என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது.
    • மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, கே.சி.பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் சுழன்று வீசி வருகிறது. நேற்று மாலை தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் காற்றுடன் மழை பெய்தது.

    பெரும்பாறை அருகே வத்தலக்குண்டு- தாண்டிக்குடி மலைபாதையில் உள்ள தீனிக்கோடு- இந்திராநகர் இடையே இன்று காலை சுமார் 4.30 மணி அளவில் தனியார் தோட்டத்தில் இலவம் பஞ்சு மரம் தார் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது.

    மேலும் மின் கம்பி அறுந்து விழுந்ததால் தீனிக்கோடு, இந்திராநகர், கானல்காடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீஸ் ஏட்டு செந்தில்குமார் விரைந்து சென்று அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து தொடங்கியது. மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • திரவியம் நகர் அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுமித்ரா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
    • அவர் சத்தம் போட்டபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி மனைவி சுமித்ரா (வயது 32). இவர் தனது உறவினர் ரமேஷ் என்பவருடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு பட்டா மாறுதலுக்கு மனு அளிக்க வந்தார். பின்னர் அவர்கள் அணைப்பட்டி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தனர்.

    திரவியம் நகர் அருகே பின்னால் மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சுமித்ரா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். அவர் சத்தம் போட்டபோதும் கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கொடைரோடு:

    சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ஜெகன்நாதன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்களுடன் காரில் மதுரை, திருச்செந்தூருக்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சேலத்துக்கு காரில் புறப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஜெகன்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காருக்குள் சிக்கிக் கொண்ட அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணம் செய்த சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), மற்றொரு கார்த்திக் (31), முருகேசன் (30), கார் டிரைவர் மகேந்திரன் (39) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இரவு நேரத்தில் 4 வழிச்சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்காக லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் 88 சதவீதமாகவும், மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்கள் உயர் கல்வி கற்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.
    • தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய மாநாடு நடைபெற்றது.மாநா ட்டில் சிக்கலான மற்றும் சவாலான பிரசவங்கள் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றது. தேசிய அளவிலான மாநா ட்டிற்கு கூட்டமைப்பின் தலைவர் ரிஷிகேஷ் தலைமை தாங்கினார்.

    மாநாட்டின் அமைப்பு தலைவர் டாக்டர் ஜோதி சுந்தரம் வரவேற்றார். தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் சம்பத்குமார், பொதுச் செயலாளர் டாக்டர் மாதுரி படேல் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    தேசிய மாநாட்டை தமிழ்நாடு தகவல் தொழி ல்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது-

    வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் பெண்களின் முன்னே ற்றத்திற்கும் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க ப்பட்டு வருகிறது. ஒரு பெண் கல்வி கற்கவில்லை என்றால் அனைத்தும் வீண். நாடு முன்னேற்ற பாதையில் செல்லாது. ஆனால் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்கும் பெண்களின் சதவீதம் 88 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்கள் உயர் கல்வி கற்பதில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது.

    தற்போது மருத்துவ துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் மருத்துவத்துறை தொழில்நு ட்பத்தில் சிறந்து விளங்கி வருகிறது.

    ரோபோடிக் அறுவை சிகிச்சை முறைகளும் எளிமையாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில் பங்குபெற்ற டாக்டர்கள் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வெளியிட்டனர். டாக்டர் கல்பனா நன்றி கூறினார்.

    • நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது
    • வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    நத்தம்:

    நத்தத்தில் லாண்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளை லாண்டீஸ் பள்ளியின் தாளாளர் நிக்சன்லாண்டீஸ் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார அளவில் இருந்து 33 அணிகள் கலந்து கொண்டன. முடிவில் 14 வயதிற்குட்பட்டோருக் கான போட்டியில் துரைக்கமலம் மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியும், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் கொசவபட்டி புனித செயின்ட் ஜோசப் பள்ளியும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.

    தொடர்ந்து வெற்றி பெற்று தகுதி அடைந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர்கள் சோலமலை, சுரேஷ், ஜோதிமுருகன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

    • போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.
    • லாஸ்காட் ரோடு பகுதியில் உள்ள கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மூஞ்சிக்கல் பகுதி வரையிலும் மாணவிகள் பேரணியாக சென்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நகர் பகுதியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வருவாய் வட்டாட்சியர் முத்துராமன், கொடைக்கானல் கோட்டக்கலால் வட்டாட்சியர் சந்தையில் மற்றும் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    லாஸ்காட் ரோடு பகுதியில் உள்ள கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மூஞ்சிக்கல் பகுதி வரையிலும் மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித ஜான்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொடைக்கானல் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி பேரணி மேற்கொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அம்மனுக்கு பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
    • மூலவர் 1008 மங்கல வளையல் அலங்காரத்தில் உற்சவரும் சாந்த சுரூபிணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    நத்தம்:

    நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால்,இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ , செவ்வந்திப்பூ , தாழம்பூ , வாடாமல்லி, ஜாதிமல்லி மலர்கள் கொண்டு மேலும் மங்கல வளையல் மாலை அணிந்தும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. மூலவர் 1008 மங்கல வளையல் அலங்காரத்தில் உற்சவரும் சாந்த சுரூபிணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதேப்போலவே மீனாட்சிபுரம் காளியம்மன் கோவில் அசோக் நகர் பகவதி அம்மன், கர்ணன் தெரு ஸ்ரீ மதுர காளியம்மன் அம்மன், ராக்காயி அம்மன் தில்லை காளியம்மன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகர்பகுதியில் உள்ள பழக்கடைகள், மளிகைகடை மற்றும் சாக்லேட் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர்.
    • குறிஞ்சிநகர், எம்.எம்.தெரு, லாஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பைகள் இருந்ததையொட்டி, சுமார் 16 கிலோ பிளாஸ்டிக் ெபொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கலைவாணி அறிவுறுத்தலின் பே ரில் உணவு பாதுகாப்பு த்துறை அதிகாரிகள் நகர்பகுதியில் உள்ள பழக்கடைகள், மளிகைகடை மற்றும் சாக்லேட் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர்.

    குறிஞ்சிநகர், எம்.எம்.தெரு, லாஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் பைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனைதொடர்ந்து சுமார் 16 கிலோ பிளாஸ்டிக் ெபொருட்களை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலா ரூ.2000 என 3 கடைக்கும் ரூ.6000 அபராதம் விதிக்க ப்பட்டது. இந்த ஆய்வுப்பணி தொடர்ந்து நடைபெறும். தடைசெய்ய ப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பாதுகாப்பு அலுவ லர் லாரன்ஸ் எச்சரித்து ள்ளார்.

    • கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நத்தம்:

    செந்துறை அருகே பெரியூர்பட்டியில் உள்ள பூமாரியம்மன் கோவிலில் 48 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் நடந்தது. நேற்று 48வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது.

    முன்னதாக பூமாரியம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மண்டல பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், செந்துறை ஊராட்சி தலைவர் சபரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெ ட்டிற்கு அம்பிளிக்கை, அரசபிள்ளைபட்டி, கேதையரும்பு, கீரனூர், சாமியார்புதூர், காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து முருங்கை, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக இந்த கிராமங்க ளில் செடி முருங்கை அதிக அளவு விளைவிக்கப்படு கிறது.

    விளைச்சல் அதிகரித்து ள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே 1 கிலோ ரூ.12க்கு விற்பனையாகிறது. இதனால் முருங்கை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தாங்கள் உற்பத்தி செய்த செலவு கூட கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்து ள்ளனர்.

    முருங்கைக்காயை பறித்து எடுக்க நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.400 கூலி கொடுக்க வேண்டியு ள்ளது. விதை, உரம், உழவு, நடவு கூலி, செடிகளுக்கு மருந்து, வண்டி வாடகை, கமிசன் போன்ற பல்வேறு செலவுகளை சமாளித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே முருங்கைக்கு நிரந்தர விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம் வரை 1 கிலோ தக்காளி ரூ.100 மற்றும் அதற்கும் மேல் விற்பனையானது. வரத்து குறைவால் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை குறைந்து வருகிறது. 14 கிலோ கொண்ட 1 பெட்டி ரூ.700க்கு விற்பனையாகிறது. 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை கொள்முதல் செய்யப்படு கிறது. தற்போது தக்காளி செடிகளில் பூக்கள் பூத்துள்ள சமயத்தில் மழை பெய்து ள்ளதால் விலை மீண்டும் அதிகரிக்கும் என விவ சாயிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதத்தை ஒப்பிடும் போது தக்காளி விலை குறைந்து வருவதால் இது மேலும் விலை குறையும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆவணி மாதம் முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் தேவையும் கூடும். அந்த சமயத்தில் பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்து வருவது விவசாயிகளை வருத்த மடைய வைத்துள்ளது.

    • வீட்டில் தனியாக இருந்த மாணவர் பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
    • மயங்கிய வாலிபரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே குண்டாம்பட்டி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களது மகன் சுதர்சன் சக்திவேல் (வயது18). தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த சுதர்சன், பாத்ரூமில் உள்ள சுவிட்ச் அழுத்திய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர்.

    அங்கு மயங்கி கிடந்த இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரி சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதனை அடுத்து பிரேத பரி சோதனை க்காக சுதர்சன் உடல் மருத்துவ மனையில் வைக்க ப்பட்டு ள்ளது. இச்சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு கடைக்கு வெளியில் இருந்த 3 உப்பு மூடைகளை மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்சென்றனர்.
    • தொடர் திருட்டு நடைபெறுவதால் போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் ரெயில்நிலையம் செல்லும் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் அன்பு. தினமும் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். கடையில் உள்ள சில பொருட்களை வெளியில் வைத்துவிட்டு சென்றுவிடு வார். அதன்படி நேற்று முன்தினம் இரவு கடைக்கு வெளியில் இருந்த 3 உப்பு மூடைகளை மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து எடுத்துச்சென்றனர்.

    மறுநாள் காலையில் வந்த கடை உரிமையாளர் உப்புமூடை திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காமிராக்கள் பதிவை கொண்டு சோதனை நடத்தியதில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் உப்பு மூடைகளை திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு ள்ளனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்களே பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மளிகைகடையில் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையிலும் இதுவரை யாரும் பிடிபடவில்லை. வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் இரவு நேர கொள்ளை சம்பவங்களால் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். பெரும்பாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதில்லை என்பதால் அவர்களும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.

    எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×