என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தினமும் இதன் வழியாக ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது.
தினமும் மலைப்பாதையை கடக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போனதால் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி முதல் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 6-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் திம்பம் மலைப்பாதையில் 12 சக்கரங்கள் கொண்ட வாகனங்களுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் இந்த சாலையில் 16.2 டன் எடைக்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சத்தியமங்கலம் மற்றும் தாளவாடியில் கடையடைப்பு போராட்டமும், பண்ணாரி சோதனைச்சாவடி முன்பு லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் காத்திருப்புப் போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் அதிக எடை ஏற்றி சென்ற பத்து சக்கர லாரிகளுக்கும் சோதனைச்சாவடியில், வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள், வாகனங்கள் தமிழக எல்லையான காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் கடந்த 4 நாட்களாக நடுக்காட்டில் வரிசையாக நிறுத்தப்பட்டு, காத்திருக்கின்றன.
10 சக்கர வாகனங்களுக்கும் அனுமதி மறுப்பதால் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
10 சக்கர வாகனங்களுக்கு அனுமதி இருக்கும் நிலையில், கூடுதல் எடை அளவு உள்ளதாக காரணம் கூறி, அந்த வாகனங்களுக்கும் அனுமதி மறுத்து காரப்பள்ளம் சோதனைச்சாவடியில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் நடுக்காட்டில் சாப்பிட வழியில்லாமல் கடந்த 4 நாட்களாக தவித்து வருவதாக லாரி டிரைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தாளவாடி பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்புகள் வெட்டப்பட்டு லாரிகள் மூலம் ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும். நடுக்காட்டில் வெட்டப்படும் கரும்புகளை எடை போட்டு ஏற்ற முடியாத சூழ்நிலை உள்ளது.
ஆனால் வனத்துறையினர் அதிக எடை ஏற்றி வருவதாக கூறி 10-க்கும் மேற்பட்ட கரும்பு லாரிகளை அனுமதிக்க மறுத்து விட்டனர். கடந்த 4 நாட்களாக லாரியில் ஏற்றப்பட்ட கரும்புகள் வெயிலில் வாடி வருகிறது. இதன் காரணமாக எடை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கரும்பு லாரிகளை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் 1000 ஏக்கர் கரும்பு அறுவடை பாதிக்கப்படும். மேலும் வனப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளால் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுளளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மொடக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை சேர்ந்தவர் சின்னியப்பன் (58). இவர் கடந்த சில வருடங்களாக மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காடு வலசு பகுதியை சேர்ந்த பூசப்பகவுண்டர் என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி விஜய் (22) என்ற மகன் உள்ளார். இவர் முள்ளாம் பரப்பில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
தமிழ் வருட பிறப்பையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சின்னியப்பன் மற்றும் அவரது மனைவி மற்றும் மருமகள், குழந்தைகள் அனைவரும் திருவண்ணாமலை அருகே உள்ள கலசபாக்கம் ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் விஜய்மட்டும் இருந்துள்ளார்.
இந்நிலையில் விஜய் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்தில் உள்ள மோட்டார் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா தவிதமாக மின்சாரம் தாக்கி விஜய் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த விஜய்க்கு திருமணமாகி மனைவி, 6 மாத பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு குட்கா கடத்தி வரப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பண்ணாரி சோதனை சாவடியில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தினர். வேனில் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதையடுத்து போலீசார் வேனை சோதனை செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் கொள்ளேகாலில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து குட்கா கடத்தி வந்த ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (32), நம்பியூரை சேர்ந்த சக்திவேல் (27), கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கோபால் (26), சங்கர் (24) ஆகிய 4 வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் குட்கா, வேனையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சத்தியமங்கலம்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சந்தனபாரதி (22). பட்டதாரி வாலிபரான இவர் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காந்தி நகர் பகுதியில் அறை வாடகைக்கு எடுத்து தனது நண்பர்களுடன் தேர்வுக்கு தயாராகி வந்தார்.
நேற்று இரவு 10.30 மணி அளவில் இவர் டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அறையில் இருந்து வெளியே புறப்பட்டார். அவர் ரோட்டை கடந்த போது அந்த வழியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அத்தாணி நோக்கி ஒரு வேன் வந்தது.
திடீரென அந்த வேன் சந்தனபாரதி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான வாலிபர் சந்தனபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து பலியான வாலிபரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






