என் மலர்tooltip icon

    ஈரோடு

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு:

    தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பாராளுமன்றம், சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு வெற்றி பெற்றோமோ அதே போன்று உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. கூட்டணி பெறும். தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்கின்றார்.

    இந்தியாவில் உள்ள முதல்-அமைச்சர்களில் கடுமையாக உழைக்கக்கூடியவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து 9 மாதமாக கடுமையாக உழைத்து வருகிறார். அவரை பார்த்து நான் பெருமை அடைகிறேன். அவர் தேர்தல் பரப்புரையை காணொலி மூலம் பேசுவதை பா.ஜ.க.வை சேர்ந்தவர்களும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

    இவர்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று 500 பேரை தான் சந்திக்க முடிகிறது. ஆனால் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார். இன்று அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி உளறுவதிலும், பொய் சொல்லுவதிலும் வல்லவராக இருக்கிறார்.

    குறிப்பாக கொட நாட்டில் நடந்த கொலை, கொள்ளைகளில் பழனிச்சாமியின் பங்கு பெரும் பங்கு என விசாரணைக்கு பிறகு முழுமையாக வெளிவரும். கண்டிப்பாக நீதிமன்றத்தில் கண்டிக்கப்படுபவர்களில் முதன்மையானவராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கப் போகிறார்.

    அது அவருக்கு மிக நன்றாக தெரியும். அதனால் தான் சட்டசபையில் கொடநாடு வழக்கு தொடர்பாக அவர் பேசியபோது தன்னை சிறையில் தள்ள முயற்சி நடப்பதாக கூறி, தன்னை குற்றவாளி என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சேலத்தில் அவரது பணத்தை முடக்கி வைத்தார். தற்போது யோக்கிய சிகாமணி போல் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இதுதான் கடைசி பரப்புரையாக இருக்கும்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது. சமூகநீதி குறித்து பேச தார்மீக உரிமையை அ.தி.மு.க. இழந்து விட்டது. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரை மறந்து விட்டனர். அடுத்து ஜெயலலிதாவையும் மறந்து விடுவார். இதேப்போல் அ.தி.மு.க.வை மக்களும் மறந்து விடுவார்கள்.

    ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்தலை அமல்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. இதற்காகக்தான் கர்நாடகாவில் மோசமான சம்பவம் நடந்து வருகிறது. பள்ளி மாணவர்களை இதில் பலிகடாவாக்குகின்றனர்.

    ஒரே கொடி, ஒரே கலாச்சார, ஒரே கொள்கை தீவிரமாக அமல்படுத்தினால் சோவியத் யூனியன் சிதறுண்டதை போல் இந்தியாவும் சிதறவதற்கு வாய்ப்பு உள்ளது. நாட்டின் மீது பற்று உள்ளவர்கள் பா.ஜ.க.வை நிராகரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. 

    தடுப்பூசிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரியில் போடப்பட்டு வருகிறது.

    மேலும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். 

    மாவட்டத்தில் மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

    இதேபோல் 15 முதல் 18 வயது  உடைய சிறுவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 25 ஆயிரத்து 595 பேர் செலுத்தி கொண்டு உள்ளனர். 

    இது 89.86 சதவீதமாகும். இதேப்போல் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை 12 லட்சத்து 44 ஆயிரத்து 236 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 68.78 சதவீதமாகும்.

    முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியை மொத்தம் இதுவரை 28 லட்சத்து 69 ஆயிரத்து 831 பேர் செலுத்தி உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 160 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 160 பழைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புஞ்சை புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளிலும், 42 பேரூராட்சிகளிலும் நடக்கிறது.

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக 401 இடங்களில் 1,221 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    இவற்றில் மாவட்டம் முழுவதும் 184 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. 

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் மட்டும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொதுமக்கள் தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகின்றனர். 

    தேர்தல் நாளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இதன்படி மாவட்டத்தில் உள்ள பழைய குற்றவாளிகள் பட்டியலை போலீசார் தயார் செய்து வைத்திருந்தனர். 

    கடந்த சில நாட்களாக அவர்களது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்து வந்தனர். 

    அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 483 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதில் தற்போது 40 பேர் சிறையில் உள்ளனர். 

    தேர்தல் அமைதியான முறையில் நடக்கும் வகையில் 160 பழைய குற்றவாளிகளை மாவட்டம் முழுவதும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பிடித்து கைது செய்தனர். 

