என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த கலெக்டர் சி.கதிரவன், கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார்.
    அந்தியூர்:

    அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று ெபாதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    அப்போது டாக்டரிடம் கலெக்டர், பொதுமக்கள் எவ்வாறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்? தேவையான அளவு மருந்துகள் கிடைக்கிறதா? என்பது பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் கலெக்டர் கதிரவன் அந்தியூர் பேரூராட்சி பகுதி மற்றும் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட புது மேட்டூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி ஆய்வு செய்தார். அப்பொது அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் அவர் அந்தியூர் பகுதியில் கொரோனா இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி, சின்னத்தம்பிபாளையம் சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சரவணன், சின்னதம்பிபாளையம் ஊராட்சி செயலர் தேவராஜ், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உமாசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    மேலும் அந்தியூர் பேரூராட்சி பகுதி தவுட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார். அப்போது அந்த நிறுவனங்கள் பணியாளர்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பணிபுரிந்ததை பார்த்தார்.

    இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு விதிமுறையை மீறியதாக ஆயத்த ஆடை நிறுவனத்துக்கு கலெக்டர் சீல் வைக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி முன்னிலையில் ஆயத்த ஆடை நிறுவனத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

    அப்போது அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், அந்தியூர் பேரூராட்சி செயல் அதிகாரி ஹரி ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    கே.என்.பாளையம் அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதை வனத்துறையினர் பார்த்தனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வனச்சரகத்தில் நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது கே.என்.பாளையம் அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் நாட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதை பார்த்தனர். உடனே வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கே.என்.பாளையம் டேம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 34), நரசாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
    மலைக்கிராம மக்கள் ஆசனூர் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மூங்கில் மரங்களில் இருந்து கீழே விழும் அரிசியை சேகரிக்கின்றனர்.
    தாளவாடி:

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    தாளவாடி அருகே உள்ளது ஆசனூர் மலைக்கிராமம். இங்குள்ள மலைக்கிராம மக்கள் வனப்பகுதிக்கு சென்று பொருள் சேகரிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் மலைக்கிராம மக்கள் ஆசனூர் வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மூங்கில் மரங்களில் இருந்து கீழே விழும் அரிசியை சேகரிக்கின்றனர்.

    இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘மூங்கில் மரங்களில் இருந்து நிலத்தில் விழும் அரிசி மண்ணோடு கலந்துவிடுகிறது. இதனால் நாங்கள் முறத்தில் அரிசி வேறு, மண்வேறாக பிரித்தெடுக்கிறோம். நாளொன்றுக்கு 3 கிலோ வரை மூங்கில் அரிசி கிடைக்கிறது.

    இது ஒரு கிலோ ரூ.150 வரை விற்கிறோம். இதனால் எங்களுக்கு ஓரளவு கூலி கிடைக்கிறது. இயற்கையாக விளையும் நார்ச்சத்துள்ள மூங்கில் அரிசியை நகர்பகுதி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு மூங்கில் அரிசி சேகரிப்பு பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்’ என்றனர்.
    கிராமமக்களும் வெளியே செல்லாமல் இருக்க அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது மயிலம்பாடி ஊராட்சி. இங்குள்ள கல்வநாயக்கனூர் பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஏராளமான பொதுமக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறைக்கு தகவல் சென்றது. இதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர்கள் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் 438 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    மேலும் அந்த கிராமத்தை ஒட்டியுள்ள காட்டாம்பாளையம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியிலும் 80 பேருக்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

    இதில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 100 பேரும் அந்தியூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் 2 கிராமங்களிலும் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.

    அதேபோல் கிராமமக்களும் வெளியே செல்லாமல் இருக்க அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை.

    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன.

    முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டன. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 முதல் 59 வயது உள்ளவர்களுக்கும், பின்னர் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் தடுப்பூசி பற்றிய அச்சத்தால் பொதுமக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் கட்டவில்லை.

