என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டி வைத்து தாக்கப்பட்ட வாலிபரை மீட்ட போலீசார்.
    X
    கட்டி வைத்து தாக்கப்பட்ட வாலிபரை மீட்ட போலீசார்.

    வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரை கட்டி வைத்து தாக்கிய பொதுமக்கள்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து திருட முயன்ற வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மூணு வீடு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விசாலாட்சி என்ற மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் தனியாக வசித்து வருகிறார்.

    இதனை கடந்த 2 நாட்களாக நோட்டமிட்ட ஒரு வாலிபர் இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்த வீட்டுக்குள் புகுந்து திருட முயற்சி செய்தார். இதை பார்த்த மூதாட்டி திருடன்... திருடன் என சத்தம் போட்டார்.

    அப்போது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். இதையடுத்து திருட வந்த வாலிபர் மூதாட்டி வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓடினார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி காலனி பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப் ஒன்றில் வேலை பார்த்து வந்ததும், மூதாட்டி தனியாக வசிப்பதை தெரிந்து கொண்டு அந்த வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் வேறு ஏதாவது திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×