என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாட்டை படத்தில் காணலாம். (உள்படம்:- மாட்டின் காலில் புண் ஏற்பட்டு உள்ளது)
    X
    தோல் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட மாட்டை படத்தில் காணலாம். (உள்படம்:- மாட்டின் காலில் புண் ஏற்பட்டு உள்ளது)

    ஈரோடு மாவட்டத்தில் பரவும் புதிய வைரஸ் : ஆயிரக்கணக்கான மாடுகளை பாதித்த தோல் அம்மை நோய்

    ஈரோடு மாவட்டத்தில் பரவி வரும் புதிய வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கான மாடுகள் தோல் அம்மை நோய்க்கு பாதிக்கப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டது. கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி பெறும் பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், விவசாயிகள் பலர் கால்நடைகள் வளர்ப்பையும் முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோமாரி நோய் தாக்கம் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நோய் பாதிக்கப்பட்ட கால்நடையின் வாயில் புண் ஏற்பட்டது. நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தீவனத்தை உண்ண முடியாமல் மரணத்தை தழுவியது. இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதற்காக கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும், ஆண்டுதோறும் 2 தடவை கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் விளைவாக கோமாரி நோய் தாக்கம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்தநிலையில் கால்நடைகளுக்கு புதிதாக ஒரு வைரஸ் தொற்று பரவி வருவது விவசாயிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்த வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. தோல் அம்மை நோய் எனப்படும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கான மாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மற்ற கால்நடைகளை காட்டிலும் மாடுகளை மட்டும் வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கிறது.

    இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளின் உடலில் சிறிய கொப்புளங்கள் ஏற்படுகிறது. அதன்பிறகு பெரிய புண்ணாக மாறி மாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக பால் உற்பத்தியும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஈ, கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக மாறி உள்ளது. எனவே இந்த வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து மாவட்ட உழவர் விவாதக்குழு பொறுப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாடுகளின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு பெரிய புண்ணாக மாறி வருகிறது. அந்த புண் மீது ஈ, கொசு மொய்க்கிறது. இதனால் மாடுகளுக்கு பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. தீவனத்தை சரியாக தின்பதில்லை. மேலும், புண்ணில் இருந்தும் ரத்த கசிவு ஏற்படுகிறது. இதற்கு சிகிச்சை அளிக்க மருத்துவ செலவு அதிகமாகிறது. ஒரு முறை சிகிச்சை அளிக்க ரூ.300 முதல் ரூ.500 வரை செலவாகிறது.

    கிராமத்துக்கு சுமார் 30 மாடுகள் வீதம் இந்த தோல் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் தாக்கம் வேகமாக பரவுவதால் பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக உள்ளது. எனவே இதுதொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும். இதற்காக சிறப்பு கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்து கிராமங்கள் தோறும் முகாமிட்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நோய் தாக்குதலை தடுக்க ஈரோடு மாவட்ட கால்நடைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட கால்நடைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரிசில்லா கூறியதாவது:-

    கால்நடைகளுக்கு “லம்பிங் ஸ்கின் டிசீஸ்” என்ற புதிய வகையான வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தோல் அம்மை நோய் இதுவரை நமது நாட்டில் பரவியது கிடையாது. வெளிநாட்டில் இருந்து பரவி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த நோய் தொற்று ஏற்படாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 2 மாதங்களாக நமது மாநிலத்திலும் பரவி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் பரவலாக காணப்படுகிறது. இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் கிடையாது. இதனால் இதை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது.

    வைரஸ் பாதிக்கப்பட்ட மாட்டுக்கு காய்ச்சல் தொந்தரவு ஏற்படுகிறது. பிறகு சிறிய கொப்புளங்கள் உருவாகி பெரிய புண்ணாக மாறிவிடுகிறது. அந்த புண்ணில் மொய்க்கும் ஈ, கொசு, உன்னி மூலமாக வேறு மாடுகளுக்கும் எளிதாக வைரஸ் பரவி விடுகிறது. எனவே கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. வைரஸ் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த மாட்டை தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.

    தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நாட்டு வைத்தியம், மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புண் ஏற்பட்டவுடன் மருந்து போட வேண்டும். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய அளவு பாதிப்பு எதுவும் வராது. ஓரிரு வாரங்களுக்குள் கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக கிராமங்களுக்கு நேரடியாக சென்று நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பார்வையிட்டோம். கால்நடை டாக்டர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சினை மாடுகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிறக்கும் கன்றுக்குட்டிகள் சற்று பலவீனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே புகை போடுதல் போன்ற வழக்கமான நடவடிக்கையை கடைபிடித்து ஈ, கொசு மொய்ப்பதை தவிர்க்க வேண்டும். மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் கால்நடை டாக்டர்களை விவசாயிகள் அணுகலாம்.

    இவ்வாறு மாவட்ட கால்நடை இணை இயக்குனர் (பொறுப்பு) பிரிசில்லா கூறினார்.
    Next Story
    ×