search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா

    மாவட்டத்தில் தற்போது 13 ஆயிரத்து 102 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா 2-வது அலை பாதிப்பு மாநிலம் முழுவதும் குறைந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வாரத்தை காட்டிலும் சற்று குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த 8-ந் தேதி 1,646 பேரும், நேற்று முன்தினம் 1,405 பேரும் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டார்கள்.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 1,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 72 ஆயிரத்து 262 ஆக உயர்ந்தது. இதில் 58 ஆயிரத்து 685 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 1,990 பேர் குணமடைந்தனர். தற்போது 13 ஆயிரத்து 102 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சுமார் 10 ஆயிரம் பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    இதற்கிடையே கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ளார்கள். இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 66 வயது முதியவர் கடந்த 6-ந் தேதியும், 82 வயது முதியவர் 7-ந் தேதியும், 56 வயது பெண், 68 வயது மூதாட்டி, 74 வயது முதியவர் ஆகியோர் நேற்று முன்தினமும், 69 வயது மூதாட்டி நேற்றும் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 475 ஆக உயர்ந்தது.

    கொரோனா பாதிப்பு குறித்து ஈரோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணமடைந்து விட்டார்கள். தற்போது 19 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு சதவீதம் பேர் பலியாகி உள்ளார்கள். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் ஈரோடு, கோபி, பவானி, சத்தியமங்கலம், அந்தியூர், கொடுமுடி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் 1,387 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 345 படுக்கைகள் காலியாக உள்ளன.

    இதேபோல் 48 தனியார் ஆஸ்பத்திரிகளில் 1,528 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 747 படுக்கைகள் காலியாக உள்ளன. மேலும், 31 இடங்களில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. அங்கு 3 ஆயிரத்து 332 நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அந்த மையங்களில் 2 ஆயிரத்து 279 படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் 37 இடங்களும், கிராமப்புற பகுதிகளில் 121 இடங்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் மொத்தம் 790 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் 12 ஆயிரத்து 497 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 7 லட்சத்து 52 ஆயிரத்து 828 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஈரோடு சுதா ஆஸ்பத்திரி, ஜான்சன்ஸ் எம்.ஆர்.ஐ. நிறுவனம், தீபா மைக்ரோ லேப், கோபி அபி எஸ்.கே.ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×