என் மலர்
திண்டுக்கல்
- ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.3-க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பூசணிக்காய்களை செடியிேலயே பறிக்காமல் விட்டுவிடும் அவலநிலை உள்ளது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.3-க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பறிப்பு கூலிக்குகூட பணம் கிடைக்காததால் செடியிலேயே பூசணிக்காய்களை விட்டுவிடுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாட்டுபூசணிக்காய் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய விலை கிடைக்கவில்ைல. அவ்வாறு கொண்டுசெல்லப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குறைவான விலையிலேயே வாங்குகின்றனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் பூசணிக்காய்களை செடியிேலயே பறிக்காமல் விட்டுவிடும் அவலநிலை உள்ளது. எனவே அரசு இதற்கு தீர்வுகாணவேண்டும் என்றனர்.
- பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் தலைமையில் நடந்தது.
- பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடந்தது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பண்ணைக்காடு பேரூராட்சி கூட்டம் தலைவர் முருகேஸ்வரி மணிகண்டன் தலைமையில் நடந்தது. உள்பக்கமாக பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர்கள் வரும்போது மட்டும் கதவு திறக்கப்பட்டது. அவர்கள் உள்ளே சென்றதும் மீண்டும் கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு தொடங்கிய பேரூராட்சி மன்ற கூட்டம் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியவில்லை.
மேலும் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி செலுத்த வந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் பூட்டியிருந்ததை பார்த்து விட்டு திரும்பி சென்றனர். பூட்டிய அறைக்குள் பேரூராட்சி கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என பொதுமக்கள் கேள்வி எழுப்பிச்சென்றனர்.
- திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
- 120 மாணவர்களுக்கு மட்டும் ரூ.4 கோடி அளவிற்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடனுதவிகளை வழங்கி பேசியதாவது,
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு வரும் விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
கடன் இல்லை என்ற நிலையில் தொழில் ஆரம்பிக்கவோ, கல்விக்காகவே இருக்ககூடாது. ஒருநாட்டில் தொழில் அதிகரித்தால்தான் வளர்ச்சி அதிகரிக்கும். கடந்த ஒருமாத காலத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் 258 நபர்களுக்கு ரூ.12.68 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் 1500 பேர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. மாநிலத்திலேயே திண்டுக்கல் மாவட்டம் அதிககடன் வழங்கியதற்காக பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளது. கல்விக்கடன் மாணவர்களை பொறுத்தவரை கஷ்டப்படாமல் படிப்பதற்காகவும், மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும் அதை பெறுவதற்கான அணுகுமுறைதான். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த முகாமிற்கு 251 மாணவ-மாணவிகள் கடன் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர்.
இதில் 120 மாணவர்களுக்கு மட்டும் ரூ.4 கோடி அளவிற்கு கடன் உதவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கூடுதல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் அனைவரும் முன்னோடி வங்கி மேலாளரை அணுகி பயன்பெறலாம் என்றார்.
- குடிபோதையில் வழிமறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
- போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள தருமத்துப்பட்டியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவர் தனது அண்ணன் பாலாஜியுடன் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை விற்பனை செய்ய கொண்டு வந்தார். அப்போது அதே பகுதிைய சேர்ந்த 2 பேர் குடிபோதையில் அவர்களை மறித்து செல்போனை பறித்துக்கொண்டு மதுகுடிக்க பணம் கேட்டனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை பிடித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் அவர்கள் கோணப்பட்டி தெற்குதெருவை சேர்ந்த ரமேஷ்(30), மருதாணிக்குளம் பகுதிைய சேர்ந்த விக்கிபாண்டி(35) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதேபோல் அஞ்சுகுழிப்பட்டி வடக்குதெருவை சேர்ந்த மருதை மனைவி லட்சுமி(47). இவரிடம் அதேபகுதிைய சேர்ந்த முருகேசன் மகன் அழகுராஜா(27) குடிபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழகுராஜாவை கைது செய்தனர்.
- ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 120 நாட்களில் ரூ.2.25 லட்சம் வட்டியுடன் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூ.89லட்சம் மோசடி செய்யப்பட்டது.
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டி என்றாலும் பணத்திற்கான பாதுகாப்பு இருக்கும். எனவே அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
வடமதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு நண்பர் மனோஜ்குமார் மூலம் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்த சையது பாரூக் என்பவர் அறிமுகமானார்.
இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்தி, மனோஜ்குமார், அகமதுபயாஸ், ஜாகீர் ஆகியோர் தங்களது நிறுவனத்தில் ரூ.1லட்சம் முதலீடு செய்தால் 120 நாட்களில் ரூ.2.25 லட்சம் வட்டியுடன் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி அவருக்கு தெரிந்த 50-க்கும் மேற்பட்ட நபர்களிடம் முதலீடு ெசய்ய அறிவுறுத்தினார். அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி முதல் ரூ.89 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்துள்ளார். ஆனால் இவர்கள் வட்டியுடன் பணத்தை தரவில்லை. இதுகுறித்து பலமுறை கேட்டபோதும் முறையான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து வேடசந்தூர் கோர்ட்டில் வழக்குதொடரப்பட்டது. நீதிபதி உத்தரவுப்படி வடமதுைர போலீசார் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முறையாக பதிவு செய்யாத பைனான்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்யக்கூடாது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் போலீசாரும் இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்களிடம் மோசடி என்பது தொடர்ந்து கொண்டே வருகிறது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டி என்றாலும் பணத்திற்கான பாதுகாப்பு இருக்கும். எனவே அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்யவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டிையச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
பின்னர் அவரை தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் அவரது பெற்றோருக்கு தெரியவரவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தனர்.
குழந்தை பாதுகாப்பு அதிகாரி ஷியாமளா இது குறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் வனிதா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- கனமழையால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
- புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே புல்லாவெளியில் கடந்த மாதம் புதிதாக தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இந்த நிலையில் பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. இதனால் புல்லாவெளி பகுதியில் உள்ள சாலை தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்தது.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமம் ஏற்பட்டது. எனவே சேதமடைந்த பகுதியில் புதிதாக தடுப்பு சுவர் அமைத்து சிமெண்ட் குழாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப்பணியை ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாரத், சாலை ஆய்வாளர் மஞ்சுநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- கணவாய்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வத்தலகுண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சி தங்கமலை முருகன் கோவில் அடிவாரத்தில் கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பஞ்சாயத்துக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஒரு பயனாளிக்கு 3 சென்ட் வீதம் 4 பேருக்கு 12 சென்ட் இடம் வழங்கி பள்ளிவாசல் தெரு அபுதாஹிர், சிக்கந்தர் அம்மாள் ஆகிய இருவருக்கு பசுமை வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மேலும் பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவை தெருவை சேர்ந்த முத்துஇருளன், எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மேனகா ஆகிய 2 பேருக்கு இடம் ஒதுக்கியும் வீடு வழங்கப்படவில்லை. மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் தினேஷ் குமார் மாவட்டம் முழுவதும் அரசு தரப்பில் வழங்கும் பணிகளை தொய்வின்றி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.
எனவே இதேபோல் விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி காமிராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
- எல்ைலப்பகுதியில் சி.சி.டி.வி காமிராக்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு சவால்களை போலீசாருக்கு ஏற்படுத்தும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் நுழைவாயில் பகுதியாக வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனைச்சாவடி உள்ளது.
இந்தப் பகுதியில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு நகராட்சி மூலமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இங்கு திருடப்பட்டு வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்டு செல்லும் வாகனங்கள் அப்பகுதியின் வழியே செல்லும் போது பதிவுகள் இல்லாததால் திருடர்கள் எளிதாக தப்பிச்செல்லும் நிைல ஏற்பட்டுள்ளது.
