என் மலர்tooltip icon

    ஈரோடு

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற நிதி நிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் பெரியார்நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (45) நிதிநிறுவன அதிபர். இவர் பொங்கல்பண்டிகை கொண்டாட குடும்பத்துடன்  சொந்தஊரான கரூருக்குச் சென்றுவிட்டார்.
     
    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுகந்தி. இவர் நஞ்சமடைக்குட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் பொங்கல்பண்டிகையையொட்டி சொந்தஊரான திருநெல்வேலிக்குச் சென்று விட்டார். 

    இந்நிலையில் 2 வீடும் பூட்டப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் அங்கு வந்து உள்ளனர். 

    முதலில் பாலகிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 2 பவுன் நகையை திருடிக் கொண்டனர். மேலும் வீட்டில் பணம் ஏதும் வைத்துள்ளார்களா? என்று வீடு முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் பணம் எதும் சிக்கவில்லை.

    இதையடுத்து மர்ம நபர்கள் அருகில் உள்ள ஆசிரியர் சுகந்தி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு பணம், நகை எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்றனர். 

    அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தெரியவந்ததும் அந்தியூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    மேலும் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

    முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிமலை ரோடு, உழவன் நகரில் வசித்து வருபவர் சுப்பிரமணியம் (வயது 62). இவருடைய மகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் திருமணம் செய்துள்ளார். இதனால் சுப்பிரமணியம், எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி ஆவார். சுப்பிரமணியத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதியில் இருந்து ஒரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

    அதில் பேசிய நபர்கள், நாங்கள் கேட்ட பணத்தை கொடுங்கள். இல்லையென்றால் உங்களை கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று கூறி மிரட்டல் விடுத்து வந்தனர்.

    இதுகுறித்து சுப்பிரமணியம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குறிப்பிட்ட செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது? என்பது குறித்து சிக்னல் மூலம் கண்காணித்து வந்தனர்.அதில் அந்த செல்போன் அழைப்புகள் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சத்தியமங்கலம் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ‘அவர்கள் சத்தியமங்கலம் உள்ள பண்ணாரி ரோட்டை சேர்ந்த பால்ராஜ் (60), சந்திரன் (48), சீனிவாசன் (41) உள்பட 5 பேர் என்பதும், அவர்கள் அனைவரும் சேர்ந்து செல்போனில் சுப்பிரமணியத்திடம் பணம் கேட்டு பேசி, கொலை மிரட்டல் விடுத்து வந்ததும்,’ தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பால்ராஜ், சந்திரன், சீனிவாசன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். இதுகுறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கோவில் வளாகத்தில் இருந்த சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட உருவபொம்மைகளை வனப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி களிமண்ணால் செய்யப்பட்ட உருவபொம்மைகளை வனப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது நவக்கிணற்று மாதேஸ்வரன் கோவில்.
     
    மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மாடு, யானை, நாய், மனிதன் உள்ளிட்ட உருவபொம்மை வைத்து சுற்றுவட்டார கிராம மக்கள் வனத்துறை அனுமதி பெற்று அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு மாட்டுப்பொங்கல் அன்று கொண்டு சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

    இவ்வாறு களிமண்ணால் ஆன உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வதால் தங்களுக்கும், தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடு, ஆடு, நாய் உள்ளிட்டவைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் கொரோனாவைரஸ் பரவலால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் கோவிலுக்கு சென்று வழிப்பட தடைவிதித்துள்ளது. 

    இதனையடுத்து கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வருடம் மாட்டுப்பொங்கலான இன்று காலை புஞ்சை துறையம்பாளையத்தில் இருந்து அடர்ந்து வனப்பகுதியில் உள்ள நவக்கிணற்று மாதையன் வனக்கோவிலுக்கு ஒரு கிராமத்திற்கு 5 நபர் மட்டுமே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    அதன்படி பங்களாப்புதூர், கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குறைந்த நபர்களே அனுமதிக்கப்பட்டு மாடு, யானை உள்ளிட்ட உருவ பொம்மைகளை அலங்கரித்து பூஜை செய்து மேளதாளத்துடன் எடுத்து சென்று கோவில் முன்பு வைத்து வழிபாடு செய்தனர்
    தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அய்யப்ப பக்தர் பிணமாக மீட்கப்பட்டார்.
    சித்தோடு:

    தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட அய்யப்ப பக்தர் பிணமாக மீட்கப்பட்டார்.

    ஆந்திர மாநிலம் குண்டூர் வினுகொண்ட அஞ்சல் பகுதியை சேர்ந்த ராமாராவ், தனஜெயன்குமார், வீனாய், ரவீந்திரா மற்றும் டிரைவர் மன்சூர்அலி ஆகிய 5 பேர் நேற்று ஆந்திராவில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விட்டு  காரில் வந்துள்ளனர்.
     
    இந்நிலையில் நேற்று காலை காரை சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் பவானி அருகே உள்ள நசியனூர் பெரிய வாய்க்கால் அருகில் நிறுத்தி விட்டு 5 பேரும் வாய்காலில் குளிக்க சென்றனர்.

    இதில் ராமாராவ் (26) குளித்து கொண்டு இருக்கும் போது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார்.  உடனே அவருடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர்.  தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் ராமாராவை காப்பாற்ற முடியவில்லை.

    இதனைதொடர்ந்து பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்புநிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான வீரர்கள் காலை முதல் இரவு வரை தேடியும் ராமாராவ் உடல் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து  இன்று காலை மீண்டும் 2-வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் குளித்த இடத்தில் இருந்து வெகுதொலைவில் ராமாராவ் பிணமாக மீட்கப்பட்டார்.

    மேலும் இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதை அடுத்து பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கின் போது தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.  

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் இரவு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றியதாக 20 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார், வருவாய்த் துறையினர் தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் முக கவசம் அணியாமல் வந்த 525 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக திடீரென இரவு 11 மணியளவில் சாரல்மழை பெய்தது. பின்னர் அது பலத்த மழையாக கொட்டியது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2-வது நாளாக திடீரென இரவு 11 மணியளவில் சாரல்மழை பெய்தது. பின்னர் அது பலத்த மழையாக கொட்டியது.

    அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வட்டக்காடு, புதுக்காடு, விளாங்குட்டை, கிழங்குகுழி, கும்பரவாணி, உப்புகொடிகால்தோட்டம் ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டியது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது.  

    இந்த பலத்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஏரிக்கு செல்லும் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 

    இதனால் தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள் சாய்ந்து விழலாம் என்பதால் மின் ஊழியர்கள் அதிகாலை அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். 

    இதனால் அந்தியூர், சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    அந்தியூர் தெப்பக்குளம் வீதி பள்ளமான பகுதியில் மீண்டும் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் தங்களது வீட்டில் தேங்கிய மழைநீரை விடிய, விடிய அகற்றினர். 

    மேலும் தவிட்டுபாளையம் பகுதியில் உள்ள மயானம் சுற்றுச்சுவர் இந்த காட்டாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்து உள்ளது. அந்தியூர் பகுதியில் இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்
    ஈரோடு:

    ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய 4  பேரை போலீசார் கைது செய்தனர்

    ஈரோடு மூலப் பாளையம், என்.ஜி.ஜிஓ. நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 70). ஓய்வு பெற்ற துணை கலெக்டர்.
     
    கடந்த 11-ந் தேதி வெள்ளிங்கிரி தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் ஜன்னல் கதவைத் திறந்து குச்சியை வைத்து ரூ.7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

    இதுகுறித்து வெள்ளியங்கிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. 

    அதில் 4 பேர் வீட்டிற்கு வந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
     
    இந்நிலையில் நேற்று தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.

     இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23), அதே பகுதியை சேர்ந்த சங்கர் (19), ஈரோடு மாவட்டம் முள்ளாம் பரப்பு பகுதியைச் சேர்ந்த பிரபு (23), மூலபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், இவர்கள் 4  பேரும் சேர்ந்து தான் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வெள்ளியங்கிரி வீட்டில் ரூ.7 ஆயிரம் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டனர்.  மேலும் இவர்கள் ஓட்டி வந்த 2 மோட்டார் சைக்கிளும் திருடியது என தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 
    சென்னிமலை முருகன் கோவிலில் தைபூச திருவிழா நடந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தைபூச திருவிழா நடந்த அனுமதி வழங்கப்பட்டு  உள்ளது.  ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த  ஆண்டு தைப்பூச தேர்திருவிழா நடத்த அனுமதி வழங்கவில்லை என்றால் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக முருக பக்தர்கள் அறிவித்து இருந்தனர். 

    இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் தேரோட்டம் அல்லாத மற்ற நிகழ்வுகளை நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் கோவில் நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழா நடக்கிறது.

    அதன்படி வருகிற 17-ந் தேதி மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் விநாயகர் வழிபாடு, கலச ஆவாஹணம், பிராயசித்த ஹோமம், முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளது.

    தைப்பூச தினமான 18-ந் தேதி அன்று அதிகாலை 4.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜை, பூர்ணாகுதி, உற்சவர் அபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் கைலாசநாதர் கோவிலில் உள்பிரகாரத்திற்குள் சுவாமி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் நிர்வாகம் மூலமே நடத்தப்படுகிறது.

    அதேசமயம் 17-ந் தேதி மாலை நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்திற்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை அன்று மாலை 5 மணிக்குள் கோவில் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் வழங்க வேண்டும்.

    மேலும் 18-ந் தேதி காலை நடைபெறும் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை அன்று அதிகாலை 5 மணிக்குள் அதற்குரிய பாத்திரங்களில் வழங்குமாறும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
    ஈரோடு: 

    ஈரோடு மாவட்ட கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    பொங்கலையொட்டி ஈரோட்டில்  வீரவிளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது.  இன்று மாட்டுப்பொங்கலை யொட்டி விவசாயிகள் பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர்.

    பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. கிராமப்புறங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம் காலை முதலே களை கட்டி காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் காவிரி, பவானி, கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் கால்நடைகளை    குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டியும், பழைய கயிறுகளை மாற்றி மாடுகளை அலங்கரித்திருந்தனர்.

    உழவு தொழிலுக்கும், உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவைகளை படையலிட்டு வழிபட்டனர். 

    இந்தாண்டு பரவலாக மழை பெய்திருந்ததாலும், அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாலும், மாவட்டத்தின் எல்லா பகுதிகளிலும் பசுமை படர்ந்து உள்ளதால் பல ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழாவை விவசாயிகள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் ஒமைக்ரான் பாதிப்பும் சேர்ந்து அதிக அளவு பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 6-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு என அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை 2-வது வாரமாக மீண்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

    இதன்படி நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேசமயம் அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. 

    அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கை யொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

    குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடு த்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடு த்துள்ளதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.  கட்டுப்பாடுகளில் மிக முக்கியமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. தற்போது தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. 

    இந்நிலையில் பொங்கல்பண்டிகையையொட்டி கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடந்த 14-ந் தேதி முதல் வரும் 18-ந் தேதி வரை 5 நாட்களுக்கு கோவில்களில் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இதில் 18-ந் தேதி தைப்பூசம் என்பதால் அன்றும் வழிபட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் புகழ்பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன், கோட்டைபெருமாள், கருங்கல்பாளையம் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் போன்ற கோவில்களில் இன்று காலை பொதுமக்கள் வெளியே நின்று சாமி கும்பிட்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இருந்தாலும் நூற்றுக்கணக்கான மக்கள் கோவில் வெளியே நின்று அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    இதேப்போல் சென்னிமலை முருகன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், குருநாதர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர், பெருமாள்மலை கோவில், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், செல்லாண்டி அம்மன், தேவபுரம் கருமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன், கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பச்சைமலை பவளமலை முருகன் கோவில், சாரதா மாரியம்மன் கோவில் போன்ற கோவில்கள் முன்பு இன்று காலை வழக்கம் போல் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். 

    கோவில்களில் வழக்கம்போல் ஆகம விதிபடி பூஜைகள் நடைபெற்றன. கோவில்கள் முன்பு இது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தன.
    ×