என் மலர்
திண்டுக்கல்
- திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
- நாளை திருக்கார்த்திகை நாள் என்பதால் கோவில்களுக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவதால் பழனி முருகன் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
ரெயில் நிலைய நடைமேடை, பார்சல் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளிலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து திண்டுக்கல் வழியாக கடந்து செல்லும் ரெயில்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருவதோடு அவர்கள் கொண்டு செல்லும் உடமைகளையும் பரிசோதனை செய்கின்றனர்.
சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தென்பட்டால் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் மசூதிகள் முன்பும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை திருக்கார்த்திகை நாள் என்பதால் கோவில்களுக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள்.
எனவே முக்கிய கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்ப டுகின்றனர். மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் உள்ளனரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தற்போது தொடர் மழையினால் சுற்றுலா பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இருந்தபோதும் அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர் மழை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் மாடுகள் விற்பனை குறைந்த அளவே நடைபெற்றது.
- விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி கால்நடை சந்தை தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு கரூர், காங்கேயம், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனை செய்யும் மாடுகள் அதிக அளவில் கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக கேரளாவில் இறைச்சிக்காக இங்கிருந்து மாடுகள் வாங்கி செல்லப்படுவது வழக்கம். தற்போது தொடர் மழை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் மாடுகள் விற்பனை குறைந்த அளவே நடைபெற்றது. எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறாததாலும் மாடுகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து பால்கடை பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி வெள்ளையன் கூறுகையில், கால்நடை சந்தைக்கு ஒவ்வொரு வாரமும் 700 முதல் 900 மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும்.
தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற்ற கால்நடை சந்தைக்கு அதிக அளவில் மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படவில்லை. சுமார் 200க்கும் குறைவான மாடுகளே கொண்டுவரப்பட்டன.
இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் மாடுகளை வாங்க வியாபாரிகள் வரவில்லை. மேலும் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மாடுகளை விற்பனை செய்ய முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர் என்றார்.
- கார்த்திகை மாதம் மண்டல பூஜையின் போது யாழி பூஜை நடத்தப்படும். அதன்படி நேற்று இரவு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள தொட்டணம்பட்டியில் அய்யப்பன்கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மண்டல பூஜையின் போது யாழி பூஜை நடத்தப்படும். அதன்படி நேற்று இரவு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அங்கு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு 7 சிறுமிகள் சப்த கன்னிகளாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் எரியோடு, நல்லமனார்கோட்டை, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான அய்யப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பிரையண்ட் பூங்காவில் பேர்ட் ஆப் பாரடைஸ் மலர் பூத்துக்குலுங்குகிறது
- இந்த வகை மலர்கள் பறவை போல் காணப்படுவதால் பேர்ட் ஆப் பேரடைஸ் என்று அழைக்கப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை கவரும் விதமாக பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக கோடை விழா மலர் கண்காட்சிக்காக நவம்பர், டிசம்பர் மாதங்களில் மலர் செடிகள் நடப்பட்டு. இதில் ஏப்ரல், மே மாதத்தில் பூக்கள் பூத்துக்குலுங்கும். தற்போது பிரையண்ட் பூங்காவில் பேர்ட் ஆப் பாரடைஸ் மலர் பூத்துக்குலுங்குகிறது.
இந்த மலர் செடிகள் பூங்காக்கள் மட்டுமின்றி கொடைக்கானல் மலைச்சாலை ஓரங்களில் கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. சுற்றுலா செல்லும் பயணிகள் இதனை கண்டு ரசித்து வருகின்றனர்.
மலைப்பகுதியில் காணப்படும் இந்த வகை மலர்கள் பறவை போல் காணப்படுவதால் பேர்ட் ஆப் பேரடைஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வகை மலர்கள் மலை ஸ்தலங்களில் மட்டுமே பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விபத்தில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்து டிரைவர் படுகாயமடைந்தார்.
- போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம்:
தேனியில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. வீரகுமார் என்பவர் பஸ்சை ஓட்டி வந்தார். ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும் டிரைவர் சுரேஷ் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆதரவு இன்றி சுற்றி திரிந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
- ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டால் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. அறிவுரையின் படி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யகலா மற்றும் போலீசார் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம், குழந்தை வேலப்பர் கோவில், நாகனம்பட்டி, செக்போஸ்ட், மூலச்சத்திரம், கேதையுறும்பு உள்ளிட்ட பகுதியில் ஆதரவு இன்றி சுற்றி திரிந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.
இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நபர்கள் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டால் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
- தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
- பெரும்பாலானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிளவனூர், நடுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அய்யலூரில் தக்காளிக்கென 5 மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன.
திருச்சி, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் கொடி தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர். மேலும் பருவமழை கைகொடுத்த நிலையில் ஆர்வமாக தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.
இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. தற்போது 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் பெரும்பா லானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த கிட்டங்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.30 கோடி மதிப்பில் 175 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். புதிய மார்க்கெட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிள க்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் காந்திமார்க்கெட்டின் புதிய காய்கனி வளாகம் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு ரூ.30 கோடி மதிப்பில் 175 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார்.
புதிய மார்க்கெட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிள க்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் காந்திமார்க்கெ ட் தலைவர் தங்கவேல், கவுரவத்தலைவர் வையாபுரி, பொருளாளர் சீனிவாசன், துணை ச்செயலாளர் கருப்புச்சாமி, செயலாளர் ராசியப்பன், துணைத்தலைவர் உதயம் ராமசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் வேலுச்சாமி எம்.பி., எஸ்.பி பாஸ்கரன், திண்டுக்கல் ஸ்டேட் பேங்க் மண்டல மேலாளர் மதன், பழனி கிளை மேலாளர் பிரிஸ்கில்லாள், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், காந்தி மார்க்கெட் ஆலோசனை கமிட்டி ஆறுமுகம், ஒப்பந்ததாரர் சரவணன், அருள்முருகன் காய்கனி கமிஷன் மண்டி உரிமையாளர் ஜெயபாலன், ஏ.கே.எம். வெஜிடபிள் உரிமையாளர்கள் கண்ணன், முருகவேல் உள்பட பலர் கலந்து கெண்டனர்.
வியாபாரிகள், கணக்கா ளர்கள், தொழிலாளர்கள், சங்கப்பணியாளர்கள், காந்திகாய்கனி மார்க்கெட் கமிசன், ஏஜெண்ட் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- மாவட்டத்தில் 7 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது.
- அரைமணிநேரம் தமிழ்மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும், அடுத்த அரைமணிநேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் தகுதியுடைய நபர்களுக்கு எழுத்து திறனறிவுத்தேர்வு இன்று நடைபெற்றது.
மாவட்டத்தில் 7 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிவரை நடைபெற்றது. தேர்வில் அரைமணிநேரம் தமிழ்மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும், அடுத்த அரைமணிநேரம் ஆங்கில மொழிக்கான எழுத்து திறனறிவுத்தேர்வும் நடைபெற்றது.
இணையவழி மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனை பதிவிறக்கம் செய்து கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களில் முதுநிலைப்படி பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நபர்களுக்கும், அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு மையத்தில் கருப்பு பால்பாய்ண்ட் பேனா மட்டும் ஹால்டிக்கெட்டுடன் அனுமதிக்கப்பட்டது. அலைபேசி, புத்தகங்கள், மின்னணு சாதனங்கள் உள்பட எந்த பொருட்களும் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வாளர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் விதிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டு சோதனைக்கு பின்னர் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
- பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. தீபத்திருநாளான மகாதீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது.
- 6-ந்தேதி மட்டும் தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் இணைஆணையர் தெரிவித்துள்ளார்.
பழனி:
தமிழ்க்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். பழனியில் எப்போதுமே பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
பழனி முருகன் கோவில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. தீபத்திருநாளான மகாதீபம் 6-ந்தேதி ஏற்றப்படுகிறது. எனவே அன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். எனவே பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையை ஒருவழிப்பாதையாக பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கு சென்று படிப்பாதை வழியாக கீழே இறங்க வேண்டும். மேலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நினைவரங்கம் தற்காலிகமாக 2 மணிக்கு அடைக்கப்படும். மாலை 6 மணிக்குமேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கோவிலுக்கு வின்ச், ரோப்கார் ஆகியவை வழக்கம்போல் செயல்படும்.
6-ந்தேதி மட்டும் தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என கோவில் இணைஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
- சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
- கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பழனி:
பழனியில் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு கழிவுகளை சாலையோரம் வீசி வருகின்றனர்.
பக்தர்களை குறிவைத்து அடிவாரம் , கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் முளைத்து வருகின்றன. இவர்களும் பல்வேறு கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல்வேறு கோவில்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் பழனியில் அதுபோன்ற எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் பல்வேறு குப்பைகளை சாைலயோரம் வீசிச்செல்கின்றனர். இதனை கடந்து செல்லும் நபர்கள் முகம்சுழித்து செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே நகராட்சி மற்றும் தேவஸ்தானம் சார்பில் போதிய ஊழியர்களை நியமித்து குப்பைகளை அகற்றவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குப்பை தொட்டிக்குள் ஒரு கட்டைப்பையில் இறந்த பெண் சிசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த பெண்குழந்தை இறந்தே பிறந்ததால் அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மனமில்லாமல் குப்பையில் வீசியதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்ேதாறும் 10 முதல் 20 குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில் இன்று காலை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு அருகே இருந்த குப்பை தொட்டியில் தூய்மை பணியாளர்கள் குப்பையை எடுக்க வந்தனர்.
அப்போது குப்பை தொட்டிக்குள் ஒரு கட்டைப்பையில் இறந்த பெண் சிசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மகப்பேறு பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் நத்தம் அருகே சின்னமலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்-லட்சுமி தம்பதிக்கு பிறந்த குழந்தையை அவர்கள் குப்பையில் வீசிச்சென்றது தெரியவந்தது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த பெண்குழந்தை இறந்தே பிறந்ததால் அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மனமில்லாமல் குப்பையில் வீசியதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து குழந்தையின் உடலை ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த தம்பதியிடம் ஒப்படைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






