என் மலர்tooltip icon

    ஈரோடு

    • அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.
    • யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் மான், கரடி, சிறுத்தை, யானைகள், செந்நாய் உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. மேலும் வனப்பகுதி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பர்கூர் வனப்பகுதிகளுக்குள் குட்டைகள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், குடியிருப்பு பகுதிக்குள் செல்வதும் அடிக்கடி நடந்து வருகிறது

    இந்த நிலையில் அந்தியூர் அடுத்த பர்கூர் சாலையில் ஒற்றை யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது. அந்த யானை தொடர்ந்து ரோட்டிலேயே நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது.

    இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மற்ற வாகன ஓட்டிகளும் யானை ரோட்டில் நிற்பதை கண்டு மிகுந்த அச்சத்தோடு செல்ல முடியாமல் அங்கேயே நின்றனர். இதனால் வாகனங்கள் ரோட்டோரம் அணி வகுத்து நின்றன.

    நீண்ட நேரம் அங்கேயே நின்ற யானை அதன் பிறகு அங்கு இருந்து வனப்பகுதிகளுக்குள் சென்றது. அதன் பின்பு வாகன ஓட்டிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர்.
    • தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    பின்னர் 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன், சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து அம்மன் வீதி உலா புறப்பட்டது.

    நேற்று முன்தினம் காலையில் இருந்து சிக்கரசம்பாளையம் கிராமம் முழுவதும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் இரவில் சிக்கரசம்பாளையம் புதூரில் உள்ள மாரியம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை சிக்கரசம்பாளையம் புதூர் பகுதியில் வீதி உலா சென்றுவிட்டு இக்கரை நெகமம் காலனி பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலை அம்மனின் சப்பரம் சென்றடைந்தது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தாரை, தப்பட்டை முழங்க அம்மனுக்கு வரவேற்பு அளித்தனர். மேலும் தேங்காய், பழம், கற்பூரம், ஊதுபத்தி ஆகியவற்றை தட்டில் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

    பின்னர் அங்கிருந்து அம்மனின் சப்பரம் புறப்படும்போது ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சப்பரம் வரும் வழியில் படுத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது சப்பரத்தை தூக்கி வந்தவர்கள் மற்றும் பூசாரி ஆகியோர் ஒவ்வொரு பக்தர்களையும் தாண்டியபடி அம்மனின் சப்பரத்தை தூக்கி சென்றனர்.

    இதையடுத்து பக்தர்கள் பல்வேறு இடங்களில் தேங்காய்களை சிதறு காயாக உடைத்தும் அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மனின் சப்பரம் இரவு வெள்ளியம்பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மனின் சப்பரம் அங்கு தங்க வைக்கப்பட்டது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.08 அடியாக குறைந்து உள்ளது.
    • அணையில் இருந்து 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதார மாக உள்ளது பவானிசாகர் அணை.

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட த்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசன த்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 90.08 அடியாக குறைந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 711 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும் என மொத்தம் அணையில் இருந்து 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

    • வருவாய்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். அலுவலக உதவி யாளர் காலிப்பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

    இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாரணையை வெளியிட வேண்டும்.

    அரசு தரப்பில் நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு, பவானி, கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி ஆகிய தாலூகா அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு குடிமைபொருள் வழங்கல்துறை, கலால் பிரிவு உள்ளிட்ட அலுவ லகங்கள் ஊழியர்கள் முழுமையாக போராட்ட த்தில் பங்கே ற்றதால் அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தது.

    இதேபோல கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களும் பூட்டப்பட்டிருந்தது.

    மாவட்டம் முழுவதும் 445 வருவாய்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

    வருவாய்துறையினர் போராட்டம் காரணமாக பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    • ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அத்தாணி அந்தியூர் ரோடு அமைந்துள்ளது. இந்த ரோடு சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம், கோவை, கேரளா மாநில த்துக்கு செல்லும் சாலையாக இருந்து வருகிறது.

    இதனால் இந்த வழியாக தினமும் கார், வேன், பஸ், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

    மேலும் இந்த வழி அரசு உயர்நிலை பள்ளிக்கும், அரசு பணி மனைக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாகவும் விளங்கி வருகிறது.