    அவர்களை ஆர்டிஓ முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 283 பழைய குற்றவாளிகளின் நடவடிக்கையை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதில் நன்னடத்தையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
     
    ஈரோடு மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 

    இதன் ஒரு பகுதியாக அந்தியூர் வன சரகத்திற்கு உட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, பெரிய ஏரி மற்றும் ஓடத்துறை ஏரி ஆகிய நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

    வனத்துறை களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் மூலம் கணக்கெடுப்பு இரண்டு நாட்களாக நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று மாலை மாவட்ட வன அலுவலர் கவுதம், வரட்டுப்பள்ளம் அணை நீர் நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணியினை ஆய்வு செய்தார்.

    அப்போது அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்ரசாமி உள்ளிட்ட வனத் துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.

    நூல் விலை உயர்வால் போர்வை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சென்னிமலை:

    நூல் விலை உயர்வால் போர்வை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் போர்வை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் நூல்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் போர்வை விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டு தேக்கமடைந்து வருவதால் நெசவுத்தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    சென்னிமலை பகுதியில் கைத்தறி, விசைத்தறி போர்வை தயாரிப்பிற்கு 2-க்கு 17 முறுக்கு நூல், 10 ஆம் நம்பர் நூல், 2-க்கு 32 அக்கரலிக் உல்லன் நூல், 20 ஆம் நம்பர் நூல் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. 

    இதில் 2-க்கு 17 நூல் ரகம் அதிக அளவில் கைத்தறி போர்வை மற்றும் ஜவுளி உற்பத்தியிலும், 10 ஆம் நம்பர் நூல் விசைத்தறி ஜவுளி உற்பத்தியிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

    5 கிலோ எடையுடைய 2-க்கு 17 நூல் கட்டு ஒன்று கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் 1,050 ரூபாய்க்கும், டிசம்பரில் 1,200 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் இதன் விலை பிப்ரவரியில் 1,350 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கட்டு ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.

    10ஆம் நம்பர் நூல் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் ஒரு கட்டின் விலை 500 ரூபாயாகவும், டிசம்பரில் 525 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், இதன் விலை பிப்ரவரியில் ரூ.550 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கட்டு ஒன்றுக்கு கடந்த 3 மாதத்தில் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 

    20ஆம் நம்பர் ஒயிட் கோன் நூல் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்று 100 ரூபாய்க்கு விற்றது. பின்னர் டிசம்பரில் இதன் விலை 110 ரூபாயாகவும், தற்போது இதன் விலை கிலோ ஒன்று 125 ரூபாயாக உள்ளது. இவ்வாறு கடந்த 3 மாதங்களில் இந்த நூல் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    10ஆம் நம்பர் ஒயிட் கோன் நூல் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்று 75 ரூபாய்க்கு விற்றது. பின்னர் டிசம்பரில் இதன் விலை 90 ரூபாயாகவும், தற்போது இதன் விலை கிலோ ஒன்று 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

    இவ்வாறு கடந்த 3 மாதங்களில் இந்த நூல் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மேலும், கைத்தறியில் போர்வை மற்றும் சால்வைகள் தயாரிக்க 2-க்கு 32 அக்ரலிக் உல்லன் நூல் பயன்படுத்தப்படுகிறது.இந்த நூலின் விலையும் கடந்த 3 மாதத்தில் கூடியுள்ளது.

    இவ்வாறு நூல் விலை கடந்த பல மாதங்களாகவே கடுமையாக உயர்ந்து வருவது சென்னிமலை வட்டாரத்தில் போர்வை மற்றும் ஜவுளி தயாரிப்பை கடுமையாக பாதித்து உள்ளது. 

    நூல் விலை உயர்வால் போர்வையின் அடக்க விலை ரூ.50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆகவே, அடக்க விலை உயர்வுக்கு ஏற்றபடி போர்வை அதிக விலைக்கு விற்க முடியாமல் தவிப்பதாக ஜவுளி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். 

    இந்த நூலின் விலை உயர்வால் கைத்தறி, விசைத்தறி இரண்டிலும் தயாராகும் போர்வை, ஜவுளிகள், சால்வைகளின் அடக்க விலை உயர்ந்துள்ளது.

    ஆனால், இந்த விலை உயர்வுக்கு ஏற்ப அதன் விற்பனை விலையை திடீரென அதிகரிக்க முடியாத நெருக்கடி உள்ளதாக கூறுகின்றனர். 

