என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர்(48). இவர் சித்தையன்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின்வழித்தட ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் செம்பட்டி அடுத்த நரசிங்கபுரம் அரசு நெல்கொள்முதல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் மின்பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் மின்கம்பத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட ராமர் படுகாயமடைந்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக சித்தையன்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து செம்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான இச்சம்பவம் குறித்து சித்தையன்கோட்டை உதவி மின்பொறியாளர் கிருஷ்ணஜெயந்தி செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.
    • எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி.நகரில் ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக மேனகா(32) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேபகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகரான அமீர்பாட்சா ஏராளமான ரேசன் கார்டுகளை கையில் வைத்துக்கொண்டு தனக்கு பொருட்கள் வழங்குமாறு கேட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மேனகா உங்கள் கார்டுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். மற்றவர்கள் கார்டுகளை மொத்தமாக எதற்காக கொண்டு வந்தீர்கள் என கேட்டார்.

    என்னிடமே நியாயம் கேட்கிறாயா என அமீர்பாட்சா அந்த விற்பனையாளரை மிரட்டி நான் பல ஆண்டுகளாகவே இதேபோல மொத்தமாக மூட்டை மூட்டையாக வாங்கி சென்றுள்ளேன். நீ புதிதாக வந்ததால் உனக்கு அதைப்பற்றி தெரியாது. எனக்கு பொருட்கள் வழங்காவிட்டால் நீ இங்கே வேலை பார்க்கமுடியாது என மிரட்டியுள்ளார். மேனகா கெஞ்சியும் அவர் கேட்காமல் மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மனம் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.
    • போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் நேரு என்பவர் பழனி தலைமை தபால் அலுவலகம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி வந்தார்.

    பின்னர் திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்குளிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மனம் வேதனையடைந்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் பழனி தபால் அலுவலகம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சங்கு பூக்கள் பல்புகள் தொங்க விட்டது போல் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் சங்கு பூக்கள் பூத்து காணப்படு கிறது.
    • வாகனத்தில் செல்பவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதனை ஒட்டிய மலைக்கி ராமங்களில் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றவாறு விதவிதமான பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம்.

    அதன்படி தற்போது கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லா வெளி, கே.சி.பட்டி போன்ற பகுதியில் அதிகமானோர் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வும் அவரவர் தோட்டம் எல்லைகளில் வேலிக்காக சங்கு பூ செடிகளை நடவு செய்துள்ளனர். அதே போல் மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் உள்ள தோட்டங்களில் தார் சாலை ஓரங்களில் வேலி க்காக நடவு செய்துள்ளனர்.

    இந்த சங்கு பூ செடிகளில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இப்பகுதிகளில் சாலை ஓரங்களில் பல்புகள் தொங்க விட்டது போல் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் சங்கு பூக்கள் பூத்து காணப்படு கிறது. இந்த பூ காலையில் மலர்ந்து மாலையில் உதிர்கிறது. இந்தப்பூக்களை வாகனத்தில் செல்பவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    • செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது.
    • நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகள், கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500 முதல் ரூ.10000 வரை விற்பனையானது.

    இதேபோல் நாட்டு கோழி மற்றும் சேவல்களும் அதிகளவில் விற்பனையானது. வழக்கமான வியாபாரத்தை விட சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தங்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைத்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.
    • விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் காபி, மிளகு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி யானை கூட்டம் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேடி இடம்பெயரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. பன்றிமலை அருகே அழகுமலை பகுதியில் கடந்த 4 நாட்களாக யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    ஆனால் இரவு நேரத்தில் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே யானைகள் நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள் இன்று காய்கறிகள் வேண்டாம் என கூறி விட்டனர்.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மைதானம் போல் வெறிச்சோடி கிடந்தது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் தென் தமிழகத்தி லேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக உள்ளது. இங்கு ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து அதிக அளவு காய்கறிகள் விற்ப னைக்கு கொண்டு வரப்படு கிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 சதவீத காய்கறி தேவைகளை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்து வருகிறது. இதற்காக தினந்தோறும் 100 முதல் 120 லாரிகள் மூலம் கேரளாவுக்கு காய்கறிகள் செல்கின்றன. நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பெரும்பாலான வியாபாரிகள் இன்று காய்கறிகள் வேண்டாம் என கூறி விட்டனர்.