    இந்த நிலையில் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே ரோட்டின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வரு கிறார்கள்.

    இந்த வழியாக பள்ளிக் குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள் தட்டுதடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் எதிர்பாராமல் பள்ளம் இருப்பது தெரியாமல் சிலர் வந்து கீழே விழும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

    மேலும் இந்த பள்ளத்தால் விபத்து அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த பகுதியில் ரோட்டின் நடுவே உள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • மீதமுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 3-வது சுற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

    இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:

    விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சவாலாக கோமாரி நோய் அமைகிறது. இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும்.

    கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க 6 மாதத்துக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்தினோம்.

    மாவட்ட அளவில் 3 லட்சத்து 34,750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்துகள் பெறப்பட்டன. கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் 96 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தினோம்.

    இதுவரை 3 லட்சத்து 4,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளோம். அதாவது 90 சதவீத கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள கால்நடை களுக்கு வரும் 31-ந் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    கால்நடை வளர்ப்போர் தவறாமல் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனையை அணுகி கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • அங்கு பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிச்சப்பாளி மேடு என்ற இடத்தில் அனுமதியின்றி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் பிச்சப்பாளி மேடு பகுதிக்கு அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு சிலர் பாறைகளை வெடி வைத்து தகர்க்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இது சம்பந்தமாக அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருமா பாளையத்தைச் சேர்ந்த சின்னப்பன், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் ஆகிய 3 பேர் அனுமதியின்றி பாறைகளை வெடி வைத்து தகர்த்தியது தெரிய வந்தது.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரை கைது செய்தனர் தொடர்ந்து 3 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
    • பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வில்வர்ச்சனையுடன் விழா தொடங்கியது.

    அதை தொடர்ந்து இரவு மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய–பட்டு மலர்களால் அலங்க–ரிக்கப்பட்டு இருந்தது.

    பின்னர் சாமி உற்சவர் சிலை மேளதாளங்களுடன் ஆற்றாங்கறைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளில் வீதி உலாவாக ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்திரோடு வழியாக எடுத்து செல்லப் பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் கோவில் முன்பு அமைக்கப் பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர் மட்டும் குண்டம் இறங்கினர்.

    அதேபோல் தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு புலி ஆட்டத்துடன் விழா தொடங்கியது.

    இக்கோவிலில் மண்டேசாமி, பீரேஸ்வரசாமி, லட்சுமிதேவி, மாரியம்மன், சவுடேஸ்வரி, மசனம்மாள், ராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.

    இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. பின்னர் மேளாதாளங்களுடன் சுவாமிகள் வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது.

    பின்னர் ஆற்றாங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு மேளதாளம் முழங்க தொட்டகாஜணூர் அனைத்து வீதிகளில் திரு வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது.

    அப்போது பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். ஆர்.சி. வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதத்தில் சுவாமிகளை அழைத்து சென்றனர்.

    காலை 9 மணியளவில் சுவாமிகள் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி உள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர்.

    பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. பக்தர்கள் குண்டத்தை தொட்டு கும்பிட்டனர் .

    விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் என பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தாளவாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இளம்பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்தார். திடீரென அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நுழைவாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் மனுவாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    அப்போது அந்த பெண் போலீசாரிடம் கூறியதாவது:

    எனது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். ஈரோடு முனிசிபால் காலனியில் கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அப்போது எனது தோழி மூலம் வைராபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் அறிமுகமானார். அவர் சேல்ஸ்மேன் வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென ஒரு நாள் உன்னை பிடித்துள்ளது. உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அதற்கு நான் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 9 வயதில் மகன் உள்ளான் என்று என் வாழ்க்கையில் நடந்ததை கூறிவிட்டேன். அதன் பிறகு அவர் பெற்றோருடன் வந்து திருமணம் பற்றி பேசினார்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர்கோவிலில் எங்களுக்கு திருமணம் ஆனது. திருமணமானதும் அவரது குடும்பத்துடன் வைராபாளையத்தில் வசித்து வந்தேன்.

    அதன் பின்னர் நானும் எனது கணவரும் லட்சுமி தியேட்டர் அருகே தனியாக வசித்து வருகிறோம். நான் கேட்டரிங் தொடங்க அது சம்பந்தமான பணியில் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் எனது தோழியும், கேட்டரிங் உரிமையாளர் ஒருவர் என 2 பேரும் என் கணவரிடம் என்னை பற்றி தவறாக சொல்லி உள்ளனர். இதனை நம்பி எனது கணவர் என் நடத்தையில் சந்தேகப்பட்டு என்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துகிறார்.

    மேலும் பல நேரங்களில் மது அருந்தி வந்தும் என்னை தாக்குகிறார். இதில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. எனக்கு நியாயம் வேண்டும்.

    எனவே எனது கணவர், தோழி, கேட்டரிங் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும்.
    • ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    ஈரோடு:

    பெருந்துறை அடுத்துள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமும், ஈரோடு ரெயில் நிலையம் மூலமும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

    ஈங்கூர் ரெயில்நிலையத்தில் இருந்து சிப்காட்டிற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் விரிவாக்கம் செய்தால் சரக்கு ரெயில்கள் எளிதில் சிப்காட் வளாகத்திற்குள்ளாகவே வந்து சரக்குகளை ஏற்றி இறக்கி செல்ல முடியும்.

    இக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொழில் துறையினர் மத்திய அரசிடமும், ரெயில்வே நிர்வாகத் திடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் மத்திய அரசும், ரெயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளதால் சிப்காட் வளாகத்தில் இருந்து லாரிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோடு ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அனுப்ப வேண்டிய நிலை இருந்து வருகின்றது.

    இதனால் போக்குவரத்து செலவு மற்றும் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றது.

    இது குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:

    சிப்காட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப் படும் சரக்கு பெட்ட கங்களை ரெயில்களில் ஏற்றி இறக்கி வசதியாக ஈங்கூர் ரெயில் நிலைய த்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளம் அமைத்தால் சிப்காட் வளாகத்திற்குள்ளேயே சரக்கு முனையம் ஏற்படுத்த முடியும்.

    இது தொடர்பாக பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் ரெயில்வே நிர்வாகம் நிறைவேற்ற முன்வராமல் உள்ளது. இதனால் சரக்குகள் மீதான போக்குவரத்து செலவுதான் அதிகரித்து வருகின்றது.

    குறைந்தபட்சம் ஈங்கூர் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து அனைத்து சரக்கு ரெயில் களும் நின்று செல்லும் வகையில் கட்டமைப்பு களை உருவாக்க வேண்டும்.

    இத்திட்டம் நிறைவேற்றப் பட்டால் ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கி யது. கடந்த சில மாதங்களா கவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 வாரமாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 680 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 937 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 9 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வாய்ப்பாடி ஊராட்சி யில் துணை தலைவராக வருபவர் விஜயலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இந்த ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலாளர் சிவராஜ்.

    இவர் துணை தலைவரின் மின்னணு சாவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும் என கூறி பெற்றதாக கூறப்படுகிறது.

    இந்த சாவியை துணை தலைவர் அவரிடம் பலமுறை கேட்டும் திரும்ப தர வில்லை.

    இந்த நிலையில் ஊராட்சி 9-வது நிதி வங்கி கணக்கில் உள்ள தொகையினை துணை தலைவருக்கு தெரியப்படுத்தாமல் ஒப்பந்ததாரருக்கு பண பரிவத்தினை செய்துள்ளார்.

    மேலும் துணை தலைவர் விஜயலட்சுமி மின்னணு சாவியை கேட்டார். ஆனால் துணை தலைவரை அலுவ லத்துக்குள் அனுமதிக்காமல் ஊராட்சி செயலாளர் சிவராஜ் அலுவலகத்தினை பூட்டி விட்டு சென்று விட்டதாகவும் கூறப்படு கிறது.

    இதை கண்டித்து துணை தலைவர் அலுவலகத்தின் முன்பு திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதை பற்றி அறிந்ததும் சென்னிமலை பி.டி.ஓ. குணசேகரன் மற்றும் போலீசார் வாய்ப்பாடி ஊராட்சி அலுவலகம் சென்று போரட்டத்தில் ஈடுபட்ட துணை தலைவர் விஜயலட்சுமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதை தொடர்ந்து துணைத் தலைவர் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார்.

    ×