என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி கொரோனா பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி கொரோனா பரிசோதனை 5 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக  தெரிவித்து உள்ளனர்.  

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை  காரணமாக கடந்த சில நாட்களாக கொரோனா  தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. முதலில் பாதிப்பு குறைந்த நேரத்தில் தினமும் 2,000 வரை கொரோனா  தினசரி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.  

    பின்னர் பாதிப்பு அதிகரித்தபோது தடுப்பு நடவடிக்கையாக  கொரோனா  தினசரி பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 4 ஆயிரம் முதல் 4, 500  வரை தினசரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.  இந்நிலையில் நேற்று   ஒரே நாளில் 5,027 பேருக்கு  பரிசோதனை செய்யப்பட்டது.  

    பரிசோதனையை அதிகரித்ததன் காரணமாக  தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 1127 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால்  பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. 

    ஒரே நாளில் 997 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 498 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். 

    இதுவரை 725 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 8,781 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார்  கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மொடக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சாம்சன் பால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு கொண்டிருந்தனர்.  

    அப்போது மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி  அடுத்த சாவடிபாளையம்புதூர்  வினையா நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் ராஜேந்திரன், கண்ணன், சதீஷ், செந்தில் குமார், சக்திவேல், வெங்க டேசன், அர்ஜூனன், கார்த்திக் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ 3,780 பறிமுதல் செய்யப்பட்டது. 

    இதையடுத்து  அவர்கள் 8 பேரும் கைது செய்யப் பட்டனர்.  இதேபோல் மலையம்பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 

    அப்போது கணபதிபாளையம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர். 

    போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கார்த்திக், வடிவேல், குருராஜ், நந்தகுமார், கதிரவன், சுப்பிரமணி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.3,210 பணம் பறிமுதல் செய்யப் பட்டது.

    மேலும் சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைப்போல் தாலுகா போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பணம் வைத்து சூதாடிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படை, முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்கு வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 

    ஈரோடு மாநகர் பகுதியில் 6 இடங்கள், அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.  வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    இந்நிலையில் இனிவரும் நாட்களில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுதல் பிரச்சார பாதுகாப்பு பணி ஓட்டுப்பதிவு எந்திரங்களை மையங்களுக்கு கொண்டு செல்வது, ஓட்டு எண்ணும் இடங்களுக்கு ஓட்டுப்பெட்டிகளை கொண்டு செல்வது, ஓட்டு எண்ணும் மையப் பாதுகாப்பு என பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். 

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது போலீசார் வேட்பு மனு தாக்கல் செய்யப் படும் பகுதிகள், பறக்கும் படை, 14 வாகன சோதனை இடங்களில் பணி யாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 1,834 போலீசார் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 1,251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏற்கனவே கொரோனா பாதிப்பு,  மருத்துவ விடுப்பு உட்பட பல்வேறு காரணங் களால் 350 போலீசார் விடுப்பில் உள்ளனர். மீதமுள்ள போலீசாரைக் கொண்டு தேர்தல் பாது காப்பு வழக்கமான பணி இருந்து இரவு நேர பாதுகாப்பு, கண்காணிப்பு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

    ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு போலீஸ் என்றாலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மேலும் போலீசார் தேவைப்படுகின்றனர். இதையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையினர்,  முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோரை  ஈடுப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி உள்ளது. 

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

    இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    வாக்குபதிவு நாளில் வாக்குசாவடி மையங்களில் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 41 ஆயிரத்து 193 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 

    தேர்தல் பணியில் மாநகராட்சி பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். 

    இதில் மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி இன்று  ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர் .என்.எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி என இரண்டு இடங்களில் பயிற்சி நடைபெற்றது. 

    மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகள், மாநகராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், தேர்தல் பிரிவு உதவி ஆணையர் குமரேசன், தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர்களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் இன்று முதல் கட்ட பயிற்சி நடந்தது. 

