என் மலர்
திண்டுக்கல்
- ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- வாகன சோதனையில் கஞ்சா கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஐ.ஜி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது தலைமையின்கீழ் போலீசார் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதியில் வாகனதணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் ஒரு கிலோ கஞ்சா காரில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. அதனைபறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த சத்திரப்பட்டியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன்(47), மூலச்சத்திரத்தை சேர்ந்த ஆர்யராஜ்(27) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ரோட்டில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர். தேனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சாவை கடத்திவந்த பொன்மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார்(30), சாணார்பட்டியை சேர்ந்த காதர்மைதீன்(42), மூலச்சத்திரத்தை சேர்ந்த அஜித்குமார்(47), பேகம்பூரை சேர்ந்த ஹக்கீம்(27) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது.
- மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ளது சூழல் சுற்றுலா மையம்.இந்த சூழல் சுற்றுலா மையத்திற்குள் மன்னவனூர் பகுதி விவசாயிகளின் விவசாய நீர் ஆதாரமாக விளங்கும் எழும்பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அடிக்கடி அப்பகுதி விவசாயிகளுக்கு வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் ஏரியை தூர்வாரி பாசன வாய்க்கால்களை முறைப்படுத்துவதற்காக சுமார் ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில் இப்பணி துவங்க உள்ள நிலையில் கடந்த சில மாதங்களில் அதீத கனமழையால் இந்த ஏரியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் கசியும் நிலை உருவானது.இதனை சீர் செய்யச் சென்ற விவசாயிகளுக்கு ஒரு சில நேரங்களில் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதேபோல் நேற்று அந்த ஏரியின் பாசன வாய்க்கால்கள் மற்றும் கரைகளை சீரமைக்க சென்ற விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக விவசாயிகள் சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டு விவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக சம்பவத்தன்று மாலை வனத்துறை ரேஞ்சர் நாதன் தலைமையில் மன்னவனூர் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் விவசாய பொதுமக்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளுக்கும் வனத்துறையினருக்கும் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்வத்துடன் மன்னவனூர் விவசாயிகள் எழும்பள்ளம் ஏரியை விரைந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பாசன வாய்க்கால்கள் மற்றும் ஏரிக்கரை பகுதிகளை விவசாயிகள் சீரமைத்தனர்.
- சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு சூர்யா எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
தென்காசி சக்தி நகரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது மகன் சூர்யா (வயது 30). இவர் பிலிம் டெக்னாலஜி படித்துள்ளார். அப்போது இவருக்கும் சென்னை கொட்டிவாக்கம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பிரதாஸ் மகள் சுவேதா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் லிவிங்டூகெதரில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சூர்யா கொடைக்கானலுக்கு வந்து சொந்தமாக நிலம் வாங்கி காட்டேஜ் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனிடையே அவ்வப்போது சுவதா மீண்டும் சூர்யாவுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். அதன் பிறகு இவர்களுக்குள் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கொடைக்கானல் கல்லுக்குழி மலோனிகுடில் என்ற இடத்தில் கடந்த 9 மாதங்களாக இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.
