். படை வீடுகள் மட்டுமின்றி, சென்னிமலை, மருதமலை, ரத்னகிரி உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களுக்கும் செல்கிறோம். கந்தசஷ்டியை முன்னிட்டு முருக பக்தர்களாகிய நாம் விரதம் இருந்து வருகிறோம். தமிழ்க்கடவுள் முருகனை போற்றுவது மட்டும் இல்லை. கந்தசஷ்டி கவசத்தையும், முருகபெருமானையும் கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டத்துக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    கொரோனா காலத்தில் பா.ஜனதா தொண்டர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து 1 கோடி பேருக்கு உணவு அளித்தார்கள். 50 லட்சம் பேருக்கு மோடி கிட் கொடுத்தார்கள். பெண்கள் முகக்கவசங்கள் தைத்து கொடுத்தார்கள். எனவே கொரோனா காலத்தில் தன்னலம் கருதாமல் உழைத்த பா.ஜனதா தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் யாத்திரையாக இந்த வேல் யாத்திரை உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் அமரச்செய்யும் வரை ஓய்வு இல்லை.

    இவ்வாறு பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேசினார்.

    முன்னதாக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அண்ணாமலை பேசும்போது, ‘சென்னிமலை முருகன் கோவிலில் தமிழக அரசியல் சீரழிவில் இருந்து மாற்றம் வேண்டும் என்ற வேண்டுதலை வைத்து இந்த வேல் யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். இந்த யாத்திரை இன்று தொடங்குகிறது. ஆனால், உண்மையான முடிவு என்பது 2021-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தலில் தான். இன்று உங்களுக்கு இருக்கும் எழுச்சி, உத்வேகத்துடன் தாமரை சின்னத்தில் வாக்களித்து வேல் யாத்திரையை முடிக்க வேண்டும்’ என்றார்.

    நிகழ்ச்சியில் மாநில தலைவர் எல்.முருகனுக்கு ஆளுயர மாலை மற்றும் மலர் கிரீடம் அணிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு பரிசாக வேல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வேல் யாத்திரை தொடங்க மாநில தலைவர் எல்.முருகன் வேல்களுடன் புறப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். அவர்கள் தொடர்ந்து செல்வதாக தெரிவித்ததால், அனைவரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள்.

    இதையடுத்து 425 பெண்கள் உள்பட 1,330 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் தங்க வைக்கப்பட்டனர்.

    யாத்திரையை முன்னிட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்.கார்த்திக்குமார், கனகேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, சண்முகம், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், பன்னீர்செல்வன், நாகலட்சுமி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சம்பத் நகர் பகுதிக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. நிகழ்வையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய இடங்களில் பா.ஜனதா கொடி கட்டப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் நடத்தப்படும் இந்த வேல் யாத்திரை டிசம்பர் 7-ந் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது.
    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ஈரோடு சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசி முன்னிலை வகித்தார்.
    ஈரோடு:

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், ஈரோடு சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சசி முன்னிலை வகித்தார்.

    மின்வாரியத்தில் கேங் மேன் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு எழுதி, தயார் நிலையில் உள்ள, 10 ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். கொரோனா பரவல் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 900 கள உதவியாளர்கள், 575 உதவி பொறியாளர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 1,300 கணக்கீட்டாளர்கள் காலி பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவை தொடங்க வேண்டும். மின்வாரியத்தை தனியார் மயமாக்கக்கூடாது. அரசு பணிகளில் பணி நியமன தடை சட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 46). இவரது மனைவி சித்ரா(35).

    இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்காக சித்ரா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பெரிய புளியம்பட்டியில் உள்ள தனது தாய் மல்லிகா வீட்டிற்கு சென்றார். ஆனால் பாலசுப்பிரமணி செல்லவில்லை.

    கடந்த 15-ந் தேதி பாலசுப்பிரமணி மாமியார் வீட்டுக்கு சென்று சித்ராவை அழைத்து கொண்டு தாண்டாம்பாளையத்திற்கு வந்து விட்டார். பின்னர் சித்ரா தாய் மல்லிகாவுக்கு போன் செய்து இரவு முழுவதும் கணவர் தன்னிடம் சண்டை போட்டதாக கூறி போனை வைத்துவிட்டார்.

    பின்னர் 16-ந் தேதி மாலை மல்லிகா மகள் சித்ராவுக்கு போன் செய்தார். அப்போது போனை பாலசுப்பிரமணி எடுத்து சித்ரா கோவிலுக்கு சென்றுள்ளார் என்று கூறி போனை வைத்துவிட்டார்.

    பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மல்லிகா மகளுக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்-ஆப் என வந்தது. பல முறை போன் செய்தும் சித்ரா போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த மல்லிகா நேற்று இரவு உறவினர்களுடன் தாண்டாம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினால் பதில் இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சித்ரா அங்குள்ள அறையில் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சித்ரா எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை.

    சித்ராவின் கணவர் பாலசுப்பிரமணி தலைமறைவாகி விட்டார். சித்ரா இறந்து 5 நாட்களாகி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் சித்ரா தாய் மல்லிகா தனது மகள் சாவில் மருமகன் பாலசுப்பிரமணி மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் பணத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் கண்ணதாசன் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி ஜீவா (வயது 49). இவர் ஈரோட்டில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்து, சுப்பிரமணியம் என்பவருடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுத்ததில் சிலர் பணத்தை திருப்பி கொடுக்காததால் ஜீவாவுக்கும், சுப்பிரமணியத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜீவா நேற்று முன்தினம் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 95.74 அடியாக உள்ளது.
    பவானிசாகர்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாக உள்ளது. இதன் நீர்பிடிப்பு உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களுக்கும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கும் செல்கிறது. பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

    இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.74 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து 3,822 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 1,600 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 25.5 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.
    ஈரோட்டில் மின்சாரம் தாக்கி வடமாநில சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் முஜாபூர் மாவட்டம் ஸ்ரீகாந்சிம்ரா பர்காயூன் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரசைனி. இவருடைய மகன் அஜய்குமார் (வயது 15). இவன் ஈரோடு கிருஷ்ணா டாக்சிரோடு பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை செய்து வந்தான். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பிறகு கடையை அடைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எடை போடும் கருவியின் சுவிட்ச் தொகுப்பை சிறுவன் அஜய்குமார் எதிர்பாராமல் தொட்டான். இதில் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கேயே அஜய்குமார் மயங்கி விழுந்தான். 

    இதைத்தொடர்ந்து சக ஊழியர்கள் அவனை மீட்டு ஆட்டோ மூலமாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜய்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடி அருகே பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத சாணியடி திருவிழா நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ள கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்துள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் தீபாவளி பண்டிகையை அடுத்து வரும் 3-வது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான சாணியடி திருவிழா நேற்று காலையில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு கோவிலின் பின்புறம் குவித்துவைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சாமியை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு பக்தர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆண் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கோவிலின் பின்புறம் குவித்துவைக்கப்பட்டு இருந்த சாணத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் சாணத்தை உருண்டையாக பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். பாரம்பரியமிக்க இந்த வினோத நிகழ்ச்சியை பெண் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து கைதட்டி உற்சாகப்படுத்தினர். அதன் பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் வீசிய சாணத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் எடுத்து சென்று தங்கள் விளைநிலங்களில் இட்டனர். இதனால் விவசாய நிலத்தில் பயிர்கள் நன்றாக வளரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணங்கள் கிடக்கும் குப்பை மேட்டில் எறிந்துவிட்டார். எங்கள் ஊரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பை மேட்டின் மீது ஏறிச்சென்றபோது ஒரு இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டதும் பொதுமக்கள் அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது. அப்போது ஒரு சிறுவனின் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்து 3-வது நாள் சாணத்தில் இருந்து மீண்டு எழுந்ததின் நினைவாக சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறிவிட்டு மறைந்துவிட்டார். அன்றில் இருந்து இந்த விழாவை நடத்தி வருகிறார்கள்’ என்றனர்.

    இந்த திருவிழாவில் ஆண்டுதோறும் தமிழக பக்தர்களுடன் இணைந்து கர்நாடக பக்தர்களும் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தமிழக பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு மாவட்டத்தில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கான மாடுகள் தோல் அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி பெறும் பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், விவசாயிகள் பலர் கால்நடைகள் வளர்ப்பையும் முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோமாரி நோய் தாக்கம் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நோய் பாதிக்கப்பட்ட கால்நடையின் வாயில் புண் ஏற்பட்டது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தீவனத்தை உண்ண முடியாமல் மரணத்தை தழுவியது. இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதற்காக கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் 2 தடவை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கோமாரி நோய் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் கால்நடைகளுக்கு புதிதாக ஒரு வைரஸ் தொற்று பரவி வருவது விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. தோல் அம்மை நோய் எனப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மற்ற கால்நடைகளை காட்டிலும் மாடுகளை மட்டும் வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கிறது.

    இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளின் உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்படுகிறது. அதன்பிறகு பெரிய புண்ணாக மாறி மாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஈ, கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக மாறி உள்ளது. எனவே இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட உழவர் விவாதக்குழு பொறுப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாடுகளின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு பெரிய புண்ணாக மாறி வருகிறது. அந்த புண் மீது ஈ, கொசு மொய்க்கிறது. இதனால் மாடுகளுக்கு பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. தீவனத்தை சரியாக தின்பதில்லை. மேலும், புண்ணில் இருந்தும் ரத்த கசிவு ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ செலவு அதிகமாகிறது. ஒரு முறை சிகிச்சை அளிக்க ரூ.300 முதல் ரூ.500 வரை செலவாகிறது.

    கிராமத்துக்கு சுமார் 30 மாடுகள் வீதம் இந்த தோல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் தாக்கம் வேகமாக பரவுவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. எனவே இதுதொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும். இதற்காக சிறப்பு கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்து கிராமங்கள் தோறும் முகாமிட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நோய் தாக்குதலை தடுக்க ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரிசில்லா கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு “லம்பிங் ஸ்கின் டிசீஸ்” என்ற புதிய வகையான வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தோல் அம்மை நோய் இதுவரை நமது நாட்டில் பரவியது கிடையாது. வெளிநாட்டில் இருந்து பரவி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நமது மாநிலத்திலும் பரவி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் கிடையாது. இதனால் இதை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.

    வைரஸ் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு காய்ச்சல் தொந்தரவு ஏற்படுகிறது. பிறகு சிறிய கொப்புளங்கள் உருவாகி பெரிய புண்ணாக மாறிவிடுகிறது. அந்த புண்ணில் மொய்க்கும் ஈ, கொசு, உன்னி மூலமாக வேறு மாடுகளுக்கும் எளிதாக வைரஸ் பரவி விடுகிறது. எனவே கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த மாட்டை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.

    தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நாட்டு வைத்தியம், மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புண் ஏற்பட்டவுடன் மருந்து போட வேண்டும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய அளவு பாதிப்பு எதுவும் வராது. ஓரிரு வாரங்களுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கிராமங்களுக்கு நேரடியாக சென்று நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பார்வையிட்டோம். கால்நடை டாக்டர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சினை மாடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிறக்கும் கன்றுக்குட்டிகள் சற்று பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே புகை போடுதல் போன்ற வழக்கமான நடவடிக்கையை கடைபிடித்து ஈ, கொசு மொய்ப்பதை தவிர்க்க வேண்டும். மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் கால்நடை டாக்டர்களை விவசாயிகள் அணுகலாம்.

    இவ்வாறு மாவட்ட கால்நடை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரிசில்லா கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    கொரோனா நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை வெளியான பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 662 ஆக உயர்ந்தது.

    நேற்று ஒரே நாளில் 108 பேர் குணமடைந்தார்கள். மொத்தம் 10 ஆயிரத்து 946 பேர் கொரோனாவில் முழுமையாக மீண்டு உள்ளனர். 580 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 136 பேர் பலியாகி உள்ளனர்.

    தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்கள். மேலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்து கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே நிலவுகிறது.

    இதற்கிடையே கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருவதால் கொரோனா சிறப்பு மையங்களை மூடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

    கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதால் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தீபாவளி பண்டிகை கூட்டம், வெளியூர் சென்று வந்தவர்கள் போன்ற காரணங்களால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்று ஒரு வாரத்துக்குள் தெரியவரும். அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை உயரவில்லை என்றால் சிறப்பு சிகிச்சை மையங்கள் மூடப்படும். அதற்கு பதிலாக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களை சிகிச்சை மையங்களாக பயன்படுத்த ஆலோசனை நடத்தப்படும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
    அந்தியூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் முனியப்பன் கோவில் பகுதியில் வெள்ளித்திருப்பூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் சேவல் வைத்து சூதாடி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் வெள்ளித்திருப்பூர் குரும்பபாளையத்தை சேர்ந்த மணி (வயது 50), ராமசாமி (52), குருசாமி (40) உள்பட 6 பேர் என்பதும், அவர்கள் சேவல்களை வைத்து சூதாடியதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 2 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
    பவானி அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பவானி:

    பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் ரவி (வயது 31). வியாபாரி. கடந்த 6 மாதத்துக்கு முன்பு குருப்பநாயக்கன்பாளையத்தில் இருந்து பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்துக்கு குடி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பண வசூலுக்கு மோட்டார்சைக்கிளில் ரவி சென்றார். பவானியை அடுத்த காமதேனு நகருக்கு செல்லும்போது அங்கு ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளின் மீது ரவியின் மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து ரவி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    மகுடஞ்சாவடிக்கும், மாவிலிபாளையத்துக்கும் இடைபட்ட ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா மாவிலிபாளையம் வளையசெட்டிபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகன் பவித்ரன் (வயது 26) என்பதும், அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து பவித்ரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×