    இதனால் கடந்த 2 நாட்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிக அளவு காய்கறிகள் கேரளாவுக்கு சென்றன. இன்று கேரள வியாபாரிகள் யாரும் வராததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் விவசாயிகளிடமும் ஏற்கனவே தெரிவித்து விட்டதால் அவர்களும் காய்கறிகளை கொண்டு வரவில்லை. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் மைதானம் போல் வெறிச்சோடி கிடந்தது.

    ஒரு நாளைக்கு ரூ.2 கோடி வர்த்தகம் நடைபெறும் மார்க்கெட்டில் அது முற்றிலும் குறைந்ததால் லோடு மேன்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்படை ந்தனர். நாளையும் இதே நிலை தொடரும் என்றும் சனிக்கிழமை மார்க்கெட் இயங்காது என்பதாலும் அடுத்த 3 நாட்களும் காய்கறிகள் விற்பனை நடை பெறாது என்றும் வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.

    • நீண்ட நேரம் போக்கு காட்டிய காட்டெருமைகள் அங்கும் இங்கும் உலா வந்தது.
    • காட்டு மாடுகள் புகுவதை வனத்துறையினர் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் பகுதியில் அடிக்கடி காட்டு மாடுகள் கூட்டமாக உலா வருவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. கொடைக்கானல் பஸ் நிலையம், 7 ரோடு பகுதி, அண்ணாசாலை, பெர்ன் ஹில் ரோடு மட்டுமல்லாமல் நகரின் முக்கிய சாலைகளிலும் பல நேரங்களில் கூட்டம் கூட்டமாக காட்டு மாடுகள் உலா வரும். இதை கண்டு சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் அச்சமடைந்து அலறியடித்து ஓடும் காட்சிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் இன்று பரபரப்பான காலை நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் மூஞ்சிக்கல் பகுதி கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் கூட்டமாக வந்தது. இதன் காரணமாக காலை நேரத்தில் அன்றாட பணிகளுக்கு செல்வோர், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகனங்களில் பயணித்தோர் என பல்வேறு தரப்பினர் சாலையை கடந்து செல்வதில் அச்சத்தில் உறைந்தனர்.

    நீண்ட நேரம் போக்கு காட்டிய காட்டெருமைகள் அங்கும் இங்கும் உலா வந்தது. அரை மணி நேரத்திற்கு மேலாக போக்கு காட்டிய காட்டெருமைகளை நீண்ட நேரம் கழித்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் இல்லாத பகுதிக்கு விரட்டிச் சென்றனர். கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் நேரத்தில் இதுபோல் முக்கிய இடங்களில் காட்டு மாடுகள் புகுவதை வனத்துறையினர் கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பெரும்பாலான கடல் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட இந்த கலப்பின சூரிய கிரகணம் ஒரு சில தரைத்தளங்களிலும் தென்பட்டது.
    • சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்த நூற்றாண்டுகளில் முதன்முறையாக நிகழ்ந்த முழு சூரிய கிரகணம் என்ற "கலப்பின" சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.27 மணிக்கு தொடங்கி நிகழ்ந்தது.

    வானில் பல அரிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சூரிய கிரகணமும் ஒரு அரிய நிகழ்வாகும். இதிலும் அரிய நிகழ்வாக பார்க்கக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி காலை 7.27க்கு ஆரம்பமானது. இதனுடைய உச்சபட்ச நிலையை 8:50க்கு பார்க்க முடிந்தது. மேலும் சூரிய கிரகணம் மொத்தமாக 3 வகைகளாக உள்ளது.

    பகுதி, முழு நேரம், வருடாந்திரம் நடக்கக்கூடிய சூரிய கிரகணங்கள் இதில் அடங்கும். குறிப்பாக இன்று 3 வகையான கிரகணங்களும் ஒன்றிணைந்ததால் இதனை கலப்பின சூரிய கிரகணம் என்று அழைப்பதுண்டு. மேலும் இதுபோன்ற கலப்பின சூரிய கிரகணம் நூற்றாண்டுகளில் ஒரு சில வருடங்கள் மட்டுமே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த நூற்றாண்டின் முதன்முறையாக கலப்பின சூரிய கிரகணம் இன்று தென்பட்டது.

    குறிப்பாக பெரும்பாலான கடல் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட இந்த கலப்பின சூரிய கிரகணம் ஒரு சில தரைத்தளங்களிலும் தென்பட்டது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் தெளிவாக தென்பட்டது. மேலும் இந்த சூரிய கிரகணங்களால் பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதே போன்று அடுத்து வரக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டு தான் நிகழும் என்று கூறப்படுகிறது.