காமிராக்கள் செயல்பாட்டில் இருக்கும் போதே குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலை இருக்கும் சூழலில் காமிராக்களும் செயல்பாட்டில் இல்லாததால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் தங்கி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க நகரின் எல்ைலப்பகுதியில் சி.சி.டி.வி காமிராக்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு சவால்களை போலீசாருக்கு ஏற்படுத்தும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் மூதாட்டி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகில் உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்து மனைவி சபரியம்மாள்(72). இவர் தனது வீட்டிலிருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக அம்பாத்துரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக சென்ற ரெயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் ராஜேஸ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
- சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப்பட்டியில் வசித்து வந்தார்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு சஞ்சீவி (10), தீனா (9), ஹர்ஷன் (8) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
ராஜசேகர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் கோவித்துக் கொண்டு அரண்மனையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு தேவி வந்து விட்டார். அங்கு வந்த ராஜசேகர் தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுக்கவே மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர் தனது மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ராஜசேகரை அவரது உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடி வந்தனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்கா தேவி உத்தரவின் பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர்.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று இரவு திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் ராஜசேகர் பதுங்கி இருந்தது தெரிய வரவே போலீசார் அங்கு சென்று அவரையும் அவருடன் இருந்த கள்ளக்காதலியையும் கைது செய்தனர். பின்னர் போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
எனக்கும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜா தேவி (29) என்பவருக்கும் கடந்த சில வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சரோஜா தேவியின் கணவர் இறந்து விட்டதால் அவரது 2 குழந்தைகளுடன் தனியாக கீழ்மாத்தினிப் பட்டியில் வசித்து வந்தார். இதனால் நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம். இந்த விபரம் எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனை வைத்து அவர் தினேஷ் என்பவருடன் பழக்கத்தில் இருந்தார்.
இதனை நான் தட்டிக்கேட்டதால் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தினேசுடன் தேவி பேசியது மற்றும் அவரது புகைப்படங்கள் குறித்த ஆதாரத்தைக் காட்டி கேட்ட போது, என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.
நீ கள்ளத்தொடர்பில் இருக்கும் போது நான் வேறு வாலிபருடன் பேசக்கூடாதா எனக் கேட்டார். இதனால் எங்களுக்குள் தகராறு அதிகமானது. எனவே அவரை கத்தியால் கழுத்தை அறுத்து வீட்டைப் பூட்டி விட்டு சென்று விட்டேன். அப்போது அங்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை கச்சேரி நடந்ததால் நாங்கள் சண்டை போட்டது வெளியே தெரியவில்லை. அதன் பிறகு எனது நண்பர்கள் சொல்லித்தான் தேவி இறந்த விபரம் எனக்கு தெரிய வந்தது. இதனால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் எனது 3 குழந்தைகளையும் என் தாயிடம் விட்டு விட்டு சென்று விட்டேன். அதன் பிறகு என் கள்ளக்காதலி சரோஜா தேவியுடன் திருச்சிக்கு வந்து விட்டேன்.
என் கையில் பணம் இல்லாததால் எனது நண்பருக்கு போன் செய்து கூகுல்பே மூலம் பணம் அனுப்புமாறு கேட்டேன். அவரும் பணம் அனுப்பி விட்டு போலீசார் தேடுவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.
நான் செல்போனை ஆன் செய்து பேசியதால் போலீசார் எனது இருப்பிடத்தை அறிந்து என்னை பிடித்து விட்டனர். நான் கொலை செய்த குற்ற உணர்ச்சி இருந்ததால் இன்று காலை சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வரலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்காக பஸ்சில் ஏறி காத்திருந்தபோது போலீசார் என்னையும், சரோஜாதேவியையும் பிடித்து விட்டனர் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் ராஜசேகர் மற்றும் சரோஜா தேவியை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜசேகர் திண்டுக்கல் சிறையிலும், சரோஜா தேவி மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்தனர்.
- காயமடைந்த பலர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வடமதுரை:
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு விரைவு பஸ் இன்று காலை திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த டிரைவர் தியாகராஜன் என்பவர் பஸ்சை ஓட்டிவந்தார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடுப்பட்டி அருகே வந்தபோது திடீரென சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் பஸ் மோதி சுமார் 1 கி.மீ தூரம் இடித்து சென்றது.
இதனால் பயங்கர சத்தம் ஏற்படவே பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர். இதனைதொடர்ந்து பஸ் நிறுத்தப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து கொண்டிருந்தனர். மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கி சுமார் 15 பேர் காயமடைந்தனர்.
இதைபார்த்ததும் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த சிவசங்கரன்(31), மயிலாப்பூரை சேர்ந்த கபாலி(40), மாரிமுத்து (51), முருகன்(46), ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி(45), மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி, சென்னை அசனாபுரத்தை சேர்ந்த பாட்சா(21), கொடுங்கயூரை சேர்ந்த ஜெகநாதன்(65), சையதுஅப்ரிடி (19), வடபழனியை சேர்ந்த தியாகராஜன், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருகன்(58) ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிரைவர் உறக்கத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர். காயமடைந்த பலர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.