    இதனால் பல கோடி ரூபாய் போர்வைகள், ஜவுளிகள் விற்பனையாகாமல் குடோன்களில் தேங்கியுள்ளது. இதனால் ஜவுளி தயாரிப்பு முடங்கி வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறுகின்றனர். 

    எனவே உடனடியாக நூல் விலையை குறைப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை எடுக்க நெசவாளர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
    காதலர் தினத்தை யொட்டி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார்க், மற்றும் சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந் தனர். அவர்கள் ஒருவருக் கொருவர் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
    ஈரோடு:

    காதலர் தினத்தை யொட்டி  இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள பார்க், மற்றும் சுற்றுலா தலங்களில் காதல் ஜோடிகள் குவிந் தனர். அவர்கள் ஒருவருக் கொருவர் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள வ உ சி பூங்கா ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தன்று களைகட்டும். 

    இந்த நாளில் ஏராளமான காதல் ஜோடிகள் வ.உ.சி பூங்காவுக்கு படையெடுத்து வருவார்கள். இதேபோல் புதிதாக திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதிகளும் அதிக அளவில் வருவார்கள். 

    அவர்கள்  பூங்காவிற்கு வந்து உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். இதே போன்று இந்த ஆண்டும் வ. உ. சி பூங்காவுக்கு காதலர்கள் வந்தனர். 

    ஆனால் இந்த ஆண்டு வ. உ. சி பூங்காவில் காதலர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வ. உ. சி பூங்கா நுழைவாயிலில் பூட்டு போட்டு மூடப்பட்டிருந்தது. இதனால் காதலர்கள் ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். 

    ஆனால் அதே நேரம் அதே பகுதியில் உள்ள  சிறுவர்களுக்கான பூங்கா வழக்கம்போல் செயல்பட்டது. 

    இதில் சில காதல் ஜோடிகள் சென்று பொழுதைக் கழித்தனர். இன்னும் சில காதல் ஜோடிகள் ஈரோடு பஸ் நிலையத்திலும்,  சில காதல் ஜோடிகள் சினிமா தியேட்டருக்கு சென்றும்  காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். 

    ஈரோட்டில் இன்று ரோஜா பூ விற்பனை அமோகமாக இருந்தது. குறிப்பாக ஸ்டிக் ரோஜா  (பிரொபோஸ் ரோஜா) அதிக அளவில் விற்பனைக்கு நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர். 

    ஸ்டிக் ரோஜா ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. சாதாரண ரோஜா ஒன்று ரூ.10- க்கு விற்பனையானது. கலர் ரோஜா கிலோ ரூ. 200 வரை விற்பனையானது.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பூங்காவுக்கு இன்று காலை காதலர்கள் குறைந்த அளவே வந்தனர். 

    ஆனால் நேரம் செல்ல செல்ல இளை ஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் தங்கள் காதலர்களுடன் வர தொடங்கினர். அவர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறினர்.  

    தொடர்ந்து அவர்கள்  பூங்காவில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த பரிசு பொருட்களை பரிமாறி கொண்டனர்.இதையடுத்து காதல் ஜோடியினர் பூங்காவை கண்டு களித்து ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் காதலர்கள் அணை பகுதிக்கு சென்று கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். 

    பெரும்பாலான காதலர்கள் மோட்டார் சைக் கிளிலேயே வந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    பூங்காவுக்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்த பிறகே  சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு கண்காணிக்கப் பட்டு வருகிறார்கள்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை கடந்த 2 மாதங் களுக்கு பிறகு நேற்று முதல் பொது மக்கள் குளிக்கவும், கண்டு ரசிக்கவும் அனுமதிக் கப்பட்டனர்.

    இதையடுத்து காதலர் தினத்தையொட்டி இன்று கொடிவேரி அணைக்கு காதல் ஜோடிகள் பலர் வந்தனர். அவர்கள் அங்கு கொட்டும் தண்ணீரை கண்டு ரசித்தனர். தொடர்ந்து காதல் ஜோடிகள் சிலர் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மேலும் திருமணமான பலரும் கொடிவேரி தடுப் பணைக்கு வந்து அணையில் குளித்தனர். இதையடுத்து அவர்கள் காதலர் பரிசுகளை பரிமாறி கொண்டனர். 

    காதல் ஜோடிகள் பலர் அந்த பகுதியில் விற்பனை செய்த மீன்களை ருசித்து சாப்பிட்டனர். 