    இதேப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் இன்று முதல் கட்ட பயிற்சி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    இதில் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்காளர்களை ஒழுங்கு படுத்துதல், மின்னணு வாக்குபதிவுவை எப்படி கையாள்வது? மின்னணு வாக்குப்பதிவு பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது போன்றவை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 

    இந்த பயிற்சி பங்கேற்ற ஊழியர்களில் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் பயிற்சிக்கு வந்த ஊழியர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அடுத்த கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற 9-ந் தேதியும், இறுதி கட்ட பயிற்சி வகுப்பு 18-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொடுமுடி காவிரி ஆற்றில் மீன் பிடித்த வாலிபர் கை துண்டானது சம்பவம் குறித்து நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் பனங்காட்டுபுதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (27), இவரது நண்பர் சதீஸ் (25). நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர்கள் 2 பேரும் மீன் பிடிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக பாசூர் சங்கிலிகருப்பண சாமி கோவில் எதிரே உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டை தண்ணீரில் வீசி மீனை பிடித்தனர்.

    ஒருகட்டத்தில் தண்ணீரில் வீசுவதற்கு முன்பே ராஜேந்திரன் கையில் இருந்த நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் அவரது வலது கை மணிகட்டோடு துண்டானது. அருகில் இருந்த அவரது நண்பர் சதீஸ்குமாருக்கும் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 2 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜேந்திரன், சதீஸ் ஆகியோருக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்றும் அவர்களுக்கு வெடிகுண்டுகளை சப்ளை செய்தது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் இன்று காலை ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகே சேனாதிபதிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு கவுன்சிலருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளால் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வினியோகப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 66 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை ரங்கம்பாளையம் கலை அறிவியல் கல்லூரி அருகே சேனாதிபதிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் ரூ.4.47 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த நபரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்னியாகவுண்டன்வலசு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 34) என தெரியவந்தது. இவர் கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கோபிசெட்டிபாளையம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது.

    கோபிசெட்டிபாளையம:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சி.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு அயலூர் என்ற பகுதியில் நூல் மில் உள்ளது. இந்த மில்லில் 3 ஷிப்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகின்றனர்.

    வழக்கம்போல் நேற்று இரவும் ஊழியர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது புளோ ரூம் என்ற பகுதியில் மின்கசிவு காரணமாக பஞ்ச பேல்களில் தீப்பொறி பட்டு தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த அறைக்கும் சென்றது.

    அப்போது அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.

    தொடர்ந்து ஊழியர்கள் மில்லில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுபற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் பஞ்சுக்குள் இருந்து புகை வந்து கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் பஞ்சு மீது தொடர்ந்து தண்ணீரை ஊற்றினர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கூடுதுறையில் பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி கலப்பதாக ஐதீகம்.

    எனவே 3 நதிகள் சங்க மிக்கும் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களுடைய ஆசிர்வாதங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதனால் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் பவானி கூடுதுறையில் புனித நீராடி, திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக பவானி கூடுதுறையில் புனித நீராடுவதற்கும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கூடுதுறையில் புனித நீராட அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் வழி காட்டு வழிமுறைகளை கடை பிடித்து வழிபாட்டு தலங்கள் திறக்கவும், நீர் நிலைகளில் புனித நீராடவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் பவானி கூடுதுறையில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடித்து பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) தை அமாவாசையையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அதிகாலை முதலே பொதுமக்கள் வந்து கூடுதுறையில் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத் தனர்.

    ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். காலை நேரத்தில் குறைந்த அளவே பக்தர்கள் வந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல பவானி கூடுதுறையில் கூட்டம் அலை மோதியது.

    இதையொட்டி நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் கைகளில் சானிடைவர் மூலம் கைகள் கழுவிய பிறகே அனு மதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடை பிடித்து சென்றனர்.

    மேலும் புனித நீராடிய பக்தர்கள் சங்கமேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பவானி மற்றும் சித்தோடு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியபடியே இருந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

    இதேபோல் கொடு முடிக்கு இன்று அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடினர். மேலும் பலர் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் பலர் காவிரி ஆற்றில் நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.
    வெயில் காலம் தொடங்க இருப்பதால் யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனச்சரகத்தில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன. இந்நிலையில் நேற்று ஆசனூர் அருகே குட்டியுடன் யானைகள் சாலையை மெதுவாக கடந்து சென்றன. அப்போது அவ்வழியாக வந்த வாகனங்கள் தூரத்தில் நிறுத்தப்பட்டது.

    யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் சென்றன. இதையடுத்து வனத்துறையினர் வனவிலங்குகள் உணவு தேடி சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் வேகமாக இயக்காமல் மெதுவாக செல்ல வேண்டும். தற்போது வெயில் காலம் தொடங்க இருப்பதால் யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லும்படி வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.



    தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமிக்கு கொரோனா உறுதியானது. அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.
    ஈரோடு:

    தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ளார். அவர் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். தினமும் அதிகாரிகளை சந்தித்து ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் நிலவரம், ஆஸ்பத்திரியில் உள்ள படுக்கை வசதி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து வந்தார். மேலும் கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்.

    கடந்த சில நாட்களாக பல்வேறு அரசு திட்ட விழாக்களிலும் அவர் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்களை தேர்வு செய்தல், கூட்டணி கட்சிகளிடையே வார்டுகளை பிரித்து வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுதல் போன்ற கட்சி பணிகளிலும் அவர் ஆர்வம் காட்டி வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமிக்கு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் டாக்டரிடம் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொண்டார். இந்த பரிசோதனை முடிவு நேற்று காலை வந்தது. அதில் அமைச்சர் சு.முத்துசாமிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

    இதையடுத்து டாக்டரின் ஆலோசனையின் பேரில் அவர் ஈரோட்டில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்.

    அமைச்சருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் முத்துசாமி கேட்டுக்கொண்டார். அமைச்சர் முத்துசாமி ஏற்கனவே 2 தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக 3 நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. 

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 1,314 ஆக பதிவாகியிருந்தது. ஈரோடு மாநகராட்சி, கிராமப்புற பகுதிகளில் கொரோனா தாக்கம் வேகமாக  பரவியது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் இணைந்து  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர்.

    தற்போது மாவட்டத்தில் தினமும் 5 ஆயிரம்  வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

    நேற்று முன்தினம்  1261 ஆக இருந்த தினசரி பாதிப்பு நேற்று மேலும் குறைந்து 1198 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 855 ஆக பதிவாகியுள்ளது. 

    இதேபோல் ஒரே நாளில் 986 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந் துள்ளனர். 

    இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
     
    இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 725 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 8,659 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையம் அமைத்து 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் கட்டுப்பாட்டு மையம் அமைத்து 24 மணிநேரமும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள்  அமலுக்கு வந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர்  கொண்ட பறக்கும் படை குழுவினர் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு, நாமக்கல் சேலம் மாவட்டங்களை இணைக்கும் கருங்கல் பாளையம் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் சுரேஷ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  சோதனை சாவடியில் வரும் ஒவ்வொரு வாகனங்களையும் நிறுத்தி அங்குலம் அங்குலமாக சோதனை செய்து வருகின்றனர். 

    சோதனையை வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ் காண்பித்து அனுப்பி வைக்கின்றனர்.  பிற வாகனங்களில் பணம், பரிசுப் பொருட்கள், ஆயுதங்கள், கட்சிகொடி, தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏதேனும் உள்ளதா? வாகனம் எதற்காக வருகிறது. எங்கு செல்கிறது என்று கேள்வி கேட்டு விசாரணை செய்கின்றனர். 

    இதேப்போல் பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தங்களது சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.   மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. 

    இந்த மையம் சுழற்சி முறையில் 24 மணி நேரமும்  செயல்படும்.  மையத்தின் கட்டணமில்லா தொலை பேசி எண் 180042594890  வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம்.

    புகாரின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். மாநகராட்சி வார்டுகள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி, ஒலிபெருக்கி அனுமதி இந்த மையத்தின் மூலமே வழங்கப்படும். தேர்தல் பற்றிய சந்தேகங்களுக்கு இந்த எண்ணில் விளக்கம் பெறலாம்  என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ×