என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிச்சோடி காணப்பட்ட ஈரோடு ரெயில்வே நுழைவு பாலம்.
    X
    வெறிச்சோடி காணப்பட்ட ஈரோடு ரெயில்வே நுழைவு பாலம்.

    இன்று முழு ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்

    ஈரோட்டில் இன்று 3-வது வாரமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சாலைகள் வெறிச்சோடியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 3-வது வாரமாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து சாலைகள் வெறிச்சோடியது.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 2 வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

    கடந்த 2 வார முழு ஊரடங்கின் போது என்னென்ன நடைமுறைகள் பின்பற்ற ப்பட்டதோ அதுவே இந்த வாரமும் தொடரும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று 3-வது வாரமாக முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    ஈரோடு மாவட்டத்தில்  இன்று அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர் செல்வம் பார்க் பகுதி, காளைமாடு சிலை, மணிக்கூண்டு, ஆர்.கே. வி.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், ஜி.எச்.ரவுண்டானா, ரெயில்நிலையம், பெருந்துறைரோடு, மேட்டூர் ரோடு, நசியனூர்ரோடு, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போன்ற பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஈரோடு வ. உ. சி. பூங்கா பகுதியில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சம்பத்நகர், பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பெருந்துறை, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையும் அடைக்கப்பட்டிருந்தன.

    அதே நேரம் அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. பார்சலில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது.மாநகர் பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் இன்று காலை வழக்கம் போல் செயல்பட்டன.  

    இதேபோல் ஓட்டலிலும் பார்சலில் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பெரிய ஓட்டல்களில் ஆன்லைன் ஆர்டர் மூலம் சேவை வழங்கப்பட்டன.

    இதேப் போல் ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், ஆய்வுக் கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கின.

    இன்றுமுழு ஊரடங்கை யொட்டி பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

    அதேநேரம் முன் களப்பணியாளர்கள் வழக்கம் போல் இன்று பணிக்கு சென்றனர். பஸ் நிலையங்களில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது.

    முழுஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர்
    Next Story
    ×