சூர்யாவுக்கு இசை கச்சேரிகள் நடத்துவதில் ஆர்வம் இருந்து வந்ததாக தெரிகிறது. அடிக்கடி வெளியே சென்று விட்டு மீண்டும் கல்லுக்குழி பகுதிக்கு வந்துள்ளார். நேற்று சுவேதாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் சூர்யாவை மாடியில் இருந்து சுவேதா கீழே தள்ளியதாக தெரிகிறது. பின்னர் சுவேதா தனது நண்பர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் வந்து பார்த்த போது சூர்யா பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதை பார்த்ததும் அவரை கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார். இதனையடுத்து சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூர்யாவின் தந்தை அய்யாத்துரை கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் சூர்யாவை அடித்து கொலை செய்துள்ளனர். அவர் படியில் விழுந்து இறந்ததாக கூறுவதை ஏற்க முடியாது. அவர் உடலில் பல்வேறு பாகங்களில் காயம் உள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
சூர்யாவின் செல்போன் மற்றும் சுவேதாவின் செல்போன்களை வாங்கி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சூர்யாவின் அறையில் வேறு ஏதேனும் பொருட்கள் சந்தேகப்படும்படியாக உள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சுவேதா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு சூர்யா எவ்வாறு இறந்தார்? என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
- அஜாக்கிரதையாக இருந்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவரது மனைவி துர்காதேவி (26). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த துர்காதேவி நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் உள்ள உறவினர் பாலு தோட்டத்து வீட்டில் குழந்தையுடன் தங்கினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுத்தையா, ரபீக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் துர்காதேவிக்கும் தோப்புபட்டியை சேர்ந்த அஜய் (21) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது. சம்பவத்தன்று அஜய் மற்றும் துர்காதேவி உல்லாசமாக இருப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அஜாக்கிரதையாக இருந்த தாய் துர்காதேவி மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜய் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என கோஷம் எழுப்பினர்
- எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் பகுதியில் சூழல் சுற்றுலா மையத்திற்குள் அமைந்துள்ளது எழும்பள்ளம் ஏரி. இந்த ஏரியை இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல வருடங்களாக பராமரித்து வருகின்றனர்.
ஏரியை சீரமைக்க வனத்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியின் வாய்க்காலை சீரமைக்க சூழல் சுற்றுலா மையத்திற்குள் விவசாயிகள் நுழைய முயன்றனர். ஆனால் வனத்துறையினர் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.
மேலும் பணியிலிருந்த அதிகாரி விவசாயிகளை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டி சூழல் சுற்றுலா மையத்தை முற்றுகையிட்டனர். மன்னவனூர் விவசாயிகளின் நீராதாரமாக உள்ள எழும்பள்ளம் ஏரியை சீரமைக்கும் உரிமையை தங்களுக்கு வழங்க வேண்டும். அல்லது வனத்துறையினர் ஏரியை சீரமைத்து தர வேண்டும் என சூழல் சுற்றுலா மையம் முன்பு குவிந்த விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாவட்ட வன அலுவலரை சந்தித்து வனஅதிகாரி தங்களை தரக்குறைவாக பேசியது குறித்தும், எழும்பள்ளம் ஏரியை சீரமைப்பதில் உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரவும் முறையிட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
- இதனால் மக்களின் அலைச்சல் குறைவதோடு வரி இனங்களும் விரைவில் வசூலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட வரி இனங்களை முறையாக செலுத்தும்படி தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சிலர் வரி பாக்கி செலுத்தவில்லை. மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத சூழல் இருந்து வருகிறது.
இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வரி வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் மக்களின் அலைச்சல் குறைவதோடு வரி இனங்களும் விரைவில் வசூலாவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தான் வேலை செய்யும் இடத்திற்கு தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
- அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
செம்பட்டி:
செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது25) . கூலி தொழிலாளி.
இவரது மனைவி பவித்ரா (21) குழந்தைகள் கனிஷ்காஸ்ரீ (4) ஹர்ஷிதாஸ்ரீ (1½). பவித்ரா நரசிங்கபுரம் அருகே சித்தைன்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பவித்ரா உட்பட 7 பெண்கள் அங்கு தேங்காயில் பருப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா தனது 2 பெண் குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதாஸ்ரீ குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சூர்யா மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.
- சமீபகாலமாக ஒரு இளம்பெண் சூர்யாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.