    இதே போல் திண்டல் மலைப்பகுதியில் காதலர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோவில் பின் வாசல் வழியாக சென்று இயற்கை அழதை ரசித்து சென்றனர்.

    மேலும் பவானி அருகே லட்சுமி நகர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு தனி யார் பார்க்கில் காதலர் கள் குவிந்து ஒருவருக் கொருவர்  பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
    அரச்சலூர் அருகே தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
    ஈரோடு:

    அரச்சலூர் அருகே தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    மொடக்குறிச்சி அடுத்த அவல்பூந்துறை, சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.இவருக்கும்  ஈரோடு கொளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரியா (23) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. 

    இதனால் சதீஷ்குமார் அடிக்கடி மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. 

    இந்நிலையில் நேற்று மதியம் பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பிரியாவின் தாயார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது பிரியா வீட்டினுள் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    பிரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து பிரியாவின் தாயார் அரச்சலூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று என் மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

    அதன்பேரில் அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமணம் ஆகி 7 வருடமே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19&ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில்  மாநகராட்சியில் 352 பேரும், 4 நகராட்சிகளில் 453 பேரும், 42 பேரூராட்சிகளில் 1919 பேர் என 771 பதவிகளுக்கு 2724 பேர் போட்டியில் உள்ளனர். 

    வாக்குபதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே வாக்காளர்க ளுக்கான பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. 

    அந்தந்த பகுதிகளில் உள்ள அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வீடு வீடாக சென்று பூத் சிலிப் விநியோகித்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இப்பணியில் 20 சதவீத பூத் சிலிப் விநியோகிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வயது, முகவரி, பாகம் எண், வரிசை எண், வாக்களிக்க வேண்டிய மையம் உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் வாக்குசாவடிக்கு செல்லும் போது, வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை தவிர 11 வகையான ஆவணங்கள் கொண்டு செல்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதிக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் முழுமையாக வழங்கி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் கரும்புகளை சேதப்படுத்தியது.
    தாளவாடி:

    தாளவாடி அருகே திகனாரை கிராமத்தில் தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் கரும்புகளை சேதப்படுத்தியது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்  ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட  தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை  சேர்ந்தவர் குமார்  (34). இவருக்கு அந்த பகுதியில்  3 ஏக்கர் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில்   அவர் கரும்பு சாகுபடி செய் துள்ளார்.

    வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள்   இரவு இவரது  தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டு இருந்த   கரும்புகளை  தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது-.  

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யானை களை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால் யானைகள் அங்கேயே நின்று கொண்டு இருந்தது. 

    இதையடுத்து குமார் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள்  சத்தம் போட்டு பட்டாசுகள் வெடித்தும் யானைகளை துரத்தினர்.

    ஆனால் யானை வனப்பகுதியில் செல்லாமல் கரும்பு தோட்டத்தை சேத படுத்தி கொண்டே இருந் தது.  சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் வனப் பகுதிக்குள் சென்றது. 

    இதில் 1 ஏக்கர் பரப் பளவில் பரிடப்பட்ட கரும்பு கள்  சேதமடைந்தது.  சேத மடைந்த கரும்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், வனப்பகுதியை சுற்றிம் அகழி அமைக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    சென்னிமலை முருகன் கோவிலில் இன்று ஒரே நாளில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
    சென்னிமலை:

    கொரோனா காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது. கொரோனா பரவல் குறைவதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டு வருகிறது.

    ஆனாலும் ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது வழிபாட்டு தலங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னிமலை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற அனுமதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று ஒரே நாளில் 9 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

    9 திருமண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள் மேளதாளம் என கோவில் வளாகமே களை கட்டியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் கோவில் வளாகம் மிகவும் எழுச்சியுடன் களைகட்டி இருந்தது.




    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மூணு வீடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விசாலாட்சி என்ற மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் தனியாக வசித்து வருகிறார்.

    இதனை கடந்த 2 நாட்களாக நோட்டமிட்ட ஒரு வாலிபர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி செய்தார். இதை பார்த்த மூதாட்டி திருடன்... திருடன் என சத்தம் போட்டார்.

    அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். இதையடுத்து திருட வந்த வாலிபர் மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி காலனி பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும், மூதாட்டி தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டு அந்த வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.
    ஈரோடு:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் 59 வேட்பாளர்கள், 4 நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 42 பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வினர் செய்து வருகின்றனர்.

    ×