    பெரும்பாலும் ஆஸ்திரேலியா நாட்டில் தென்படுவதால் ஆஸ்திரேலியாவில் உள்ள நீங்கலோ கடலின் பெயரை இந்த சூரிய கிரகணத்திற்கு பெயர் வைத்துள்ளது. இதற்காக இந்த சூரிய கிரகணம் நீங்கலோ என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கு மேல் அதிக அளவில் மாணவர்கள் வந்து இதில் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல் வான் இயற்பியல் தலைமை விஞ்ஞானி டாக்டர். எபினேசர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • சம்பவத்தன்று நத்தம் வந்த வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொண்டார்.
    • வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நத்தம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் முருகானந்தம்(18). இவர் நத்தம் அசோக்நகரை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவர்கள் செல்போனில் பேசி வந்துள்ளனர். சம்பவத்தன்று நத்தம் வந்த முருகானந்தம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் முருகானந்தம் கடத்தியது தெரியவரவே அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார்.
    • 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர்.

    பழனி:

    பழனி அண்ணாநகரை சேர்ந்தவர் உதயகுமார்(55). இவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சென்னையில் டாக்டருக்கு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகளை பார்க்க ரேவதி சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் உதயகுமார் மட்டும் தனியாக இருந்த நிலையில் மர்மநபர்கள் ஜன்னல் கம்பியை அறுத்து வீட்டிற்குள் புகுந்தனர்.

    பின்னர் உதயகுமாரை கத்தியால் குத்தி பீரோவில் இருந்த 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். படுகாயமடைந்த உதயகுமார் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்க ப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடி த்தது பழனி பெரிய கடை வீதியை சேர்ந்த ராஜாராம் மகன் சரவணக்குமார்(41) என தெரியவந்தது. இவர் அமரப்பூண்டியில் கோழிப்பண்ணையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் உதயகுமார் வீட்டில் 10 நாட்கள் டிரைவராக வேலை பார்த்து ள்ளார். அப்போது டாக்டர் வீட்டில் நகை, பணம் அதிகளவில் இருப்பதை உறுதி செய்தார். இதனால் இவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டில் புகுந்து தனது திட்டத்தை நிறை வேற்றினார். அதன்பின்னர் கோழிப்பண்ணைக்கு வந்து கூட்டாளிகளுக்கு சேர வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு தனது பங்கை எடுத்துக்கொ ண்டார்.

    கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை உருக்கி பிஸ்கட்டாக மாற்றினார். அவரிடமிருந்து 34 பவுன் தங்ககட்டி, வெள்ளி குத்துவிளக்கு என 5 கிலோ வெள்ளிபொருட்கள், தங்கபொருட்களை உருக்க பயன்படுத்திய எந்திரம், கார், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். இக்கொள்ளை வழக்கில் தொர்புடைய சரவண க்குமாரின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

    • நாளை மறுதினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்ததால் விற்பனை களைகட்டியது
    • 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500-க்கு விலைபோனது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந் ேதாறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை 10 மணிவரை நடைபெறும். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் நாளே சந்தையில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆடு, நாட்டுகோழிகள் உள்பட அதற்கு ேதவையான தீவனங்களும் விற்பனை செய்யப்படும். நாளை மறுதினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்ததால் விற்பனை களைகட்டியது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500-க்கு விலைபோனது.

    செம்மறி ஆடு ரூ.10000 வரையிலும், நாட்டுகோழி ரூ.360 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை யானது. மேலும் கட்டு ச்சேவல்கள் வாங்குவதற்கும் ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். தரமான கட்டுசேவல்களை சந்தையில் சண்டையிட்டு வாங்கிச்சென்றனர். கட்டுசேவல் சண்டைக்கு தடைவிதித்திருந்த போதிலும் பல்வேறு கிராமங்களில் இன்னும் இந்த போட்டி மறைமுகமாக நடைபெற்று வருகிறது.

    தற்போது கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடந்து வருவதால் விழாக்க ளில் சேவல் சண்டையும் நடத்தப்பட்டு வருகிறது. சந்தை தனியார் மூலம் நடைபெறுவதால் பல்வேறு அடிப்படை வசதிகள் குறைபாடாக உள்ளது எனவும், பேரூராட்சி நிர்வாகமே நடத்தவேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அய்யலூர் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகளும், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர்

    ×