என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    நூல் விலை உயர்வால் போர்வை உற்பத்தி பாதிப்பு

    நூல் விலை உயர்வால் போர்வை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சென்னிமலை:

    நூல் விலை உயர்வால் போர்வை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சென்னிமலை மற்றும் சுற்று வட்டாரத்தில் போர்வை தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் நூல்களின் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவதால் போர்வை விற்பனை அதிகளவில் பாதிக்கப்பட்டு தேக்கமடைந்து வருவதால் நெசவுத்தொழிலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    சென்னிமலை பகுதியில் கைத்தறி, விசைத்தறி போர்வை தயாரிப்பிற்கு 2-க்கு 17 முறுக்கு நூல், 10 ஆம் நம்பர் நூல், 2-க்கு 32 அக்கரலிக் உல்லன் நூல், 20 ஆம் நம்பர் நூல் ஆகியவை பயன்பாட்டில் உள்ளது. 

    இதில் 2-க்கு 17 நூல் ரகம் அதிக அளவில் கைத்தறி போர்வை மற்றும் ஜவுளி உற்பத்தியிலும், 10 ஆம் நம்பர் நூல் விசைத்தறி ஜவுளி உற்பத்தியிலும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 

    5 கிலோ எடையுடைய 2-க்கு 17 நூல் கட்டு ஒன்று கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் 1,050 ரூபாய்க்கும், டிசம்பரில் 1,200 ரூபாயாகவும் இருந்தது. ஆனால் இதன் விலை பிப்ரவரியில் 1,350 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கட்டு ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்துள்ளது.

    10ஆம் நம்பர் நூல் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் ஒரு கட்டின் விலை 500 ரூபாயாகவும், டிசம்பரில் 525 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், இதன் விலை பிப்ரவரியில் ரூ.550 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் கட்டு ஒன்றுக்கு கடந்த 3 மாதத்தில் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. 

    20ஆம் நம்பர் ஒயிட் கோன் நூல் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்று 100 ரூபாய்க்கு விற்றது. பின்னர் டிசம்பரில் இதன் விலை 110 ரூபாயாகவும், தற்போது இதன் விலை கிலோ ஒன்று 125 ரூபாயாக உள்ளது. இவ்வாறு கடந்த 3 மாதங்களில் இந்த நூல் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    10ஆம் நம்பர் ஒயிட் கோன் நூல் விலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்று 75 ரூபாய்க்கு விற்றது. பின்னர் டிசம்பரில் இதன் விலை 90 ரூபாயாகவும், தற்போது இதன் விலை கிலோ ஒன்று 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

    இவ்வாறு கடந்த 3 மாதங்களில் இந்த நூல் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மேலும், கைத்தறியில் போர்வை மற்றும் சால்வைகள் தயாரிக்க 2-க்கு 32 அக்ரலிக் உல்லன் நூல் பயன்படுத்தப்படுகிறது.இந்த நூலின் விலையும் கடந்த 3 மாதத்தில் கூடியுள்ளது.

    இவ்வாறு நூல் விலை கடந்த பல மாதங்களாகவே கடுமையாக உயர்ந்து வருவது சென்னிமலை வட்டாரத்தில் போர்வை மற்றும் ஜவுளி தயாரிப்பை கடுமையாக பாதித்து உள்ளது. 

    நூல் விலை உயர்வால் போர்வையின் அடக்க விலை ரூ.50 முதல் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆகவே, அடக்க விலை உயர்வுக்கு ஏற்றபடி போர்வை அதிக விலைக்கு விற்க முடியாமல் தவிப்பதாக ஜவுளி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். 

    இந்த நூலின் விலை உயர்வால் கைத்தறி, விசைத்தறி இரண்டிலும் தயாராகும் போர்வை, ஜவுளிகள், சால்வைகளின் அடக்க விலை உயர்ந்துள்ளது.

    ஆனால், இந்த விலை உயர்வுக்கு ஏற்ப அதன் விற்பனை விலையை திடீரென அதிகரிக்க முடியாத நெருக்கடி உள்ளதாக கூறுகின்றனர். 

    இதனால் பல கோடி ரூபாய் போர்வைகள், ஜவுளிகள் விற்பனையாகாமல் குடோன்களில் தேங்கியுள்ளது. இதனால் ஜவுளி தயாரிப்பு முடங்கி வருகிறது. இதனால் பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளதாக கூறுகின்றனர். 

    எனவே உடனடியாக நூல் விலையை குறைப்பதற்கு தேவையான துரித நடவடிக்கைகளை எடுக்க நெசவாளர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×