கொடைக்கானல்:
தென்காசியை சேர்ந்தவர் சூர்யா (வயது 28). இவர் கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இசையில் ஆர்வம் கொண்ட இவர் அதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் அடிக்கடி தனது அறையை பூட்டிவிட்டு அதிகாலையிலேயே சென்றுவிடுவார். இரவு அல்லது மறுநாள்தான் மீண்டும் தனது அறைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை அவரது அறை பூட்டிக்கிடந்தது. அருகில் இருந்த ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் சூர்யா மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சூர்யா மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். சமீபகாலமாக ஒரு இளம்பெண் சூர்யாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சூர்யா சென்று வந்துள்ளார். எனவே இச்சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர சூர்யாவின் செல்போனில் அவருக்கு அடிக்கடி போன் செய்து பேசிய மேலும் 2 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூர்யாவின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகுதான் பிரேத பரிசோதனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர அவர் தங்கியிருந்த அறையில் உள்ள பொருட்களையும் போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் செல்போனில் வேறு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அவரது அறைக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து விடுதி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொடைக்கானல் விடுதிக்கு அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பழனி:
பழனி அருகே உள்ள கொழுமம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் இன்று காலை தனது வேலை நிமித்தமாக காரில் பழனி நோக்கி வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல் சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே வந்தபோது திடீரென அவரது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதைபார்த்ததும் சாலையில் சென்றவர்கள் சத்தம் போட்டு அவருக்கு தெரிவித்தனர். உடனே காரை நிறுத்தி கோவிந்தராஜ் சோதனை செய்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்து வந்து கார்மீது ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இருந்தபோதும் இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல் திருமண மண்டபம் அருகே நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.
- குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் இருந்து எழில் நகர் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இங்கு சாலையின் ஓரங்களில் குப்பை, இறைச்சிக் கழிவுகள், தேங்காய், நுங்கு மட்டைகள், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை கொட்டுகின்றனர்.
இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் மாலை நேரங்களில் குடியிருப்புகளில் கொசுக்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது.
இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் குப்பைகளை தீ வைத்து எரித்து விடுவதால் குடியிருப்புகளில் கரும்புகைமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள், சுவாசக் கோளாறில் உள்ளவர்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டப்படும் இடத்தின் அருகிலேயே மின் கம்பம் உள்ளது. எதிர்பாராத விதமாக மின் கம்பியில் தீ விபத்து ஏற்பட்டால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
ஆகவே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாக குப்பைகளில் தீ வைத்து எரிப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருமணத்திற்கு மறுத்த காதலியின் அண்ணனை வெட்டி கொன்றதாக கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- போலீசார் அவரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஜோதி(27). வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இவர் தனது தங்கை திருமணத்திற்காக சொந்த ஊர் வந்தார். அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது ஜோதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த பிரபாகரன்(30) என்பவர் ஜோதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பிரபாகரனை மடக்கிபிடித்து கைது செய்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
ஜோதியின் தங்கையும், தேங்காய் வெட்டும் தொழிலாளியான நானும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தோம். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைதொடர்ந்து ஜோதி தனது தங்கைக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வருகிற 5-ந்தேதி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த ஜோதியை சந்தித்து பேசினேன். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்து வெட்டி கொலை செய்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவத்தால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் இருவீட்டாரும் கடும் சோகத்தில் உள்ளனர்.
- கோடை காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
- கொல்கத்தாவில் இருந்து சுமார் 5000 டேலியாரக நாற்றுகளை குழிதட்டுகளில் வைத்து பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கவரும் விதமாக கோடைவிழா மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கொரோனா ஊரடங்குக்கு பிறகு மலர்கண்காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மே மாதத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் பூக்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. மேலும் உலக அதிசயம், தலைவர்களின் படங்கள், வண்ண ஓவியங்கள், மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்களை வண்ணமலர்களை கொண்டு வடிவமைத்து வருகின்றனர்.
இதற்காக தற்போதே நாற்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனை தோட்டக்கலைத்துறையினர் நட்டு பராமரித்து வருகின்றனர்.
கொல்கத்தாவில் இருந்து சுமார் 5000 டேலியாரக நாற்றுகளை குழிதட்டுகளில் வைத்து பராமரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 30 நாட்களில் வீரிய நாற்றாக மாறியபின்னர் அங்கிருந்து பிரித்தெடுத்து படுகைகளில் நடவு செய்யும் பணி நடைபெறும். அதனைெதாடர்ந்து ேகாடைசீசனில் செடிகளில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும். மேலும் பல செடிகளை நடவு செய்ய முடிவு செய்துள்ளதாக பூங்கா அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.