    தற்போது கொரோனா 2-ம் அலையால் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

    இதனால் திடீரென தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி ஆரம்ப சுகாதார மையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக கடந்த 7 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. தடுப்பூசி அனைத்தும் அந்தந்த ஆரம்ப சுகாதார மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று நடந்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் 42 இடங்களில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த இடங்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதலே தடுப்பூசி போடும் மையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். அதிகாலை முதலே 500-க்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் திரண்டனர். இதில் ஒவ்வொரு மையங்களிலும் தலா 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    சென்னிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டோக்கன் பெறுவதற்காக அதிகாலை 3.30 மணி முதல் ஆஸ்பத்திரி முன்பு 400-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

    காலை 6 மணி அளவில் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்கள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே பி.காசிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 300-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட திரண்டு இருந்தனர். ஆனால் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அதிகாலை 5.30 மணி முதல் தடுப்பூசி போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    இதேபோல் கோபி, அந்தியூர், சித்தோடு, பெருந்துறை, பவானி, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் இன்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்திற்கு கோவேக்சின் தடுப்பூசி இன்னும் வராததால் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் டோசுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தடுப்பூசி போடும் அனைத்து ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

    பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாய் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 26). கூலித்தொழிலாளி. சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் கனகராஜின் உறவினர் ஆவார்.

    இந்த நிலையில் கனகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் பெற்றோரிடம் சென்று, அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சிறுமியின் தந்தை மறுத்துவிட்டார். தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியை கடந்த 17-ந் தேதி கனகராஜிக்கு கட்டாய திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.

    இதுகுறித்து சிறுமி காவலன் செயலி மூலம் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது உத்தரவின் பேரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாய் மற்றும் கனகராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் கனகராஜ் கோபி மாவட்ட சிறைச்சாலையிலும், சிறுமியின் தாய் கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
    மாவட்டத்தில் தற்போது 13 ஆயிரத்து 102 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா 2-வது அலை பாதிப்பு மாநிலம் முழுவதும் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வாரத்தை காட்டிலும் சற்று குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த 8-ந் தேதி 1,646 பேரும், நேற்று முன்தினம் 1,405 பேரும் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டார்கள்.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்து 262 ஆக உயர்ந்தது. இதில் 58 ஆயிரத்து 685 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,990 பேர் குணமடைந்தனர். தற்போது 13 ஆயிரத்து 102 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 66 வயது முதியவர் கடந்த 6-ந் தேதியும், 82 வயது முதியவர் 7-ந் தேதியும், 56 வயது பெண், 68 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் ஆகியோர் நேற்று முன்தினமும், 69 வயது மூதாட்டி நேற்றும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 475 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பு குறித்து ஈரோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணமடைந்து விட்டார்கள். தற்போது 19 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் பலியாகி உள்ளார்கள். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 1,387 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 345 படுக்கைகள் காலியாக உள்ளன.

    இதேபோல் 48 தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,528 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 747 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், 31 இடங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. அங்கு 3 ஆயிரத்து 332 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த மையங்களில் 2 ஆயிரத்து 279 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் 37 இடங்களும், கிராமப்புற பகுதிகளில் 121 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 790 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 828 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஈரோடு சுதா ஆஸ்பத்திரி, ஜான்சன்ஸ் எம்.ஆர்.ஐ. நிறுவனம், தீபா மைக்ரோ லேப், கோபி அபி எஸ்.கே.ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோடு மாவட்டத்தில், 80 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு, கடந்த ஒரே மாதத்தில் 19,889 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியினை முதன்மை பணியாக கருதி போலீஸ் துறை சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த மாதம் 10-தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட எல்லைகளிலும், மாவட்டத்திற்குள்ளும் முக்கிய சந்திப்புகளில் ஊரடங்கிற்கு முன்பு வரை 63 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஊரடங்கு உத்தரவுக்கு பின்பு சோதனை தீவிரப்படுத்தும் வகையில் சோதனைச்சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டு தற்போது ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி உள்பட மொத்தம் 80 சோதனைச்சாவடிகள் மூலம் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் கர்நாடக மாநில எல்லைகளில் கூடுதலாக 5 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, மது கடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதேபோல் மாவோயிஸ்ட், நக்சல் நடமாட்ட தகவலினால் கர்நாடக மாநில எல்லைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) வரை ஒரே மாதத்தில் 21 ஆயிரத்து 708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 19 ஆயிரத்து 733 இரு சக்கர வாகனங்கள், 156 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 889 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    அரசு தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்துள்ளது. இதனை கடைபிடிக்கும் வகையில், மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள காய்கறி, மளிகை கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள வேண்டும். வெகு தொலைவில் உள்ள கடைகளுக்கு வாகனங்களில் வந்து பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

    அரசின் அடுத்த தளர்வுக்கான உத்தரவு வரும் வரை மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இதை தவிர்த்து தேவையில்லாமல் ரோடுகளில் நடமாடினால் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், கோர்ட்டு நடவடிக்கை பின்னர் தான் வாகன ஓட்டிகள் பெற முடியும்.

