என் மலர்
ஈரோடு
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக புதுப்பாளையம் ரோட்டில் பொது கிணறு உள்ளது.
இந்த கிணற்றிலிருந்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை தொட்டியில் தண்ணீரை நிரப்பி அங்கிருந்து குழாய் மூலம் அப்பகுதி மக்களுக்கு வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்திய குடிநீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று ஊராட்சி நிர்வாகம் சார்பாக மேல்நிலைகுடிநீர் தொட்டியை சுத்தம் செய்து. தண்ணீர் நிரப்பி மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இருந்தும் துர்நாற்றம் போகவில்லை.
அதை தொடர்ந்து கிணற்று நீரை சோதித்து அதில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து கிணற்று நீரை முழுமையாக சுத்தம் செய்தனர். அப்போது கிணற்றுக்குள் யாரோ மர்ம நபர்கள் செப்டிக் டேங்க் கழிவு நீரை கொண்டுவந்து கொட்டியது தெரியவந்தது.
இந்த பொது கிணறு உள்ள பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் கழிவு நீர் கொண்டு வந்த ஒரு வேனை பொதுமக்கள் பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வேனில் இருந்து தான் பொது கிணற்றில் கழிவு கொட்டப்பட்டதா? அல்லது அருகில் கொட்டியதில் நிலத்தடி நீரில் கலந்து கிணற்றுக்கு வந்ததா? என தெரியாத நிலையில் கிணற்று நீர் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.
இந்நிலையில் அந்த கிணற்று நீரை பயன்படுத்திய பொதுமக்களுக்கு சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஏற்பாட்டில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-
கழிவு நீரை கொண்டு வந்து கொட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிணற்றின் மேல் பகுதியில் தகர செட் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் குடிநீர் கிணற்றில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முருங்கதொழுவு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் சென்னிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சூளை பகுதியில் பாருடன் கூடிய ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
இன்று காலை கடையை ஊழியர்கள் திறந்தனர். அப்போது கடையில் அட்டைப் பெட்டியில் இருந்த 350-க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் மர்ம நபர்கள் 2 பேர் வருவதும், பின்னர் அவர்கள் பெட்ரோல் ஊற்றி மதுக்கடையில் தீ வைத்ததும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து மதுக்கடையை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார் கள். மேலும் இந்த தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் எரிந்து சேதமானது.






