என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    • சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பார்க் ரோடு, மூலபட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளிமாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் அவர்கள் சுமைதூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாகி கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு முதல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூலியில் இருந்து 41 சதவீத கூலி உயர்வு மற்றும் இரவு எட்டு மணிக்கு மேல் லோடு ஏற்றுவதாக இருந்தால் இரவு சாப்பாடுக்கு 75 ரூபாய் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் நிர்வாக தரப்பினர், தொழிலாளர் தரப்பினர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் அதன் பிறகு கூறியபடி சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

    எனவே ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசினும் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.எஸ்.தென்னரசு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதையன், டி.பி.டி.எஸ். சங்கத்தின் தலைவர் பெரியார் நகர் மனோகரன், சி.ஐ.டி.யு. தலைவர் தங்கவேலு, மத்திய சங்கத்தின் தலைவர் விஜயகுமார், பாட்டாளி தொழிற்சங்க கவுரவ தலைவர் எஸ்.ஆர்.ராஜூ, ஈரோடு மாவட்ட பொது தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் உள்பட அனைத்து சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    6 ஆண்டுகளாக வழங்கப்படாத கூலி உயர்வை உடனடியாக வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    சுமைதூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு அருகே உள்ள வடுகனூரில் கயிறு மில் ஒன்றை கடந்த 5 வருடங்களாக குத்தகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே தங்கி உள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென தேங்காய் நார்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் ஆலை முழுவதும் மளமளவென தீ பிடிக்க தொடங்கி கொளுந்து விட்டு எறிய தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். தீ வேகமாக பரவியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கும், போலீருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புவீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர்.

    எனினும் இந்த தீ விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நார் பொருள்கள், டிராக்டர் எந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் தீ விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

    • யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
    • பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.

    மேலும் தற்போது பலாப்பழம் சீசன் காரணமாக பழங்களை ருசிப்பதற்கு வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்து செல்கின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிடுவதும் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அதனை பார்ப்பதற்கு மனதில் ஒரு வகை சந்தோசம் ஏற்படும் வகையில் தாயிடத்தில் ஒரு குழந்தை எப்படி அன்போடு விளையாடி மகிழ்கிறதோ அதேபோல் குட்டி யானை விளையாடி மகிழ்ந்ததை தாய் யானை பார்த்து ரசிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.

    இதனை வனப்பகுதியில் செல்பவர்கள் படம் பிடித்து தங்கள் செல்போனில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர்.

    • சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர்.
    • தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் முதலியார்பேட்டை 100 அடி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அனிதா நகரில் ஒரே பைக்கில் வந்த 5 பேரை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    மற்ற 3 பேரை மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 2 நாட்டு வெடிகுண்டு மற்றும் ஒரு கத்தி இருந்ததை கண்டு போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தியை பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் உருளையன் பேட்டை கென்னடி நகர் ஜோயல் (வயது24) ராஜா நகர் பத்பநாபன் (25), கோவிந்து சாலை கார்த்திகேயன் என்ற குள்ள கார்த்தி (20) என்பதும், தப்பி சென்றவர்கள் அரியாங்குப்பம் முகிலன் (28) மற்றும் முத்தியால் பேட்டை சங்கர்(28) என்பது தெரியவந்தது.

    பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் தப்பியோடிய முகிலன், அரியாங்குப்பம் ஜிம் பாண்டியன் கொலை வழக்கில் ஜெயிலில் இருந்தபோது, அங்கிருந்த மற்றொரு ரவுடியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முகிலன், தன்னிடம் தகராறு செய்த ரவுடியை தீர்த்து கட்டுவதற்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து பைக்கில் சுற்றி வந்தது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய முகிலன், சங்கர் ஆகிய 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை பசு மாட்டை அடித்து கொன்றது.
    • வனப்பகுதியையொட்டி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரியபுரம் கிராமம் உள்ளது. வனப்பகுதியில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியில் இருந்து வந்துள்ளனர்.

    இதே கிராமத்தை சேர்ந்த மாதேவம்மா என்பவர் தனது வீட்டின் பின்பகுதியில் மாடுகளை வளர்த்து வந்தார். இரவு நேரத்தில் மாட்டுத்தொழுவத்தில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். நேற்று இரவும் வழக்கம் போல் மாடுகளை மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை பசு மாட்டை அடித்து கொன்றது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு மாதேவம்மா மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை மாட்டை கொன்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து பகுதி மக்கள் கூறும்போது,

    இரியபுரம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமம் என்பதால் கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகிறோம். ஆனால் கடந்த சில நாட்களாகவே சிறுத்தை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி எங்கள் கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. நேற்று இரவு கூட ஒரு பசு மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளது.

    இதனால் எங்கள் ஊரை சேர்ந்த பெண்கள் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். மேலும் வனப்பகுதியையொட்டி கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்தில் பெண்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் வர மிளகாய் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 6-வது நாளாக கருத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கீழ்பவானி பாசன பகுதிகளான எலத்தூர் செட்டிபாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், அரசூர், குருமந்தூர், கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கீழ்பவானி பாசனப்பகுதிகள் உள்ளது. இதில் கான்கிரீட் தளம் அமைக்கப்பெற்றால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் குட்டைகளின் தண்ணீர் வரத்து முற்றிலுமாக தடைபடும் என கூறி கடந்த 6 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    நாங்கள் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். முழுவதுமாக மண்ணால் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலில் திடீரென பக்கவாட்டு பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டால் சுமார் 3000 ஏக்கருக்கு மேல் கசிவுநீர் குட்டைகள் மூலம் நடைபெற்று வரும் விவசாய பணிகள் பாதிப்பு ஏற்படும்.

    ஏற்கனவே நம்பியூர் அருகே உள்ள ஆண்டிபாளையம், கடத்தூர் பகுதிகளில் சுமார் 3 கி.மீ அளவிற்கு கான்கிரீட் சுவர் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதே அளவு கிழக்கு பகுதியிலும் அமைக்க தற்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது அமைக்கப்பட்டால் முற்றிலுமாக கசிவுநீர் குட்டைக்கு செல்லும் தண்ணீர் தடைபடும். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் அவர்கள் மேற்கொண்டு கான்கிரீட் தளம் அமைப்பிலேயே குறியாக உள்ளனர்.

    இந்நிலையில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் சார்பில் எ.செட்டிபாளையம் கீழ்பவானி வாய்க்காலில் 19-வது மைல் இடது கரை பகுதியில் தோண்டிய புதிய குழியினை மண் கொண்டு மூடக்கோரியும், அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பதை எதிர்த்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் கோபிசெட்டிபாளையம் பொதுப்பணி துறை (நீர்வள ஆதார துறை) அதிகாரி ஆனந்தராஜ், கோபிசெட்டிபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் நம்பியூர் தாசில்தார் மாலதி ஆகியோர் விவசாயிகளின் முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து வாய்க்காலின் இடது கரையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அதில் தோண்டிய இடத்தில் மண் கொண்டு மூடக்கோரிய விவசாயிகளின் கோரிக்கை மறுத்து அவ்விடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டிய அவசியம் பற்றி நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஆனந்தகுமார் பேசியதை விவசாயிகள் தரப்பில் ஏற்க மறுத்து தோண்டிய இடத்தில் மண் கொண்டு மூடும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறி போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.

    மேற்படி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் காத்திருப்பு போராட்டம் இன்று 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பெண்கள் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் வர மிளகாய் அரைத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் நடைபெறும் என கூறினர். அதேபோல கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை முற்றிலும் நிறுத்தும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

    கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் கடந்த 6 மாதமாக ஈரோடு மாவட்டம் பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் கொடுமுடி அருகே உள்ள சோளக்காளிபாளையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கார்த்திக் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்ட கார்த்திக் உறவினர்கள் திடீரென கார்த்திக் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு தலைமை மருத்துவமனை போலீசார் மறியலில் ஈடுபட்ட உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கார்த்திக் உறவினர்கள் கூறும்போது, கார்த்திக்கின் 2 கை மணிக் கட்டும் அறுக்கப்பட்டு ரத்த காயம் உள்ளது. எனவே அவரது சாவில் மர்மம் உள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று அவர்கள் கலந்து சென்றனர்.

    பின்னர் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • சண்முகம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை திண்று வாந்தி எடுத்துள்ளார்.
    • இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி பெருமா பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (49). இவர் ஸ்பின்னிங் மில் மற்றும் கோழிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர்.

    இந்நிலையில் சண்முகம் விபத்தில் அடிபட்டு கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் இருந்து வந்த சண்முகம் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரையை (சல்பாஸ்) திண்று வாந்தி எடுத்துள்ளார்.

    இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷ மாத்திரை சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி உறவினர்கள் உதவியுடன் சண்முகத்தை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சண்முகம் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சண்முகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
    • பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    பவானி:

    பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடி 1, அமா வாசை தினத்தில் பக்தர்கள் வசதிக்காக மேற் கொள்ளப்படும் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பவானி தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    பவானி தாசில்தார் தியாகராஜ் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் வரும் 17-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடி மாதம் பிறக்கிறது. மேலும் ஆடி அமாவாசை வரும் 17-ந் தேதி மற்றும் அடுத்த ஆகஸ்ட்டு 15-ந் தேதி என ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வருகிறது.

    இதையொட்டி வரும் 17-ந் தேதி பவானி சங்க மேஸ்வரர் கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி பக்கத்து மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுதுறைக்கு வந்து தங்கள் முன்னோர்க ளுக்கு திதி, தர்ப்பணம், எள்ளும், தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள் என எதிர்ப் பார்க்கப்படுகிறது.

    எனவே ஆடி அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பவானி போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து போலீசார் மூலம் போக்கு வரத்து தடை மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் சரி செய்வது, கோவிலுக்கு வரும் பக்தர்க ளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தருவது குறித்து ஆலோசனை வழங்க ப்பட்டது.

    மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை பகுதி, காவிரி ஆறு என பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு எந்த விதமான அசம்பாவிதம் நடக்காமல் தடுப்பது, 108 ஆம்புலன்சு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

    அதேபோல் பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது, மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் என பல்வேறு துறைகளில் மேற்கொள்ள படும் பணிகள் குறித்த ஆலோசனை நடத்தப் பட்டது.

    கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த ஆடி 1 மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது. இதனால் வரும் 17-ந் தேதி ஆடி 1 அன்று கூடுதுறையில் குளிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே கூடுதுறை பகுதியில் பாதுகாப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முடிவு செய்யப் பட்டது.

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 1,731 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணை மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.48 அடியாக உயர்ந்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1,731 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனடியும், கீழ்பவானி பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • உலக வங்கிக்குழு பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள பாசன மேலாண்மையை நவீனமயமாக்கும் வகையில் தமிழக அரசு உலக வங்கி பங்களிப்புடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

    நீர்பாசன விவசாயத்தின் உற்பத்தி திறன் மற்றும் கால நிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துதல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    ஈரோடு மாவட்டத்தில் நீர்வள நிலவளத் திட்டமானது ரூ.6.12 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கீழ்பவானி வடிநிலப்பகுதியில் நீர்வளத்துறையின் மூலம் 8 அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர வேளாண்துறை சார்பில் உழவர் வயல்வெளி பள்ளி, மண்புழு உரம் தயாரித்தல், தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி உற்பத்தி, பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நிலவள நீர்வளத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கிக்குழு பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் குழு உறுப்பினர் சாருலதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, திட்ட நிபுணர்கள், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஆய்வின் போது திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது கீழ்பவானி வடிநில வட்டத்தில் நீர்வளம் நிலவளம் திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப் பட்டுள்ளதாக உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் சாருலதா பாராட்டுகளை தெரிவித்தார்.

    • தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததன் எதிரொலியாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    ஆனால் கடந்த 10 நாட்களாக பெருமளவு தக்காளி வரத்து குறைந்து விட்டதன் காரணமாக ஆயிரம் முதல் 2 ஆயிரம் பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    இதன் எதிரொலியாக தக்காளி சில்லரை விற்பனையில் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஒரு நாள் விலை உயர்வதும், ஒரு நாள் விலை குறைவதுமாக தக்காளி விலை நிலையற்ற தன்மையுடன் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து ரூ.100-க்கு மேல் தக்காளி விற்கப்பட்டு வருகிறது.

    தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மட்டுமே தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 95 வரை விற்கப்படுகிறது. தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனையடுத்து தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன்படி தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி சென்னை, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை தொடங்கியது.

    ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு ஒரு கிலோ தக்காளி வீதம் டோக்கன் அடிப்படையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1100-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கும் மலிவு விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 60-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று இது தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது.

    இதன் முடிவில் எந்தெந்த கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை தொடங்கப்படும் என தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×