    எனவே, அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், முன்களப்பணியாற்றும் போலீஸ் துறையினருக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறினார்.
    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய-மதுவிற்ற 10 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    ஈரோடு:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரியப்பம்பாளையத்தில் சிலர் சாராயம் காய்ச்சி கள்ளத்தனமாக வியாபாரம் செய்வதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் போலீசார் அங்கு சென்றார்கள். அப்போது அங்கு 4 பேர் சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்தார்கள். உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்தார்கள். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேகர் (வயது 49), சுப்பிரமணி (38), விஸ்வநாதன் (23), சண்முகம் (39) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சிலிண்டர், அடுப்பு, பானை, அலுமினிய பாத்திரங்கள், 200 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள

    அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பாலமலை அடிவார பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக அம்மாபேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு 9.30 மணி அளவில் குருவரெட்டியூர் அருகே உள்ள பாலமலை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் 2 கேன்களுடன் சென்று கொண்டிருந்ததை பார்த்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த கேனை வாங்கி திறந்து பார்த்தனர். அதில் தலா 5 லிட்டர் சாராயம் என மொத்தம் 10 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர்கள் குருவரெட்டியூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சஞ்சய் (வயது 23) என்பதும், பூதப்பாடி அடுத்துள்ள எஸ்.பி.குள்ளனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கலையரசன் (22) என்பதும், 2 பேரும் சாராயம் காய்ச்சி அதை ஊரடங்கில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் தலையம்பாளையத்தில் ஒருவர் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தலையம்பாளையத்தில் உள்ள சரவணன் (வயது 35) என்பவருடைய வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டுக்குள் 11 கர்நாடக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்திருந்தது தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சரவணனை கைது செய்து, 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தார்கள்.

    இதேபோல் போலீசார் பெருந்துறை சுள்ளிப்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சுள்ளிப்பாளையம் வெற்றிநகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (53) என்பவர் ஸ்கூட்டரில் விற்பனைக்காக 20 மதுபாட்டில்களை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தார்கள்.

    பங்களாப்புதூர் போலீசார் டி.ஜி.புதூர் நால் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கையில் ஒரு கேனும் இருந்தது. இதனால் போலீசார் அவர்களை தடுத்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். உடனே போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த கேனை திறந்து பார்த்தார்கள். அதில் 5 லிட்டர் எரிசாராயம் இருந்தது. மேலும் விசாரணையில், அவர்கள் பவானிசாகர் அருகே உள்ள பகுத்தம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கே.என்.பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் எரிசாராயத்தை விற்பனைக்காக கடத்திக்கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த எரிசாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தார்கள்.

    புஞ்சைபுளியம்பட்டி அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே நல்லூர் ஊராட்சிக்கு உள்பட்டது எரங்காட்டுப்பாளையம் காலனி. இங்கு கடந்த ஒரு வாரமாக சரியாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று கூறப்படு்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 10.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி-காவிலிபாளையம் ரோட்டில் உள்ள எரங்காட்டுபாளையம் காலனி முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதிக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு அதிலிருந்து பொதுக்குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் உடனே குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி கூறும்போது, ‘மின் மோட்டார் பழுது சரிசெய்யப்பட்டு விரைவில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த ரோட்டில் கார், லாரி, வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கர்நாடகாவில் இருந்து பண்ணாரிக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு்ள்ளது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பவர்கள் அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு் வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பண்ணாரி சோதனைச்சாவடி வழியாக 2 பேர் ஒரு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அதில் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 20 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘அவர்கள் டி.என்.பாளையம் அருகே உள்ள துறையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 45), ராஜன் (35) ஆகியோர் என்பதும், அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக தமிழகத்துக்கு கடத்தி வந்ததும்’ தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேைரயும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர் மற்றும் 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 2 பேரும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

    ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றியும், இ-பதிவு இல்லாமலும் வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோடுகளிலும் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையின்றியும், இ-பதிவு இல்லாமலும் வரும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி ரோடுகளில் வாகனங்களில் சுற்றியவர்கள் 295 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 245 இரு சக்கர வாகனம் மற்றும் 17 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 262 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ×